இராணுவத்தினர் பாரிய காணிகளை வனங்களில் கையேற்று இருப்பதால் எமது வனங்கள் பாதிப்படைந்து வருகின்றன வடமாகாண முதலமைச்சர்
இராணுவத்தினர் பாரிய காணிகளை வனங்களில் கையேற்று இருப்பதால் எமது வனங்கள் பாதிப்படைந்து வருகின்றன. வனங்களின் நடுவில் பல இடங்களில் காடழிக்கப்பட்டுள்ளதாக கூகிள் படங்கள் காட்டுகின்றன. எமது வளங்கள் பல தெற்கிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. எம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றி நாம் அறியாமல் நிரோ பிடில் வாசித்தது போல் நாம் தொடர்ந்து வாழ்ந்து வருவது பொருத்தமற்றது. எனவே எங்கள் நாளாந்த குறைகள், தேவைகள் பற்றி இங்கு ஆராயும் போது மேல்வாரியான மாகாண மாவட்ட விடயங்களிலும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட 4வது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
கிளி. மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 24.12.2016 அன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்,
இது இவ்வருடத்தின் கடைசி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம். ஓரிரு விடயங்களை இங்கு கூறி வைத்தால் நன்மை பயக்கும் என்று நம்புகின்றேன். வெகு விரைவில் பல மாற்றங்களை எதிர் நோக்கியுள்ளோம். அரசியல் யாப்பொன்று புதிதாகத் தரப்படுமா அல்லது திருத்திய யாப்பொன்று எமக்குக் கிடைக்குமா என்பதில் சற்று மயக்க நிலை காணப்படுகின்றது. என்றாலும் ஏதோ சில விடயங்களில் வரும் வருடத்தில் சில முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்படுவன என்று எதிர்பார்க்கலாம். முக்கியமாக எமக்குள் காணப்படும் மத்தி மாகாண அலுவலர்கள் உறவுகளில் முன்னேற்றம் காணப்படும் என்று நம்புகின்றேன். சிலர் சுயநன்மைக்களுக்காகவே இந்த வித்தியாசங்களைக் கூர்மைப்படுத்த விழைகின்றார்கள். உண்மையில் நாம் யாவரும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்காகவே எமது கடமைகளில் ஈடுபட்டுள்ளோம் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தோமானால் மத்தியின் கீழான அலுவர்கள் மாகாணத்தின் அலுவலர்கள் என்ற வேறுபாடுகளுக்கே இடம் இல்லாது போய்விடும். எனவே வரும் வருடத்தில் எங்கள் யாவரிடையேயும் கூடிய ஒரு நல்லெண்ணத்தையும் ஒருங்கிணைப்பையும் ஒற்றுமையையும் காண முனைவோமாக!
மத்திய அரசாங்கத்துடன் நாங்களும் நெருங்கி எமது கடமைகளில் ஈடுபட்டு வருகின்றோம். இரு முக்கிய கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஒன்று வடமாகாண தேவைகள் சம்பந்தமான கணிப்பை பந்நாட்டு நிறுவனங்களின் உதவியுடன் செய்ய அரசாங்கம் முன்வந்துள்ளது. அது தற்போது திரு.பாஸ்கரலிங்கம் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் நடைபெற்று வருகின்றது. பூர்வாங்க வேலைகள் உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்றிட்டம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பங்குபற்றலுடன் எம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அடுத்து பொருளாதார அபிவிருத்திக்கான குழு திரு.சரித்த ரத்வத்தையின் தலைமைத்துவத்தின் கீழ் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. முக்கியமான அலுவலர்களின் ஒன்றுகூடல் இதுவரை நடந்துள்ளன.
அடுத்த மாதம் 27ந் திகதியன்று பிரதம மந்திரியுடன் சர்வதேச வர்த்தகம் மற்றும் திறமுறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம வடமாகாணத்திற்கு விஜயம் செய்ய இருக்கின்றார்கள். அப்போது எமக்கான பொருளாதார தேவைகள் பற்றி ஆராய இருக்கின்றார்கள். நாங்கள் ஒவ்வொரு மாவட்டத்தையும் பொறுத்த வரை பொருத்தமான செயல்திட்டங்களை உருவாக்கி கைவசம் வைத்திருப்பது நன்மை பயக்கும் என்று நம்புகின்றேன்.
கொள்கை ரீதியாக நாங்கள் சில விடயங்களை மனதில் வைத்திருப்பது நன்மை தரும். பாரிய செயற்திட்டங்களால் பல மக்கள் பயனடைவர் என்ற தத்துவத்தை மாற்றி சிறு மத்திய கைத்தொழில்கள் பலவற்றை உருவாக்குவதால் எமது சுற்றுச் சூழலைப் பாதுகாக்க முடியும், தேவையற்ற அன்னிய அல்லது வெளிமாகாண உள்ளீடல்களைக் குறைக்க முடியும், மக்கள் பெருவாரியாக வந்து தங்கி எமது பாரம்பரிய இடங்களை இடநெருக்கடிகளுக்கு உள்ளாக்குவதை குறைக்க முடியும், நீர்ப்பாவனை, மின்சாரம், வடிகால், கழிவகற்றல் போன்றவற்றைத் திறமையுடன் நிர்வகிக்க முடியும் என்று நம்புகின்றேன். எனவே அடுத்த மாதம் பிரதம மந்திரியுடனும் கௌரவ அமைச்சர் மலிக் அவர்களுடனும் நாம் பேசும் போது ஒரு ஒற்றுமையான ஒருங்கிணைந்த குரலில் நாங்கள் எமது எண்ணங்களை உச்சரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
திரு.சரித்த இரத்வத்தையின் குழு சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி பற்றியும் எமது வளங்கள் பற்றியும் ஆராயும். அதற்கமைவாக எமது மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் நாங்கள் அடையாளம் காணும் பாரம்பரிய தொல்பொருட் புரையிடங்கள், இயற்கை எழில்மிக்க இடங்கள், சமய வணக்கஸ்தலங்கள், வைத்தியத்துடன் சம்பந்தப்பட்ட இடங்கள் எனப் பலவற்றை அடையாளம் காணவேண்டும். இங்கும் எமக்கென ஒரு சுற்றுலா கலாசாரத்தையும், மேம்பாட்டு முறைமைகளையும் நாம் அடையாளம் கண்டு நிர்வகிக்க முன்வர வேண்டும். முன்னரே திட்டமிடாமல் வளர விட்டதால் ஹிக்கடுவ, உணவற்றுன போன்ற இடங்கள் பாரிய சமூகச் சீர்கேடுகளையும் சுற்றுச் சூழல் பாதிப்புக்களையும் எதிர் நோக்குவதாக அறியக் கிடக்கின்றது. எம்முடைய நீர்வளங்கள், நிலவளங்கள், சீதோஷ்ண நிலைமை போன்ற பலவற்றையும் மனதில் கொண்டே சுற்றுலாவின் அபிவிருத்தி அணுகப்பட வேண்டும். அத்துடன் எமது பாரம்பரியங்களையும், கலை கலாச்சார விழுமியங்களையும் மறவாது செயல்ப்பட முன்வர வேண்டும்.
கடைசியாக ஒரு விடயம். எமது நிலங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சுண்டிக்குளத்தில் மத்திய அரசாங்கத்தின் உள்ளீடுகள் எமது சுற்றுச் சூழலுக்கு அனுசரணையாக இல்லை என்ற கருத்து எம்மிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறவைகள் பாதுகாப்பரணாக இருக்க வேண்டிய இடங்களில் பல கட்டிடங்கள் கட்டப்பட்டு அந்த இடங்களின் அமைதி குறைக்கப்பட்டுவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அங்கு போய்ப்பார்க்க இன்னமும் எனக்கு நேரம் கிடைக்கவில்லை. ஆனால் இவை பற்றி மத்தியுடன் கலந்தாலோசிக்க வேண்டும். கௌரவ திருமதி விஜயகலா அவர்களும் கௌரவ திரு.அங்கஜன் அவர்களும் எமக்குக் கட்டாயமாக ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று நான் நம்புகின்றேன்.
இராணுவத்தினர் பாரிய காணிகளை வனங்களில் கையேற்று இருப்பதால் எமது வனங்கள் பாதிப்படைந்து வருகின்றன. வனங்களின் நடுவில் பல இடங்களில் காடழிக்கப்பட்டுள்ளதாக கூகிள் படங்கள் காட்டுகின்றன. எமது வளங்கள் பல தெற்கிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. எம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றி நாம் அறியாமல் நிரோ பிடில் வாசித்தது போல் நாம் தொடர்ந்து வாழ்ந்து வருவது பொருத்தமற்றது. எனவே எங்கள் நாளாந்த குறைகள், தேவைகள் பற்றி இங்கு ஆராயும் போது மேல்வாரியான மாகாண மாவட்ட விடயங்களிலும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டு எனது சிற்றுரையை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.
N5




