செய்திகள்

அழுவதற்கு மறந்த அலப்போ குழந்தைகள்

த இன்டிபென்டன்ட்

அலப்போ மோதலில் சிக்கிய குழந்தைகள் அதிர்ச்சி காரணமாக அழுவதையே மறந்துவிட்டன. அலப்போவிலிருந்து தற்போது வெளியேறியுள்ள 8000 அலப்போ பிரஜைகளில் 2500 ற்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்கின்றது ஐநா.

எனினும் இன்னமும் பலர் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். சனல் 4 நியுஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் அயா என்ற பெண்குழந்தை ஸ்டிரெச்சரில் காணப்படுகின்றது அந்த குழந்தையின் முகத்தில் புழுதியும், குருதி உறைந்த அடையாளங்களும் காணப்படுகின்றன.

அந்த குழந்தையிருக்கும் அறையில் ஓரே குழப்பமாக காணப்படுகின்றது.  எனினும் அந்த குழந்தை அழவில்லை,
அந்த சிறுமியின் தாய் உம் பாத்திமா ,விமானக்குண்டுவீச்சில் அந்த குடும்பத்தில் உயிர் தப்பியவர்களில் ஓருவர், அவர் ரஸ்ய விமானக்குண்டுவீச்சில் தங்கள் மாடிக்கட்டிடம் முற்றாக தரைமட்டமாகியதாக தெரிவிக்கின்றார். உம் பாத்திமாவின் அயலவரான பதின்ம வயது மஹ்மூட தனது வீடு தரைமட்டமானவேளை அதில் சிக்கி மரணித்த தனது ஓன்றரைவயது சகோதரனின் உடலுடன் காணப்படுகின்றார்.

ஓடுக்குமுறையில்( அசாத்) ஈடுபட்டுள்ள நபரை ஆண்டவன் தண்டிப்பான் என்கிறார் அவர்.

வேறு இரு குழந்தைகள் மருத்துவமனையில் நடமாடித்திரிவதை காணமுடிகின்றது.அவர்கள் இருவரின் முகத்திலும் புழுதியை காணமுடிகின்றது. அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர், அவர்கள் தங்கள் தாயை தேடுகின்றனர். மருத்து தாதியொருவர் அங்குள்ளவர்களிடம் இது உங்கள் குழந்தைகளா என கேட்பதை அவதானிக்க முடிகின்றது.