நாளை கடமைக்கு வராவிட்டால் வேலை இழப்பு: ஹம்பாந்தோட்டை முறைமுக ஊழியர்களுக்கு எச்சரிக்கை
ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு முன்னர் சேவைக்கு சமூகமளிக்காவிடின், தொழிலை இழந்தவர்களாகக் கருதப்படுவர் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு இன்று நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. துறைமுக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்குமாறு அறிவித்துள்ள ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம், இன்று எட்டாவது நாளாகவும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு ஏழு நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை பொலிஸார் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் நீதிமன்றத்தினால் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு தடை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகத்தினுள் பிரவேசிக்கும் எந்தவொரு கப்பலுக்கும் இடையூறு விளைவிக்கக் கூடாது எனவும், உடைமைகளுக்கு சேதம் ஏற்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர். அத்துடன், அவர்களிடமிருந்த தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான உபகரணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை உதவி தொழில் ஆணையாளர் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை சந்தித்தார். பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, துறைமுகத்திற்கு வந்த கப்பல்களுக்கு கடற்படையே துறைமுக சேவைகளை வழங்கியது. பொலிஸார் , விசேட அதிரடிப்படையினர் மற்றும் துறைமுக பாதுகாப்பு சேவை ஊழியர்கள் இன்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்:-06




