செய்திகள்

பிரதமரின் செயற்பாடு ஜனநாயகத்திற்கு உட்பட்ட சர்வதிகாரத்தனமான போக்காக தோன்றுகிறது! சுரேஸ் பிறேமச்சந்திரன் காட்டம்

ஒருநேரத்தில் அதிகார பகிர்வு பற்றி பேசக் கூடிய பிரதம மந்திரி, அதேநேரத்தில் அதிகாரங்களை எல்லாவற்றையும் ஒரு அமைச்சுக்குள் கொண்டு வந்து அதை தன்வசம் வைத்திருக்க யோசித்திருப்பது என்பது ஒரு ஜனநாயகத்திற்கு உட்பட்ட சர்வதிகாரத்தனமாக போக்காக தோன்றுகிறதே தவிர உண்மையாகவே அதிகாரங்களை பகிர அவர் விரும்புகிறாரா என்ற பாரிய கேள்வியை அது ஏற்படுத்துகிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈபிபிஆர்எல் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (24.12) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்நதும் அங்கு தெரிவித்தாவது,

ஜெயலலிதாவுக்கு எதிராக சில விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் இருந்தது. சிறைக்கு கூட சென்று வந்திருந்தார். ஆனால் தமிழக மக்கள் அவற்றை எல்லாம் கருத்தில் எடுக்கவில்லை. தமது பிரதிநிதியாக ஜெயலலிதாவை தெரிவு செய்தார்கள். தனியொரு கடசியாக நின்று தமிழகத் தேர்தல் தொகுதிகளில மட்டுமன்றி டெல்லி பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தார். ஜெயலலிதா விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துக்களை குறிப்பிட்டவர் என்ற விமர்சனம் உள்ளது. ஆனால் ஜெயலலிதா தமிழ்மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என தமிழக சட்ட சபையில் சட்டஉறுப்பினர்களை இணைத்து தீர்மானாங்களை நிறைவேற்றினார். ஆனால் இந்திய அரசு அதனை கருத்தில் எடுக்கவில்லை. தமிழக சட்டசபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தது. அதனை ஜ.நாசபைக்கும் சர்வதேசத்திற்கு துணிச்சலுடன் எடுத்து கூறியவர் . பிரதமர் மோடியுடன், பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் சந்தித்து தமிழர்களின் உரிமை தொடர்பாக உரையாடியவர். ஜெயலலிதா அரசியல் வாழ்கையில் இவ்வளவு விரைவாக இறந்து விட்டார். தமிழகத்திலும் இங்கும் இருக்கின்ற சில அரசியல் தலைவர்களின் வயதுகளுடன் பார்க்கின்ற போது அவர் இன்னும் இருந்திருக்க வேண்டும். அவர் உயிருடன் இருந்திருந்தால் ஈழத்தமிழருக்கு உற்சாகம் கொடுக்கும் சக்தியாக இன்னும் சேவையாற்றிருக்கலாம்.

இலங்கையைப் பொறுத்தவரை இங்கு இருக்கின்ற நிறைவேற்று அதிகார முறையை நீக்குவது, தேர்தல் முறையை மாற்றுவது, தேசிய இனப்பிரச்சனையை தீர்ப்பது என்று வருகின்ற போது தமிழ் மக்களிடம் நாம் வாக்கு கேட்டு வந்த போது நான் உட்பட பல விடயங்களை மேடைக்கு மேடை கூறினோம். தமிழ் மக்களின் மொழி வாரி மாநிலமாக வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும். 1987 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு ஒன்றாக இணைக்கப்பட்டது. மஹிந்தாவின் ஆட்சி காரணமாக அவர்களது முயற்சியால் அது பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட வடக்கும், கிழக்கும் மீண்டும் இணைக்கப்பட்டு ஒரு மாநிலமாக இருக்க வேண்டும். அந்த வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது எந்தவொரு நிரந்தரமான அரசியல் தீர்வுக்கான ஒரு அம்சமாக இருக்க வேண்டும். இதையே இரா.சம்மந்தன் அவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தியது.

அதுமட்டுமல்லாமால் தமிழ்மக்களது இறைமையாண்மை, சுயநிர்ணய உரிமை என்பன அங்கீகரிகிகப்பட வேண்டும். அதனடிப்படையில் ஒரு சமஸ்டி அரசியல் முறை இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் தான் மக்கள் வாக்களித்தார்கள். இன்று ஒரு அரசியல் சாசனசபை உருவாக்கபடபட்டுள்ளது. இவை தொடர்பாக பேசப்படுகிறது. உண்மையில் என்ன பேசப்படுகின்றது என்பது பட்டதெம்பாக தெரியவில்லை. ஆனாலும் கூட ஊடகங்கள் வாயிலாக சில விடயங்களை அறிகிறோம். யாழ்பாணத்திற்கு வந்திருந்த சுமந்திரன் அவர்கள் வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது தற்போது சாத்தியமில்லை எனக் கூறியிருந்தார். சுமந்திரன் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினது பேச்சாளராகவுள்ளார். சம்மந்தன் அவர்கள் என்ன முடிவுகளை எடுக்கிறாரோ அதனை ஊடகங்களுக்கு சொல்பவராக இருக்கிறார். ஆவே அவருடைய கருத்து என்பது நிச்சயமாக சம்மந்தனது கருத்து. இதை எவ்வளவு தூரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டார்கள், ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெரியாவிட்டாலும் கூட அங்கு அவர் சொன்னார் வட-கிழக்கு என்பது இப்போது இணைக்க முடியாது. ஆகவே எங்களது அடிப்படைக் கோரிக்கையான தமிழ் மக்களது தாயகமான வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டம் அதை முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு சொல்லிவிட்டது. மிகுதியாக இருப்பது ஒரு சமஸ்டி முறையை உருவாக்குவது. என்ன அடிப்படையில் அதனை உருவாக்க போகிறோம். தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கிறது, இறையாண்மை இருக்கிறது. அதனை ஏற்றுக் கொண்டு ஒரு சமஸ்டி ஆட்சிமுறையை உருவாக்க வேண்டும்.

இந்த நாட்டில் ஒற்றையாட்சி தான் இருக்கும். ஒற்றையாட்சிக்குள் தான் எந்த தீர்வையும் பெறமுடியும். சமஸ்டி என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை என்று ஜனாதிபதி, பிரதம மந்திரி இன்னும் பல அமைச்சர்கள் தெளிவாக கூறிவிட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் இவை nதொடர்பில் அரசியல் சாசன சபையில் சம்மந்தனோ அல்லது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமந்திரனோ எதுவும் பேசவில்லை என்பதை அந்த 21 பேர் கொண்ட குழுவில் இருக்கக் கூடியவர்கள் பத்திரிகையுடன் பேசும் போது குறிப்பிட்டுள்ளார்கள்.

அரசாங்க பிரதிநிதிகளின் கருத்து மற்றும் ஊடக செய்திகளின் படி இவர்கள் எதையும் பேசவில்லை. ஆகவே எவ்வாறான ஒரு தீர்வை நோக்கி நாங்கள் போகக் போகிறோம். செல்வி ஜெயலலிதா இருந்த போது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வாக்கெடுப்பை நடத்தி தீர்வை வழங்க வேண்டும் என கூறினார்கள். ஆனால் எம்மை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் இருக்கக் கூடிய தலைவர்கள் என்று கூறக் கூடியவர்கள் எங்களுக்கு கொடுத்த வாக்குகள், உறுதிமொழிகள் என்பன தொடர்பாக பேசினார்களா என்பது கூட ஒரு கேள்வியாக இன்று மாறியிருக்கிறது. ஒரு சில தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் எதனையும் விட்டுக் கொடுக்க மாட்டோம் எனக் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை. அண்மையில் பத்திரிகைச் செய்திகளில் நாங்கள் வடக்கு, கிழக்கு இணைப்பை விட்டுக் கொடுக்க மாட்டோம், சமஸ்டியை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தார்கள். ஆனால் சிலர் கூறியிருந்தாலும் கூட நிதர்சனமான உண்மை அவ்வாறு இல்லை என்பது தான். ஆகவே நாங்கள் தொடர்ந்து அடுத்த கட்டம் என்ன செய்யப் போகின்றோம் என்ற கேள்வி எழுகின்றது. அரசாங்கம் பௌத்திற்கு முதலிடம் கொடுக்கிறது. இதனால் தான் வடக்கிலும், கிழக்கிலும், இராணுவமும் பிக்குகளும் தாங்கள் விரும்பியவாறு புத்தர் கோவில்களை அமைக்கிறார்கள். அரசாங்கம் பௌத்தத்திற்கு முதன்மை ஸ்தானத்தை கொடுத்து அதனை போற்றி பாதுகாக்கிறது. வடகிழக்கில் பௌத்தர்கள் மிக மிக சொற்பமாக இருந்தாலும் இந்துக்கள், முஸ்லிம்கள் அதிகமாக இருந்தாலும் வட கிழக்கில் கூட பௌத்திற்கு முதலிடம் என்று சொல்கின்ற போது அவர்கள் விரும்பிய இடங்களில் புத்தர்விகாரைகளை கட்டவும், சிலைகள் வைக்கவும் அது வழிவகுகின்றது.

வரவிருக்கின்ற இந்த அரசியல் சாசனத்திலும் கூட பௌத்திற்கு தான் முதலிடம் என்பதும் சமஸ்டி என்பது இல்லை என்பதும் ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்பதும் கூறப்படுகிறது. அந்த தீர்வு எவ்வாறு இருக்கப் போகிறது என்றால், இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அந்த 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. அங்கு சில சில விடயங்கள் பிடித்து வைக்கப்பட்டிருந்தது. முக்கியமாக ஓரளவுக்கான பொலிஸ் அதிகாரம் கொடுப்பது பற்றி யோசிக்கிறார்கள். அதேபோல் அரைகுறையான காணி அதிகாரம் கொடுப்பதைப் பற்றி இப்போது யோசிக்கிறார்கள். ஆளுனருக்கு இருக்கும் அதிகாரங்களை கொஞ்சம் குறைத்துக் கொள்வது தொடர்பாக கொஞ்சம் யோசிக்கிறார்கள். இவ்வாறான விடயங்களை தான் ஐக்கிய தேசியக் கட்சியிலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலும் இருகக் கூடிய அமைச்சர்கள் கூறுகிறார்கள். இவற்றுக்கு மேல் போகமுடியாது. இவற்றுக்குள் நீங்கள் நின்று கொள்ள வேண்டும். சமஸ்டி என்று தேவையில்லாத பேச்சுக்களை பேசக் கூடாது என்ற தோரணையில் தான் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களின் கருத்துக்கள் இருக்கிறது.

தற்போது ஒட்டுமொத்த இலங்கையின் அபிவிருத்தியை நோக்காக கொண்டு ஒரு அமைச்சை உருவாக்க பார்கிறார்கள். அது செயற்படுமாக இருந்தால் மாகாணசபையின் தேவை என்ன…? ஏற்கனவே தென்பகுதியில் உள்ள சில மாகாண சபைகள் அதை நிராகரித்துள்ளன. வடமாகாண சபையும் அதனை நிராகரித்துள்ளது. பிரதம மந்திரி ஒரு பக்கம் அதிகார பகிர்வு பற்றி பேசிக் கொண்டு, அரசியலமைப்பு சீர்திருத்தம், அதிகார பகிர்வு எனக் கூறுதுடன், அதேசமயம் எல்லா அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டு வருவதற்காக ஒரு சுப்பர் மினிஸ்றி ஒன்றை பற்றியும் பேசுகிறார். உண்மையாகவும், நேர்மையாகவும், உறுதியாகவும் ஒரு அதிகார பகிர்வில் இந்த பிரதம மந்திரி நம்பிக்கை கொண்டிருக்கிறாரா என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

ஒருநேரத்தில் அதிகார பகிர்வு பற்றி பேசக் கூடிய இந்த பிரதம மந்திரி, அதேநேரத்தில் அதிகாரங்களை எல்லாவற்றையும் ஒரு அமைச்சுக்குள் கொண்டு வந்து அதை தன்வசம் வைத்திருக்க யோசித்திருப்பது என்பது ஒரு ஜனநாயகத்திற்கு உட்பட்ட சர்வதிகாரத்தனமாக போக்காக தோன்றுகிறதே தவிர உண்மையாகவே அதிகாரங்களை பகிர அவர் விரும்புகிறாரா என்ற பாரிய கேள்வியை அது ஏற்படுத்துகிறது.

ஜனாதிபதி நேர்மையானமவர், அவர்கள் செய்வார்கள், நல்லவர், வல்லவர், குழப்ப வேண்டாம், நாங்கள் நம்புகிழன்றோம் என்றெல்லாம் அவர்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. ஆனால் நீங்கள் பல்வேறு பட்ட விடயஙகளையும் எடுத்துப் பார்த்தால் குறிப்பாக ஐ.நா சபைக்கு இந்த அரசாங்கம் ஒரு உறுதிமொழியைக் கொடுத்தது. ஒரு விசாரணை கமிசனை நாங்கள் உருவாக்குவோம். அந்த விசாரணை கமிசனில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறுவார்கள். சர்வதேச சட்டத்தரணிகள் இடம்பெறுவார்கள். என்றெல்லாம் மனிதவுரிமை பேரவையில் உறுதிமொழி கொடுத்தார்கள். இவர்களும் இணைந்து ஒரு தீர்மானத்தை உருவாக்கினார்கள். இன்று சர்வதேச நீதிபதிபகளையோ, சட்டத்தரணிகளையோ உள்வாங்க முடியாது என்கிறார்கள். அதுமட்டுமல்ல ஒரு விசாரணை பொறிமுறை அமைக்கப்படுமா என்பதே கேள்விக்குறியாவுள்ளது.

வட, கிழக்கில் 67 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலாக பல மடங்கு காணிகளை இராணுவம் வைத்திருக்கிறது. இந்த அரசாங்கம் சொல்கிறது 4000 ஏக்கர் காணியை விடுவித்து இருக்கிறோம். சம்பூரில் ஒரு 1200 ஏக்கர், வலிகாமத்தில் ஒரு சிறியளவிலான காணி விடுவிக்கப்பட்டுள்ளது. மிகுதிக்காணிகள் விடுவிக்கப்டவில்லை என்பது தான் ஜயாதார்த்மான உண்மை. ஜனாதிபதி பதவிக்கு வந்து இரண்டு வருடம். அரசாங்கம் மாறி ஒரு வருடம் முடிந்து விட்டது. ஆனால் இதுவரை மக்கள் முழுமையாக மீள்குடியேற முடியவில்லை.

ஆனாலும் கூட நடந்து முடிந்த வரவு செலவு திட்டத்திற்கு எனது கட்சி உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். நாங்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தோம். தமிழரசுக் கட்சி மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்படக் கூடியவர்கள் என பெரும்பானமையானவர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற சம்மந்தனது தீர்மனத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதாவது பாதுகாப்பு அமைச்சுக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டதையும் ஏற்றுக் கொண்டார்கள். ஏனென்றால் நாங்கள் அதனை எதிர்த்தால் இந்த அரசியல் சாசனமாற்றம், தீர்வுத்திட்டங்கள் செய்ய முடியாமல் போய்விடுமாம். நாங்கள் எங்களது நல்லெண்ணத்தை காட்டுகிறோம் என்கிறார்கள். ஒருபக்கத்தில் இராணுவம் வெளியேற வேண்டும் என்கிறோம். மறுபுறம் அந்த இராணுவம் இருப்பதற்காக பாதுகாப்பு பட்ஜெட்டுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். நாங்கள் எங்கே நிற்கிறோம் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். ஆகவே நடைபெற்றுக் கொண்டிருப்பவை எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாக சரியான பாதையில் சென்றிகொண்டிருப்பவையாக இருக்கவில்லை. எதிர்வரும் ஜனவரி மாதம் 8, 9, 10 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக ஒரு விவாதம் நடைபெற இருக்கிறது. அந்த விவாதம் எங்கு கொண்டு போய் என்ன மாதிரியான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஒரு பாரிய யுத்தத்திற்குள் தள்ளப்பட்டு மீண்டு வந்திருக்கின்ற மக்களை மேலும் மேலும் அடக்கி ஆழக்கூடிய நிலைக்கு தள்ளுகின்ற போக்கை காணக்கூடியதாகவுள்ளது. இனவிகிதாசரத்தை குழப்புவது, திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுவது என்பவற்றில் முன்னைய மஹிந்த ராஜபக்ச அராசாங்கத்திற்கோ தற்போதைய அரசாங்கத்திற்கோ எவ்விதமான வித்தியாசங்களும் கிடையாது. எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரே விதமான சிந்தனையில் தான் செயற்படுகிறார்கள். இவை எல்லாவற்றையும் பார்கின்ற போது அரசாங்கம் தங்களுடைய திட்டங்களிலும், தங்களுடைய நடவடிக்கைகளிலும், கொள்கையிலும் சாரியாக இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் எவ்வாறு செயற்படுகிறோம். நாங்ள்க இந்த அரசாங்கத்தை பாதுகாக்கிறோம். வெளிநாடுகளுக்கு செல்கின்ற போதும், உள்நாட்டிலும், பல தூதுவர்களுடன் பேசுகின்ற போதும் இந்த அரசாங்கம் பல விடயங்களை செய்திருக்கிறது என கூறுகின்றோம். இந்த ஆட்சி மாற்றம் தமிழ் மக்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறது என கூறுகின்றோம். ஆனால் ஒரே ஒரு விடயம் தான் நடந்திருக்கிறது. வெள்ளை வான் பயம் இல்லாமல் பேச முடிகிறது. மஹிந்தா காலத்திலும் நாங்கள் வீதியில் இறங்கி போராடினோம். தறபோதும் அதை தான் தொடர்கிறோம். இந்த நிலமை தொடருமாக இருந்தால் தமிழ் மக்களின் இருப்பு என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கப் போகிறது. இந்த இறுதி நேரத்தில் சம்மந்தன் எவ்வாறு தொரு முடிவை எடுக்கப் போகிறார். இலங்கை அரசாங்கம் எம்மை ஏமாற்றிவிட்டது என்று கூறப்போகிறாரா அல்லது இவறைறையாவது எடுப்போம் என 13இற்குள் நிற்கப் போகிறாரா என்பதை அவர் தான தமிழ் மக்களுக்கு கூற வேண்டும் எனத் தெரிவித்தார்.

N5