செய்திகள்

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை : அடுத்தக்கட்ட பேச்சு ஏப்ரல் ஆரம்பம்

இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் பொட்டம் ட்ரோலிங் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கு புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்கப்போவதில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் மற்றம் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்திய அரச பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அமைச்சர் மஹிந்த அமரவீர செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலான இரண்டு நாள் பேச்சுவார்த்தை நேற்று கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாரம்பரிய கடற்றொழில் முறைகளுக்கு பழக்கப்படுத்தப்பட்ட இந்திய மீனவர்களை வேறு தொழில்களில் ஈடுபடுத்த இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். எதிர்காலத்தில் சமுத்திரவியல் ரோந்துச் சேவையை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் கூறினார்.
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை ஏப்ரல் மாதம் 6ம் திகதி இடம்பெறும்.
இன்றைய பேச்சுவார்த்தையில் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இலங்கை பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம். எ. சுமந்திரன்இ வடமாகாண அமைச்சர் டெனிஷ்வரன்இ இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபதலைவர் செந்தில் தொண்டமான்இ அமைச்சின் பிரதிநிதிகள்இ பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் கடற்படை தளபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்திய அரச பிரதிநிதிகள் சார்பில் இந்திய மீன்வளத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் உள்ளிட்ட 11 பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தை கலந்துகொண்டனர்.
தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பேச்சு வார்த்தை தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இருதரப்பு அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
செயலாளர்கள் மட்டப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை முன்னோக்கி கொண்டுசெல்லும் வகையில் கொழும்பில் இன்றைய தினம் அமைச்சர்கள் மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்
இதேவேளை தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தமிழக மீனவர்களின் 114 படகுகள் உள்ளன. அவற்றை விடுவிக்க வேண்டும் எனதமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தினார். இதே கருத்தைதான் கடந்த 31-ந் தேதி இந்தியா- இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் மட்டத்தில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தினோம்.
எனவே, இந்திய அரசாங்கம் இதில் தலையிட்டு இலங்கை கடற்படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 114 படகுகளையும், 51 மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. -(3)