செய்திகள்

மாகாண சபைகளில் தோற்றாலும் அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் : என்கிறது ஐ.தே.க

அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மாகாண சபைகளில் தோற்கடிக்கப்பட்டாலும் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த சட்ட வரைபு மாகாண சபைகளில் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“குறித்த சட்டமூலமானது ‘சுப்பர் அமைச்சர்’ ஒருவரை உருவாக்காது. ஆனால் முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு இலகுவான சூழ்நிலையொன்றை ஏற்படுத்திக் கொடுக்கும். மஹாவலி திட்டம், கல் ஓயா திட்டம் மற்றும் கொழும்பு பெரும்பாக பொருளாதார ஆணைக்குழு ஆகிய திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இதுபோன்ற சட்டமூலம் கொண்டுவரப்பட்டிருந்தது. நாட்டில் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தமது ஒத்துழைப்பை வழங்க மாகாண சபைகள் விரும்பவில்லையாயின். மத்திய அரசாங்கம் நேரடியாக இதனை அமுல்படுத்தும்” என அவர் தெரிவித்துள்ளார். -(3)