25 ஐ.தே.க. எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் அவசரச் சந்திப்பு: தேசிய அரசை பாதுகாக்க கோரிக்கை
தேசிய அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்கு தான் இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது குறித்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களை இன்று முதலாம் திகதி சந்தித்துப்பேசவுள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த சில தினங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் அவர் சந்திப்பார். ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி இவ்வுறுதி மொழியை வழங்கியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் 25 பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு அவரது வாஸஸ்தலத்தில் சந்தித்துப் பேசியுள்ளார்கள். தேசிய அரசாங்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் நெருக்கடி தொடர்பாகவே இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஐ.தே.க. வட்டாரங்களிலிருந்து தெரியவந்திருக்கின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டதற்கு ஏற்பவே ஐ.தே.க.வின் இளம் எம்.பி.க்கள் ஜனாதிபதியைச் சந்தித்ததாகத் தெரியவந்திருக்கின்றது.
தேசிய அரசாங்கத்தை உடைக்கும் வகையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிலர் அண்மைக்காலமாக கருத்துவெளியிட்டு வருவதையிட்டு இந்தச் சந்திப்பின்போது தமது கவலையைத் தெரிவித்த ஐ.தே.க. எம்.பி.க்கள், இது தேசிய அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவதாக அமைந்திருப்பதுடன், மகிந்த ராஜபக்ஷ தலைமையில் செயற்படும் பொது எதிரணியைப் பலப்படுத்தும் வகையிலும் உள்ளதாகவும் ஜனாதிபதியிடம் முறையிட்டார்கள். இது தொடர்பாக ஜனாதிபதியிடம் தமது கரிசனையை வெளிப்படுத்தவே தாம் வந்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிலர் இவ்வாறு கருத்துவெளியிடுவதை தானும் அவதானித்திருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இது தொடர்பில் அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம் ஆகியோரும் ஐ.தே.க. அமைச்சர்கள் சிலரும் பதிலளித்திருப்பதை தான் பார்த்ததாகவும் குறிப்பிட்டார். இது குறித்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களுடன் தான் ஏற்கனவே பேசியதாகவும், பொது நிகழ்வுகளில் அவதானமாகப் பேச வேண்டும் என தான் அவர்களுக்கு எச்சரித்ததாகவும் தெரிவித்த ஜனாதிபதி, இன்று ஞாயிற்றுக்கிழமை அவர்களை தான் மீண்டும் அழைத்துப்பேசவுள்ளதாகவும் கூறினார்.
சமல் ராஜபக்ஷவை பிரதராக்குவதாகவும், கோதாபாய ராஜபக்ஷவை அரசாங்கத்துக்குள் உள்வாங்கப்போவதாகவும் இதன்மூலம் அரசாங்கத்தை மாற்றப்போவதாகவும் வெளியாகும் செய்திகளையிட்டு தாம் கவலையடைவதாகவும் ஐ.தே.க. எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். இதறற்குப் பதிலளித்த ஜனாதிபதி, இவ்வாறான தகவல் ஒன்று வெளிவந்திருக்கிப்பது உண்மைதான். இவ்விடயத்தில் ஐ.தே.க. எம்.பி.க்களின் கரிசனையை தான் புரிந்துகொள்வதாகவும், அவர்களின் கவலையில் நியாயமிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், அவ்வாறு எதுவும் நடைபெறப்போவதில்லை எனவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.
இதனையிட்டு அரசியல் ரீதியாக மட்டுமன்றி தனிப்பட்ட ரீதியிலும் தான் கவலையடைவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். “ஏனெனில் ராஜபக்ஷக்கள் உள்ளே வந்தால் தனிப்பட்ட முறையில் அது எனக்குப் பிரச்சினையாக இருக்கும். உங்களுக்கு அது அரசியல் ரீதியாக மட்டும்’தான் பிரச்சினையாக இருக்கும் எனக்கு அது தனிப்பட்ட முறையிலும் பிரச்சினையாக இருக்கும். இவ்வாறான கதைகளை சிலர் திட்டமிட்ட முறையில் பரப்பி வருகின்றார்கள். ஆனால், இதில் எந்தவிதமான உண்மையுமில்லை” எனத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த விவகாரங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை விரைவில் சந்தித்துப்பேசவுள்ளதாகவும் கூறினார்.
ஐ.தே.க.வுக்கும் என்னை ஜனாதிபதியாக என்னை உருவாக்கிய கட்சிகளுக்கும் எனக்கும் இடையில் இதன் மூலம் பிளவு ஏற்படும். தேசிய அரசாங்கம் தொடர்ந்து போக வேண்டும். அதில் நான் தெளிவாக இருக்கின்றேன். சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் பலர் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்தவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் அவரை ஆதரித்தவர்கள். அவர்களுக்கு பகிரங்கமாக மகிந்தவை எதிர்ப்பது முடியாமலிருக்கும். இப்போதும் தென்பகுதியில் மகிந்த ராஜபக்ஷவின் பதாதைகள் உள்ளன. அவற்றை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அகற்ற மாட்டார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று முதலாம் திகதி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும், அடுத்த சில தினங்களில் பிரதமர் ரணிலுடனும் மேற்கொள்ளவுள்ள சந்திப்புக்கள் மூலம் தேசிய அரசாங்கத்தில் உருவாகியுள்ள நெருக்கடி முடிவுக்குக் கொண்டுவரப்படும். தேசிய அரசாங்கத்தை முன்னெடுக்க வேண்டும் எனபதில் தான் உறுதியாக இருப்பதாகவும் ஜ.தே.க. எம்.பி.க்களிடம் ஜனாதிபதி உறுதியாகத் தெரிவித்தார்.:-06




