செய்திகள்

யுத்தம் முடிவடைந்த பின் சம்பந்தன் தெரிவித்து வரும் அனைத்துக் கருத்துக்களும் உண்மைக்குப் புறம்பானவை! கஜேந்திரகுமார்

யுத்தம் முடிவடைந்ததிலிருந்து தற்போது வரை சம்பந்தன் தொடர்ச்சியாக தெரிவித்து வரும் அனைத்து கருத்துக்களும் உண்மைக்கு புறம்பானவை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையாகச் சாடியுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பின் ஊடாகத் தேசிய இனப் பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை அடைய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்திருக்கும் கருத்துத் தொடர்பில் வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும், 13 ஆவது திருத்தச் சட்டத்தைத் தீர்வாக ஏற்றுக் கொள்ள வேண்டும், தமிழ் அரசியலில் தேசிய சிந்தனைகளை நீக்க வேண்டும் போன்ற விடயங்களைக் கூட்டமைப்பின் தலைவர் எங்களிடம் கேட்டுக் கொண்டதற்கமைவாகவே கடந்த 2010 ஆம் ஆண்டில் நாங்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினோம்.

கடந்த வாரம் வவுனியாவில் கைது செய்யப்பட்ட காணாமல் போனோரின் உறவுகள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொண்டிருந்த நிலையில் போராட்டத்தின் இறுதியில் சம்பந்தனின் படத்தைத் தீயிட்டு எரித்த சம்பவமானது சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது தமிழ் மக்கள் கொண்டிருக்கும் கடுமையான நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாகவுள்ளது.

அவரது படத்தை எமது மக்கள் எரித்த இத்தகைய சம்பவமானது சாதாரணமானதொரு விடயமல்ல. சம்பந்தன் தமிழர்களது தீர்வு விடயத்தில் நேர்மையாகச் செயற்பட வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம்.

அவர் எமது மக்களுக்குத் தமது உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். எம் மக்கள் இதுவரை காலமும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினரை நம்பி ஏமாற்றப்பட்டிருக்கிற நிலையில் அந்த ஏமாற்றம் தொடர் கதையாவதை இனியும் அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.

தற்போதிருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் புதிய அரசியல் அமைப்பின் ஊடாகத் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மிகவும் கடினமானது.

ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையில்லாத ஆதரவை வழங்கியதன் மூலமே இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நாங்கள் எமக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திப் பேரம் பேசுவதைத் தவிர்த்தமையே தற்போதைய பின்னடைவுக்கான முக்கிய காரணமாகும்.

ஆகவேஇ எதிர்காலத்தில் நாங்கள் நல்லதொரு முன்னேற்றமான நிலையை அடைவதற்குக் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட வேண்டிய தேவையிருக்கிறது. இதற்காக மக்கள் போராட்டங்கள் மூலம் எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டியிருக்கிறது.

எமது மக்கள் எங்களுக்குத் தான் வாக்களித்திருக்கிறார்கள். மக்கள் எங்களுக்குத் தான் ஆதரவுஇ நாங்கள் எமது மக்களின் ஆதரவின் பிரகாரம் தான் செயற்பட்டு வருகிறோம் எனக் கூட்டமைப்பின் தலைமை சர்வதேசத்தின் மத்தியில் தன் நியாயப்பாட்டை எடுத்துரைத்து வருகிறது.

இவ்வாறான சூழலில் இவற்றையெல்லாம் தாண்டிக் கடுமையான அழுத்தத்தைப் பிரயோகிப்பதன் மூலமே நாம் விரும்பிய தீர்வினைப் பெற முடியும்.

அதற்காகவே நாங்கள் தமிழ்மக்கள் பேரவையை உருவாக்கி அரசாங்கத்திற்குப் பல்வேறு அழுத்தங்களைத் தொடர்ச்சியாகக் கொடுத்து வருகிறோம். எமது மக்கள் இதனை உணர வேண்டும்.

சம்பந்தன் தமிழ்மக்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகத்தனத்தையும் தாண்டி நாம் எமக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எம்மாலான முயற்சிகளைச் செய்து வருகிறோம் என சுட்டிக்காட்டினார்.

மேலும், சம்பந்தனின் தலைமையின் கீழ் தமிழ்மக்களில்லை எனும் நிலைமை உருவாக வேண்டும் என இதன்போது வலியுருத்தியமை குறிப்பிடத்தக்கது.

N5