அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கு அரசாங்கம், ராஜபக் ஷவிடம் கோரும் ஆதரவு
வீரகத்தி தனபாலசிங்கம்
முன்னாள் ஜனாதிபதி கூட்டு எதிரணியின் தலைவர்களூடாக தனது நிலைப்பாடுகளை சூட்சுமமான முறையில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அரசியலமைப்பு வரைவுச் செயன் முறைகள் இறுதியில் ஒப்பேறாமல் போய்விடக்கூடிய அரசியல் சூழ்நிலை உருவாகுவதற்கான அறிகுறிகள் இப்போது தாராளமாகத் தென்படத் தொடங்கியிருக்கின்றன. தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் ஐக்கிய தேசியக் கட்சி முகாம் புதியதொரு அரசியலமைப்பை வரைந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றி நாட்டு மக்களின் அங்கீகாரத்தையும் பெறுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு போவது தொடர்பாக பேசிக்கொண்டிருக்கின்ற அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முகாம் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய அவசியத்தை தவிர்க்கக்கூடியதாக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் தற்போதைய அரசியலமைப்புக்கு முக்கியமான திருத்தங்களைக் கொண்டு வருவது குறித்து அடிக்கடி கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. 2015 இரு தேசியத் தேர்தல்களிலும் நாட்டு மக்களுக்கு அளிக்கப்பட்ட பிரதான வாக்குறுதியான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் இரு முகாம்களுக்குள்ளும் ஒருமித்த கருத்து இப்போது இல்லை என்பது வெளிப்படையானது. இரு பிரதான அரசியல் கட்சிகளும் சேர்ந்து அமைந்திருக்கும் தேசிய ஐக்கிய அரசாங்கம் நாட்டை அழுத்துகின்ற முக்கியமான நெருக்கடிகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பை வழங்கியிருப்பதாகச் செய்யப்பட்ட வர்ணனைகள் எல்லாம் அர்த்தமற்றவையாகப் போய்க் கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்துகொண்டு முக்கியமான பிரச்சினைகளில் கருத்தொருமித்த அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக, பழைய கட்சி அரசியலையே வேறு ஒரு பாணியில் முன்னெடுத்துக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஒன்று சேர்ந்து அரசாங்கத்தை அமைத்துக் கொண்டு பங்காளிக் கட்சிகள் ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படுவது எவ்வாறு என்பதற்கு இன்றைய அரசாங்கம் ஒரு வகை மாதிரியானதாக விளங்குகிறது என்றும் கூறலாம். ஆட்சி முறையின் எந்தவொரு செயற்பாடுமே முரண்பாடற்றதாக இல்லாத துரதிர்ஷ்டவசமானதொரு நிலைமையே இன்று ஏற்பட்டிருக்கிறது. தேசிய ஐக்கிய அரசாங்கம் எவ்வளவு காலத்துக்குத் தாக்குப்பிடிக்குமோ என்ற கேள்வி மக்கள் மனதில் எழ ஆரம்பித்து விட்டது.

இதனிடையே, கடந்த வருடம் இரு தேர்தல்களிலும் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ நாட்டு அரசியலின் திசைமார்க்கத்தையும் எதிர்கால நிகழ்வுப் போக்குகளையும் தீர்மானிக்கக் கூடிய அளவுக்கு வலுவானதொரு சக்தியாக மீண்டும் மாறுவதற்கான களத்தை இன்றைய அரசாங்கத்தின் அணுகுமுறைகளும் செயற்பாடுகளும் அமைத்துக் கொடுத்துக்கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
தற்போது முன்னெடுக்கப்படுகின்ற அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறைகளுக்கு ராஜபக் ஷவின் ஆதரவை அரசாங்கத் தலைவர்கள் நாடி நிற்கிறார்கள். இம்மாதம் முதலாம் திகதி பாராளுமன்றத்தில் 2017 வரவு–செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன, தவறான பிரசாரங்களை முன்னெடுப்பதன் மூலமாக அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளையும் இன நல்லிணக்கச் செயற்பாடுகளையும் சீர்குலைக்க வேண்டாமென்று முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான கூட்டு எதிரணியினரிடம் வேண்டுகோள் விடுத்தார். தேசியப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு தற்போது கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்பை அதிகாரத்துக்காக குறுகிய நோக்குடன் சண்டைப்பிடிப்பதன் மூலமாக தவறவிடுவோமேயானால், நாட்டில் மீண்டும் மோதலும் இரத்தக்களரியுமே ஏற்படும் என்று எச்சரிக்கை செய்த ஜனாதிபதி, நியாயமானதும் ஒப்புரவானதுமான தீர்வொன்றைக் காணபதற்கு உதவக்கூடிய தமிழ்த் தலைவராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விளங்குகிறார் என்றும் அவரிடமிருந்து கிடைக்கின்றதைப் போன்ற ஒத்துழைப்பு வடக்கு, கிழக்கு அரசியல் தலைமைத்துவத்திடமிருந்து எல்லாக் காலத்திலும் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது என்றும் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றையும் உள்ளடக்கியதாக புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கான முயற்சிகளை ராஜபக் ஷவும் அவரது அரசியல் நேசசக்திகளும் சீர்குலைக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய ஜனாதிபதி குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்களை தவறாக வழி நடத்துபவர்களை போலித் தேச பக்தர்கள் என்றும் சாடினார்.
அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறைகளுக்கு கூட்டு எதிரணியினரிடம் ஆதரவு கோரி ஜனாதிபதி சிறிசேன சபையில் விடுத்த வேண்டுகோளுக்கு ராஜபக் ஷவின் பிரதிபலிப்பு எத்தகையதாக இருக்குமென்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, மூன்று நாள் கழித்து (டிசம்பர் 4) அவர் நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டார்.
அரசியலமைப்புச் சபையினால் நியமிக்கப்பட்ட 6 உபகுழுக்களும் அரசியலமைப்புச் சீர்திருத்தத்துடன் சம்பந்தப்பட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து தயாரித்து கையளித்த அறிக்கைகள் தொடர்பிலான விமர்சனமாகவே ராஜபக் ஷவின் அந்த அறிக்கை அமைந்திருந்தது. குறிப்பாக, மத்திய அரசாங்கத்துக்கும் பிராந்தியங்களுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பாக ஆராய்ந்த (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான) உப குழு அதிகாரப் பரவலாக்கம் குறித்து முன்வைத்திருந்த யோசனைகளே முன்னாள் ஜனாதிபதியின் கடுமையான கண்டனத்துக்குள்ளாகியிருந்தன. அந்த யோசனைகளில் இருக்கக்கூடிய தவறுகள் எவை, அவற்றில் எவற்றை மாற்றியமைக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் மக்களுக்கு விளக்கமளிப்பதைத் தவிர்த்து அப்பட்டமாக சிங்கள தேசியவாத நிலைப்பாடுகளை நியாயப்படுத்துபவையாகவே ராஜபக் ஷவின் வாதங்கள் அமைந்திருந்தன. தனது ஆட்சேபனைக்குரியவை என்று பத்து முக்கிய அம்சங்களை அவர் அடையாளப்படுத்தியிருந்தார். அவற்றில் பத்தாவது அம்சம் இலங்கையில் அரசகரும மொழிகளாக சிங்களமும் தமிழும் இப்போது இருப்பதையே அறியாதவர் போன்று அவர் கருத்துக்களை வெளியிட்டதை அம்பலப்படுத்தியது. இலங்கையின் முக்கியமான அரசியல் விஞ்ஞான பேராசிரியர்களில் ஒருவரான கலாநிதி லக்சிறி பெர்ணான்டோ முன்னாள் ஜனாதிபதியின் இந்த அறிக்கை தொடர்பாக ‘அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் மகிந்த ராஜபக் ஷவின் வஞ்சக அறிக்கை’ என்ற தலைப்பில் வெளியிட்ட விமர்சனத்தில் ‘அறிக்கையை பெரும்பாலும் ராஜபக் ஷவுக்காக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தான் எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. 2005 ஆம் ஆண்டிலும் 2010 ஆம் ஆண்டிலுமாக இருதடவைகள் நாட்டு மக்களினால் ஜனாதிபதியாகத்தெரிவு செய்யப்பட்ட ஒருவரினால் வெளியிடப்படுவதற்குரிய தகுதியில்லாத அறிக்கை’ இது’ என்று குறிப்பிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

மாகாண சபைகளை அமைப்பதற்காக 28 வருடங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரப் பரவலாக்க ஏற்பாடுகளுக்கும் அப்பால் சென்று (13+) இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணத் தயாராயிருப்பதாக ஆட்சியதிகாரத்தில் இருந்தபோது சர்வதேச சமூகத்துக்கு கூறியவர் ராஜபக் ஷ. இப்போது வெளியிட்ட இந்த அறிக்கை 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்வதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு முயற்சியையும் அவர் ஆதரிக்கப் போவதில்லை என்பதை மாத்திரமல்ல, அந்தத் திருத்தத்தில் இப்போது இருக்கக்கூடிய அதிகாரங்களையும் கூட குறைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்துபவையாகவும் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
இவ்வாறாக, தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக அமையக்கூடிய எந்தவொரு அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடுகளையும் உள்ளடக்கிய அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகள் தொடர்பில் தனது நிலைப்பாட்டை ராஜபக் ஷ வெளிக்காட்டியதற்கு பின்னர் தான் பிரதமர் விக்கிரமசிங்கவும் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் அவரை சில தினங்களுக்கு முன்னர் சந்தித்துப்பேசினர். ஜனாதிபதி சிறிசேன கேட்டுக் கொண்டதற்கமைவாகவே இருவரும் முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்தனர். பாராளுமன்றத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் ராஜபக் ஷ என்ன கூறினார் என்பது பற்றி தகவல்கள் இல்லை என்ற போதிலும், அவரின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகள் தொடரவேண்டும் என்று சம்பந்தன் கருத்துத் தெரிவித்திருந்தார். தற்போதைய அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறைகளில் பங்கேற்பதற்கு ராஜபக் ஷவுக்கு எந்த சிக்கலும் இருக்கக்கூடாது என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரின் கருத்தாக இருக்கிறது. சந்திப்புக்குப் பிறகு பிரதமரிடமிருந்து பெரிதாக பிரதிபலிப்பு எதுவும் வரவில்லை.
இது இவ்வாறிருக்க, ராஜபக் ஷ விசுவாசிகளின் கூட்டு எதிரணியின் முக்கிய தலைவர்களான முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் பீரிஸும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவும் நான்கு தினங்களுக்கு முன்னர் அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் தொடர்பில் அரசாங்கத்துக்கு நிபந்தனைகளை முன்வைத்தனர். பேச்சுவார்த்தைக்கோ பேரம் பேசலுக்கோ இடமின்றியவை என்று அவர்கள் வர்ணித்த அந்த நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே கூட்டு எதிரணியினரால் அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளில் இனிமேல் பங்கேற்கக்கூடியதாக இருக்கும் என்று பிரகடனம் செய்தனர்.
அரசின் ஒற்றையாட்சித் தன்மை, பெளத்த மதத்துக்கு விசேட அந்தஸ்து, வடக்கு மாகாணத்துடன் கிழக்கு மாகாண இணைப்பு இல்லை, பொலிஸ் அதிகாரங்கள் பரவலாக்கப்படக்கூடாது, நாட்டின் எந்தப் பகுதியிலும் காணிகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசாங்கத்துக்கு அதிகாரமளிக்கும் ஏற்பாடு, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் உள்ள பொதுப்பட்டியல் தொடர்ந்தும் இருக்க வேண்டும், பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பிலான விவகாரங்களில் எந்தவொரு மாகாணத்திலும் மத்திய அரசாங்கம் தலையிடுவதற்கான உரிமை என்பவை கூட்டு எதிரணியின் அந்த நிபந்தனைகளில் முக்கியமானவை.
அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பில் யோசனைகளை முன்வைக்குமாறு மற்றைய கட்சிகளை கேட்பதற்கு முன்னதாக அரசாங்கம் அதன் யோசனைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் பேராசிரியர் பீரிஸ் செய்தியாளர் மாநாட்டில் வலியுறுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கம் அக்கறை காட்டுகின்ற வேளையில், அவர் தனது நிலைப்பாடுகளை முன்னைய தனது அறிக்கை மூலமாகவும் கூட்டு எதிரணியினரின் நிபந்தனைகள் மூலமாகவும் சூட்சுமமான முறையில் விளம்பரப்படுத்தியிருந்தார். இந்த நிலைப்பாடுகள் தேசிய பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு முயற்சியையும் ராஜபக் ஷ ஒருபோதும் ஆதரிக்க முன்வரப் போவதில்லை என்பதை தெளிவாக உணர்த்துகின்றன. புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் ஆரம்பிக்கப்பட்ட தொடக்க தருணத்தில் அமைதியாக இருந்த ராஜபக் ஷ இப்போது அரசாங்கத்தின் அந்த முயற்சிகள் வெற்றியளிக்காதிருப்பதை உறுதி செய்யக்கூடிய தந்திரோபாயங்களைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரின் ஆதரவைப் பெறுவதற்காக அரசாங்கம் அதன் நிலைப்பாடுகளைத் தளர்த்துவதாக இருந்தால் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களினால் எந்த வித பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை.

epa04907823 Sri Lanka?s 8th Parliament in its maiden session at Sri Jayewardenepura Kotte in Colombo, Sri Lanka, 01 September 2015. The maiden session of Parliament began following the General Elections held on 17 August where the United National Party won a majority number of seats, though not an absolute majority. The party is to form a National Government with the main opposition Sri Lanka Freedom Party of which President Maithripala Sirisena is the chairman. EPA/M.A.PUSHPA KUMARA
அரசாங்கத்தினால் முன்வைக்கப்படக் கூடிய அரசியலமைப்பு வரைவில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் உள்ளடக்கப்படக்கூடிய அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடுகள் எத்தகையனவாக இருக்கும் என்பதை தெரிந்துகொண்ட பின்னர் அவற்றை அடிப்படையாக வைத்து சிங்கள மக்கள் மத்தியில் தீவிரமான பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு ராஜபக் ஷ காத்துக்கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
அவரிடம் ஆதரவை எதிர்பார்த்து அரசாங்கத் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்த உத்தேசிப்பது அவரின் நிலைப்பாடுகளுக்கு நியாயப்பாட்டைத் தேடிக் கொடுப்பதாக மாத்திரமே அமையும்.




