”வொக்ஸ்வெகன்” கார் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது
நாட்டில் புதிய முதலீட்டு வாய்ப்புக்களை விரிவுபடுத்தும் வகையில் குளியாபிட்டிய பிரதேசத்தில் லபுயாய, மஹனுகலந்தவத்தயில் நிறுவப்படும் வொக்ஸ்வெகன் மோட்டார் வாகன தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கடந்த தேர்தல் காலப்பகுதியில் அரசினால் வழங்கப்பட்;ட வாக்குறுதிக்கு அமைவாக, ஜேர்மன் அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ள 26.5 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் அமைக்கப்படும் இந்த தொழிற்சாலையின் நிர்மாணப்பணிகளை இரண்டரை வருட காலப்பகுதியினுள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கருத்திட்டத்தின் ஊடாக மோட்டார் வாகன தொழிற்சாலை அமைக்கப்படுதல் மட்டுமன்றி மோட்டார் வாகன தொழிற்துறை தொடர்பான பயிற்சிகளை இளைஞர் யுவதிகளுக்கு வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனூடாக இளைஞர் யுவதிகளுக்கான 3000 நேரடி தொழில்வாய்ப்புக்களும், 10,000 மறைமுக தொழில் வாய்ப்புக்களும் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, காமினி ஜயவிக்ரம பெரேரா, எஸ்.பீ. நாவின்ன, அகில விராஜ் காரியவசம் மற்றும் வெஸ்டன் ஒடோமொபைல் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ரீசோ ரவுப் உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் பங்குபற்றினர். -(3)




