செய்திகள்

யாழ்.தற்காலிக சுகாதார பணியாளர்களை நிரந்தரமாக்கும் விடயத்தில் பிரச்சினைகள் இல்லை

யாழ்.மாநகரசபை தற்காலிக சுகாதார பணியாளர்களை நிரந்தரமாக்கும் விடயத்தில் பிரச்சினைகள் எதுவும் இல்லை என மாகாணசபை உறுப்பினரும், உள்ளூராட்சி அமைச்சு விடயங்களை கையாளும் அங்கீகாரமளிக்கப்பட்ட உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகரசபையில் தற்காலிக சுகாதார பணியாளர்களாக கடமையாற்றும் ஊழியர்கள் 197 பேர் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி கடந்த மாதம் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில் உள்ளூராட்சி அமைச்சும், அந்த அமைச்சுசார் விடயங்களை கையாளும் அங்கீகாரம் அளிக்கப்பட்ட உறுப்பினரான சிவாஜிலிங்கமும் சுகாதார பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் கேட்டு குறித்த போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.

இதேவேளை, அவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் விடயம் என்ன நிலையில் உள்ளது? என வினவியபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

வர்த்தக நிலையங்களின் கழிவுகள் மற்றும் விலங்கு கழிவுகளை அகற்றும் பணி தனியாருக்கு வழங்கப்படுவதிலும் பிரச்சினை எதுவும் இல்லை.

197 தற்காலிக ஊழியர்களில் 39 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதேபோல் மற்றையவர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.

குறிப்பாக மேற்படி ஊழியர்கள் 10 நாட்கள் தொடர்ச்சியான வேலை நிறுத்தம் மேற்கொண்ட காலத்திற்கான சம்பளம் வெட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 20ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையான நாட்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெட்டப்பட்ட சம்பளத்தை கடனடிப்படையில் வழங்கவேண்டும் என நான், முதலமைச்சர் மற்றும் மாநகரசபை ஆணையாளருடன் பேசியிருக்கின்றேன். அது தொடர்பான ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

வர்த்தக நிலையங்களின் கழிவுகளை அகற்றுவதற்கும், விலங்கு கழிவுகளை அகற்றுவதற்கும் தனியார் துறையிடம் இருந்து கேள்வி கோரல் விடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நான் மாநகரசபை ஆணையாளர் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேசியிருக்கின்றேன்.

இதன்போது ஆணையாளர் தனியார் துறையிடம் கொடுக்கப்படுவதனால் மாநகரசபை ஊழியர்கள் குறைக்கப்படமாட்டார்கள் அவர்களுக்கு பாதிப்புக்கள் இல்லை.

தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் இ ந்த விடயம் தொடர்பாக மாறுபட்டக் கருத்து உள்ளது.

ஆனால் நான் விடயத்தை சரியாக அவர்களுக்கு கூறியிருக்கின்றேன். அதாவது தனியார்த்துறையிடம் கொடுப்பதனால் எந்த பாதிப்பும் இல்லை.

எனவே இந்த விடயம் தொடர்பாக ஊழியர்களுக்கு பாதிப்பில்லாமல் தீர்வு காணப்படும். அதேவேளை மாநகரசபைக்குள் வேறுவேலைகளுக்கும் பணியாளர்கள் இல்லாமையினால் வெற்றிடங்கள் உள்ளது.

வெற்றிடங்களுக்கு அவர்களை இணைத்து கொண்டு நிரந்தர நியமனத்தை வழங்குவது தொடர்பாக பேசுகிறோம்.

மேலும் தை மாதம் பிற்பகுதியில் முதலமைச்சர், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் மாநகரசபை அதிகாரிகளுடன் நடக்கும் கலந்துரையாடலில் நல்ல முடிவுகள் எட்டப்படும் என மாகாணசபை உறுப்பினரும், உள்ளூராட்சி அமைச்சு விடயங்களை கையாளும் அங்கீகாரமளிக்கப்பட்ட உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

N5