புத்தாண்டுச் சவால்கள்
வீரகத்தி தனபாலசிங்கம்
இன்று பிறக்கின்ற வருடத்தில் இலங்கை மிகவும் முக்கியமான அரசியல் நிகழ்வுப் போக்குகளைச் சந்திக்கப்போகிறது. அவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் எதிர்கால இருப்பைத் தீர்மானிக்கக்கூடியவையாக அமையப்போகின்றன என்பதில் சந்தேகமில்லை. 2015 ஆகஸ்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகே நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இந்த தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்திருந்தபோதிலும், அந்த வருடம் ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து இவ்விரு கட்சிகளும் ‘நல்லாட்சி’ என்ற பெயரில் இணைந்து நிர்வாகத்தை நடத்தத் தொடங்கியிருந்தன. அந்த வகையில் நோக்குகையில் அரசாங்கம் இரு வருடங்களைப் பூர்த்தி செய்வதற்கு இன்னமும் ஒரு வாரம் இருக்கிறது.
புதுவருடத்தை முன்னிட்டு பிரதமர் விக்கிரமசிங்க வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கடந்த இரு வருட காலத்தில் தங்களது அரசாங்கம் நிகழ்த்திக் காட்டியிருக்கக்கூடிய மிகப்பெரிய சாதனையென்றால் அது ராஜபக்ஷ ஆட்சி கொண்டுவந்திருந்த அரசியலமைப்புக்கான 18 ஆவது திருத்தத்தை இல்லாதொழித்ததேயாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார். நாட்டின் ஜனாதிபதியாக ஒருவர் இரு பதவிக் காலங்களுக்கு மாத்திரமே ஆட்சியதிகாரத்தில் இருக்கமுடியுமென்று அரசியலமைப்பில் இருந்த வரையறையை இல்லாமல் செய்து ஒருவர் எத்தனை பதவிக்காலங்களுக்கும் ஜனாதிபதியாக பதவியில் இருப்பதற்கு தேர்தல்களில் போட்டியிட வகை செய்வதாக அந்த திருத்தம் அமைந்திருந்தது. 2010 செப்டெம்பரில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அத்திருத்தத்தை ரத்துச் செய்யும் ஏற்பாட்டை உள்ளடக்கியதாக இன்றைய அரசாங்கம் கடந்த வருடம் கொண்டுவந்த அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தம் அமைந்தது. நாட்டின் மீது சர்வதிகாரத்தின் நிழலைப் படியச்செய்து ஜனநாயகத்தை ஒடுக்கிய அந்த 18 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்ததன் மூலமாக சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கைக்கு மீண்டும் நற்பெயரை வாங்கிக்கொடுத்து ஏனைய நாடுகளுடன் கேந்திர முக்கியத்துவ உறவுகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பைத் தேடிக்கொடுத்திருப்பதாக பிரதமர் தனது அறிக்கையில் பெருமைப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.
ஆனால், நாட்டுக்கு புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு கடந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட செயன்முறைகள் புதிய வருடத்தில் எந்தளவு தூரத்துக்கு முன்னோக்கி நகரக்கூடியதாக இருக்கும் என்பதிலேயே பிரதமரின் அந்தப் பெருமையின் இலட்சணம் தங்கியிருக்கிறது. அரசியலமைப்புச் சபையினால் நியமிக்கப்பட்ட வழிகாட்டல் குழு நியமித்த 6 உப குழுக்கள் சமர்ப்பித்திருக்கும் அறிக்கைகள் தொடர்பில் அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் விவாதம் நடை பெறவிருக்கிறது. அந்த உப குழுக்களின் அறிக்கைகளில் அதுவும் குறிப்பாக மத்திய அரசாங்கத்துக்கும் பிராந்தியங்களுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பாக ஆராய்ந்த உப குழுவின் அறிக்கை தொடர்பாக மூண்டிருக்கும் சர்ச்சைகளும் வாதப்பிரதிவாதங்களும் உத்தேச புதிய அரசியலமைப்பில் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதொரு அரசியல் தீர்வாக அமையக்கூடிய அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய செயன்முறைகள் எதிர்நோக்கப் போகின்ற சவால்களுக்குக் கட்டியம் கூறிநிற்கின்றன.

உத்தேச அரசியலமைப்பின் பிரதான நோக்கமான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சிகளிடையே கடுமையான முரண்பாடுகள் அண்மைக்காலத்தில் வளர்ந்திருக்கின்றன. ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படாமலே போய்விடுமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அத்துடன் தற்போதைய அரசியலமைப்புக்கு முக்கியமான திருத்தங்களைக் கொண்டு வருவதுடன் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை மட்டுப்படுத்திக்கொள்வதா அல்லது புதிய அரசியலமைப்பொன்றை முழுமையாகக் கொண்டுவருவதா என்பது குறித்துக்கூட இணக்கப்பாடு காணப்படாத நிலையிலேயே பாராளுமன்ற விவாதம் நடைபெறவிருக்கிறது.
அதேவேளை, தேசிய ஐக்கிய அரசாங்கத்திற்குள் இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி முகாமுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முகாமுக்கும் இடையில் ஆட்சி நிருவாகச் செயற்பாடுகளில் கருத்தொருமிப்பு அணுகுமுறைகளுக்குப் பதிலாக பெருமளவுக்கு முரண்பாடுகளே வளர்ந்திருக்கின்றன. இந்தப்போக்கு அண்மைய மாதங்களில் தீவிரமடைந்திருந்ததையும் கண்டோம். . இரு பிரதான கட்சிகளுக்கும் இடையிலான இந்த ‘சஞ்சலமான சகவாழ்வின் எதிர்காலம்’ குறித்து திட்டவட்டமான கருத்தைக் கூறமுடியாதவர்களாகவே அரசாங்கத் தலைவர்கள் இருக்கிறார்கள். மக்களுக்கு பாதகமாக அமையக்கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் யோசனைகளையும் செயற்பாடுகளையும் தாங்கள் எதிர்த்து நின்றதால்தான் தேசிய ஐக்கிய அரசாங்கம் சரியான பாதையில் இதுவரையில் பயணிக்கக்கூடியதாக இருந்தது என்று சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் பகிரங்கமாகவே கூறுகிறார்கள். அத்துடன் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளாமல் முன்னாள் ஜனாதிபதி ராஜபக் ஷவுடன் சேர்ந்து நின்று கொண்டு தங்களை ‘கூட்டு எதிரணி என்று அழைக்கின்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பல பிரச்சினைகளில் எடுக்கின்ற நிலைப்பாடுகளை ஆதரிப்பவர்களாக அரசாங்கத்திற்குள் இருக்கின்ற சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் உறுப்பினர்களும் மாறிக்கொண்டு வருகின்றார்கள். நாளடைவில் ராஜபக் ஷவுடன் சேர்ந்து செயற்படக்கூடிய சாத்தியம் குறித்தும் இவர்களில் சிலர் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். இத்தகைய போக்கு ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகளை மேலும் அதிகரிக்கவே செய்கிறது.
தேசிய ஐக்கிய அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகு முதற்தடவையாக நாடளாவிய ரீதியில் எதிர்நோக்கப் போகின்ற தேர்தல்களாக புதிய வருட முற்பகுதியில் அல்லது நடுப்பகுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சித் தேர்தல்கள் அமையவிருக்கின்றன. ஏற்கனவே ஒன்றரை வருடங்களுக்கும் கூடுதலான காலமாக ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல்களை இதற்கு மேலும் தாமதித்தால் அரசாங்கம் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உள்ளூராட்சி சபைகளின் வட்டார எல்லைகள் மீள்நிர்ணயம் தொடர்பிலான அறிக்கையைக் காரணங்காட்டி இதுவரையில் தேர்தல்களை ஒத்திவைக்க அரசாங்கத்தினால் இயலுமாக இருந்திருந்தாலும் இனிமேலும் சாக்குப் போக்குகளைச் சொல்ல முடியாத நிலை இப்போது வந்துவிட்டது. மேலும் தாமதிப்பதற்கான பிரயத்தனங்களில் அரசாங்கம் ஈடுபடுவதாக கூட்டு எதிரணி குற்றஞ்சாட்ட ஆரம்பித்துவிட்டதையும் காணக்கூடியதாகவுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் எதிரெதிராகப் போட்டியிடும்போது இடையில் ராஜபக் ஷ விசுவாசிகளின் புதிய கட்சியும் தனியான அணியாக களத்தில் இறங்குவதற்கான சாத்தியம் இருக்கிறது. புதிய கட்சி உள்ளூராட்சித் தேர்தல்களில் வெளிக்காட்டக்கூடிய செல்வாக்கு சுதந்திரக் கட்சிக்குள் ஜனாதிபதி சிறிசேனவின் தலைமைத்துவத்துக்கு பெரும் சவாலை தோற்றுவிக்கும் என்பதை இங்கு நாம் முன்னரும் கூறியிருக்கின்றோம். இத்தகைய நிலைமைகள் முன்னாள் ஜனாதிபதியும் அவருடன் நிற்பவர்களும் நாட்டின் அரசியல் போக்கின் திசையைத் தீர்மானிக்கக்கூடிய வல்லமை உள்ளவர்களாக மாறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தலாம்.அரசாங்கத்தை புதிய வருடத்தில் வீழ்த்து வது குறித்து ராஜபக் ஷ பேசவும் ஆரம்பித்திருக்கிறார்.
இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் அதிகரித்துக் காணப்படும் முரண்பாடுகளின் மிகவும் அண்மைய வெளிப்பாடாக பிரதமர் விக்கிரமசிங்க கொண்டுவர விரும்புகின்ற அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலத்துக்கு மாகாண சபைகள் காட்டியிருக்கும் எதிர்ப்பு அமைந்திருக்கிறது. வெளிநாட்டு முதலீடுகள் எந்தவிதமான நிருவாகத் தாமதங்களும் இல்லாமல் நாட்டுக்குள் வருவதற்கு அங்கீகாரம் வழங்கும் செயன்முறைகளைத் துரிதப்படுத்துவதே இந்த சட்டமூலத்தின் நோக்கம். சம்பந்தப்பட்ட அமைச்சுகளிடமிருந்து அனுமதிகளையும் அறிக்கைகளையும் பெறுவதில் ஏற்படக் கூடிய எந்தவிதமான தாமதங்களையும் பற்றிக் கவலைப்படாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் நம்பிக்கையுடன் முதலீடு செய்வதை உறுதிப்படுத்துவதற்காகவே இச்சட்ட மூலம் கொண்டுவரப்படுகின்றது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நம்பிக்கைக்குப் பெரிதும் பாத்திரமானவரான அபிவிருத்தி தந்திரோபாயங்கள் மற்றும் சர்வதேச வாணிப அமைச்சர் மலிக் சமரவிக்கிரம விளக்கம் அளித்திருந்தார். பிரதமரின் உத்தரவின் பேரிலேயே இச் சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டது. அமைச்சரவையில் அந்த சட்ட மூலத்துக்கு அங்கீகாரத்தை வழங்கிய சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் இப்போது வெளியில் அதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ராஜபக் ஷவின் கூட்டு எதிரணியினர் கூறுவதைப்போன்றே இவர்களும் இச்சட்ட மூலம் சர்வ வல்லமை பொருந்திய ‘சூப்பர் அமைச்சு’ ஒன்றை உருவாக்கும் நோக்குடனானது என்றும் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களுக்கும் கூட பாதிப்பாக அமையக்கூடியது என்றும் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பதுடன் ஒருபோதும் அதை நிறைவேற்ற அனுமதிக்கப் போவதில்லை என்று சூளுரைத்துமிருக்கிறார்கள்.

இலங்கையின் 9 மாகாண சபைகளில் கிழக்கு மாகாண சபை தவிர்ந்த ஏனைய 8 மாகாண சபைகளும் அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை நிராகரித்துவிட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிருவாகத்தில் இருக்கும் வடமாகாண சபையைத் தவிர ஏனைய 7 மாகாண சபைகளும் சுதந்திரக்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளவையாகும். ஜனாதிபதி சிறிசேன இதுவரையில் சட்ட மூலம் குறித்து எந்தவிதமான அபிப்பிராயத்தையும் வெளியிடவில்லை என்பதால் மாகாண சபைகளின் இந்த நிராகரிப்புக்கு பின்னணியில் அவர் இருப்பதாக சந்தேகங்கள் இயல்பாகவே கிளம்புகின்றன.
எனினும், மாகாண சபைகள் இந்தச் சட்டமூலம் தொடர்பில் கொண்டிருக்கக் கூடிய ஆட்சேபனைகளைக் கருத்தில் எடுத்து திருத்தங்களைச் செய்வதற்கு தயாராயிருப்பதாகவே பிரமதர் கூறியிருக்கிறார். சட்டமூலம் மாகாண சபைகளின் அதிகாரங்களை அபகரிக்கக்கூடியதாக அமைவதால் தான் சுதந்திரக்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாணசபைகள் அதை நிராகரித்திருக்கின்றன என்று கூறமுடியாது. அந்த மாகாண சபைகள் அதிகாரப் பரவலாக்கலில் அக்கறை கொண்டவையல்ல. கட்சி அரசியலின் அடிப்படையிலேயே அவை சட்ட மூலத்தை எதிர்க்கின்றன. ராஜபக் ஷ ஆட்சியில் பசில் ராஜபக் ஷவிடம் கையளிக்கப்பட்ட சர்வவல்லமையுடனான பொருளாதார அபிவிருத்தி அமைச்சு குறித்து இந்த மாகாண சபைகள் எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டாமல் மௌனமாக இருந்தன. இன்று சூப்பர் அமைச்சு குறித்து ஆட்சேபம் கிளப்பும் சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் அன்று எவ்வித முணுமுணுப்புமின்றி பாராளுமன்றத்தில் கைதூக்கியவர்களே.
இது இவ்வாறிருக்க, அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் மத்தியில் எதிர்நோக்கப்போகிற ஒரு முக்கியமான பிரச்சினை இருக்கிறது. அதாவது, உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையின் பொறுப்புடைமையை வலியுறுத்தி 2015 அக்டோபரில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இது வரையில் அரசாங்கம் எடுத்திருக்கக்கூடிய செயற்பாடுகள் குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவிருக்கும் கூட்டத் தொடரில் விரிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்க விருக்கிறார். அந்தத் தீர்மானத்தில் மிகவும் முக்கியமான நிபந்தனை வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத்தொடுநர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கியதாக நீதி விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்பதாகும். ஜனாதிபதி பிரதமர் உட்பட அரசாங்கத் தலைவர்கள் நீதி விசாரணைப் பொறிமுறையில் எந்தவொரு வெளிநாட்டவரின் பங்கேற்புக்கும் இடமில்லை என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்கள். இத்தனைக்கும் ஜெனீவாவின் தீர்மானத்துக்கு இணை அனுசரணையை இலங்கையும் வழங்கிய நிலையிலேயே இத்தகைய நிலைப்பாடுகளை அவர்கள் எடுத்திருக்கிறார்கள். அதனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கு பதில் அளிப்பது அரசாங்கத்துக்கு பெரும் சிக்கலாக இருக்கக்கூடும்.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவுடன் ஜனாதிபதி சிறிசேன இலங்கை மீதான போர்க் குற்றத்தீர்மானங்களை ரத்துச் செய்யுமாறு அவரிடம் கேட்கப்போவதாக கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. .
இறுதியாக, தமிழர் அரசியலைப் பொறுத்தவரை, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளில் அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட்டு, புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளில் நம்பிக்கை கொண்டிருக்கும் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் அணுகுமுறைகளை மாற்ற வேண்டிய சூழ்நிலை புதிய வருடத்தில் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகலாம்.




