எதிர்வரும் வாரங்களில் GSP+ சலுகை கிடைக்கும் : ஜனாதிபதி
எமது நாட்டின் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி துறைகளின் முக்கிய திருப்புமுனையாக அமையக்கூடிய GSP+ சலுகையானது எதிர்வரும் வாரத்திலிருந்து நிரந்தரமாக இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (06) முற்பகல் கண்டி ஹல்ஒலுவ தொடங்வல பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பாலத்தை மக்கள் உரிமைக்கு கையளிக்கும் நிகழ்வில் பங்குபற்றி உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தள்ளார்.
அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது போலவே அதனுடன் நாட்டிற்கு கிடைத்துள்ள கடன் சுமை தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பாரியளவிலான கடன் உதவிகளைப் பெற்று பாரிய அபிவிருத்திக் கருத்திட்டங்களை செயற்படுத்தி பிரபல்யமடைவதற்கு தற்போதைய அரசினாலும் முடியுமானபோதிலும் அதனூடாக பாரிய கடன் சுமையினை நாட்டிற்கு உரித்தாக்கி நாட்டின் எதிர்காலத்தை இருளாக்குவதற்கு தனது அரசாங்கம் ஒருபோதும் தயராக இல்லை என்று வலியுறுத்திக் கூறிய ஜனாதிபதி அவர்கள்இ பாரியளவிலான கடன் சுமையினால் உலகின் ஏனைய சில நாடுகள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் நாம் கவனத்திற் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கப்போவதாக சிலர் அறிக்கைகளை வெளியிட்டபோதும் தமது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு யாராலும் முடியாது. 2020ஆம் ஆண்டில்; நடக்கும் தேர்தலில் வெற்றிபெற்று புதிய அரசாங்கத்தை அமைத்தாலொழிய அதற்கு முன்னர் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு யாருக்கும் எந்தவித வாய்ப்பும் இல்லை எனவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது வலியுறுத்தினார். -(3)




