55 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபைக்கு 9 முதலமைச்சர்களும் நியமிக்கப்படுவார்கள்?
புதிய அரசியலமைப்பின் மூலமாக உருவாக்கப்படவுள்ள 55 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையில் ஒன்பது மாகாணங்களின் முதலமைச்சர்களையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. ஜனவரி 5,6 ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கும் அரசியலமைப்பு வழிநடத்தும் குழுவின் கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படலாம் என வழிநடத்தல் குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக ஆராயும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை ஜனவரி 9 ஆம் திகதி காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வழிநடத்தல் குழு எதிர்வரும் 5,6 ஆம் திகதிகளில் கூடி இது தொடர்பில் ஆராயவுள்ளது. இந்த இரு தினங்களிலும் இடைக்கால அறிக்கை இறுதியாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இரு தினங்களுக்கு முன்னர் சந்தித்து இது தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன், சீர்திருத்த முயற்சிகளில் மேலும் தாமதம் ஏற்படக்கூடாது என்பதில் இணங்கியிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது. இந்த நிலையில் ஜனவரி 9 ஆம் திகதி இடைக்கால அறிக்கை முன்வைக்கப்படும் அதேவேளையில், அடுத்த இரு தினங்களிலும் அது தொடர்பான விவாதம் இடம்பெறவிருக்கின்றது.
புதிய அரசியலமைப்பின்படி இரண்டாவது சபையாக செனட் சபை உருவாக்கப்படவிருக்கின்றது. 55 உறுப்பினர்களைக்கொண்ட இந்தச் சபைக்கு 45 உறுப்பினர்கள் மாகாண மட்டத்தில் நியமிக்கப்படுவார்கள். ஒன்பது மாகாணங்களிலிருந்தும் தலா 5 மாகாண சபை உறுப்பினர்களைக் கொண்டதாக 45 உறுப்பினர்கள் செனட் சபைக்கு நியமிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட மாகாணங்களின் பிரதிநிதிகளாக இவர்கள் செயற்படுவார்கள்.
இதில் முதலமைச்சரையும் ஒரு உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டு இப்போது ஆராயப்பட்டுவருகின்றது. செனட் சபைக்குச் செல்லும் மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சரின் கருத்துக்களைப் பிரதிபலிக்கத் தவறினாலும் என்பதாலேயே முதலமைச்சரையும் செனட் சபைக்கு உள்வாங்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனைவிட மேலும் 10 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தினால் நியமிக்கப்படுவார்கள். அரசியல் சாராத சமூகத்தின் முக்கியமானவர்களையும், கல்வித்துறை சார்ந்தவர்களையும் இவ்வாறு நியமிக்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. வழிநடத்தல் குழுவிலுள்ளவர்களில் பெரும்பாலான உறுப்பினர்கள் இதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
மாகாண சபைகளின் அமைச்சர்களின் எண்ணிக்கையை ஏழாக அதிகரிப்பதற்கும் தீர்◌ானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மாகாண அமைச்சர்களாக நால்வர் மட்டுமே உள்ளனர்.:-06




