செய்திகள்

புது அரசியலமைப்பை உருவாக்கிவிட்டு அவசியமானால் பிரிந்து செல்வோம்: மனோ கணேசன்

நாம் இந்த தேசிய அரசை உருவாக்கியது, தேங்காய் திருவ அல்ல. அரசியலில் விளையாடவும் அல்ல. இந்த நாட்டில் புரையோடி போயுள்ள தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கவே தேசிய அரசை உருவாக்கினோம் என்பதை டிலான் பெரேரா, எஸ்.பி. திசாநாயக்க போன்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் மனதில் கொள்ள வேண்டும். புதிய அரசியலமைப்பை உருவாக்கிவிட்டு, அதன் பிறகு அவசியமானால், நாம் வெவ்வேறு திசைகளில் விலகி செல்வோம். முடியுமானால், அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அரசை அமைக்கட்டும். ஐக்கிய தேசிய கட்சிகாரர்கள் தங்கள் தலைமையிலான அரசை அமைக்கட்டும். தமிழ் முற்போக்கு கூட்டணி உரிய முடிவை அப்போது எடுக்கும். அல்லது புதிய பொது தேர்தலுக்கே செல்வோம். நாம் எதற்கும் தயார். ஆனால் இப்போது தேசிய அரசு நீடிக்க வேண்டும். அதை உடைத்து மஹிந்தவுக்கு உதவிசெய்து டீல் டிலான் ஆக வேண்டாம் என நண்பர் டிலான் பெரேராவை கேட்டுக்கொள்கிறேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஊடக மாநாடு இன்று, மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது. கூட்டணியின் பிரதி தலைவர் அமைச்சர் பழனி திகம்பரத்துடன் ஊடகவியலாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

பசில் ராஜபக்சவுடன் ஐதேகவுக்கு டீல் இருப்பதாக அமைச்சர் டிலான் சொல்லி வருகிறார். ஆனால், பார்க்கப்போனால் அவருக்கு தான் அங்கே டீல் இருக்கிறதோ என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது. அவர்தான் டீல் டிலானோ என்று கேட்க விரும்புகிறேன். டிலான் பொதுவாக சிறுபான்மை மக்கள் தொடர்பில் அக்கறை உள்ளவராக தன்னை காட்டிக்கொள்கிறார். அது நல்லது. இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வைக்கூட அவர் வலியுறுத்தியுள்ளார். அதுவும் நல்லது. ஆனால், நடைமுறையில் புதிய அரசியலமைப்பு வரும்வரைக்கும் கூட இந்த இந்த அரசை விட்டு வைக்க அவர் தயார் இல்லை. இப்போது இருக்கின்ற இந்த அரசும் போய் விட்டால், இனி எந்த அரசாலும் தீர்வு ஒன்றை கொண்டு வரமுடியுமா? அதனால்தான், நாம் இந்த அரசை காப்பாற்ற விளைகிறோம்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட ஐக்கிய தேசிய முன்னணிக்கே பாராளுமன்றத்தில் ஆசனம் அதிகம். ஆகவே அவர்களுக்குதான் தனியாக ஆட்சியை அமைக்க வாய்ப்புகள் அதிகம். ஆனாலும், நாம் அதை இப்போது விரும்பவில்லை என்பதை பொறுப்புடன் கூறி வைக்க விரும்புகிறோம். ஏனெனில் இந்த இரண்டு கட்சிகளும் ஒற்றாக இருந்தால்தான் அரசியல் சித்து விளையாட்டுகள் நின்று புதிய அரசியலமைப்பு வர வாய்ப்பு ஏற்படும். ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் எஸ்.பி. திசாநாயக்க, டிலான் பெரேரா போன்றோர் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும். இன்றைய உங்கள் கட்சி தலைவரை நாம்தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஆக்கியுள்ளோம். 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி நாம் இந்த புரட்சியை ஏற்படுத்திய போது நீங்கள் வேலியின் அந்த பக்கத்தில் இருந்தீர்கள். இப்போது உள்ளே வந்து திடீர் பாசத்தை ஜனாதிபதியின் மீது பொழிகிறீர்கள். இதை மறந்துவிட வேண்டாம்.:-06