செய்திகள்

நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை ஒற்றுமையாக உறுதியாக செயற்படுவோம்: சம்பந்தன்

“நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் ஒற்றுமையாக  உறுதியாக செயற்படுவோம்” என எதிர்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவின் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதன் முடிவில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அரசியல் தீர்வு சம்பந்தமாக எமது பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள்  தங்களுடைய கருத்துக்களைக் கூறியுள்ளனர். கருத்துக்கள் பரிமாறப்பட்டன. ஒளிவு மறைவு இல்லாமல் பகிரங்கமாகத் தமது கருத்துக்களை அவர்கள் தெரிவித்தார்கள்.

நாங்கள் எல்லோரும் தொடர்ந்து ஒற்றுமையாக   உறுதியாக எமது மக்களுக்கு ஏற்ற அரசியல்தீர்வை அடைவதற்குத் தொடர்ந்து உழைப்போம். எங்கள் முயற்சி தொடரும்.

எல்லோருடைய கருத்துக்களையும் நாங்கள் உள்வாங்கி இருக்கின்றோம். அந்த அடிப்படையில் நாங்கள் செயற்படுவோம்.  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திருப்திகரமாக நடந்தது. திருப்திகரமாக முடிவடைந்தது.

2016ஆம் ஆண்டில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று ஒரு கணிப்பின் அடிப்படையில் நான் தெரிவித்திருந்தேன்.  ஜனாதிபதியின் முடிவின் அடிப்படையிலும்,  நாடாளுமன்ற முடிவின் அடிப்படையிலும் நான் இந்தக்  கணிப்பைக் கூறியிருந்தேன்.

என்னுடைய கணிப்பின் அடிப்படையில் அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் 2016ஆம் ஆண்டில் பல கருமங்கள் நடைபெற்றுள்ளன. ஒன்றும் நடைபெறவில்லை என்று நாங்கள்  கூற முடியாது.

பாராளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டது. புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை முன்வைப்பதற்கான அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களையும் உள்ளடக்கிய வழிகாட்டல் குழு நியமிக்கப்பட்டது. அது செயற்பட்டு வருகின்றது. இந்தக் குழுவுக்கு உதவுவதற்காக 6 உப குழுக்கள் நியமிக்கப்பட்டன. அந்தக் குழுவினர் தங்களுடைய அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.

அடுத்த வாரம் பாராளுமன்றில் இது தொடர்பான விவாதங்கள் நடைபெறவுள்ளன. ஆகவே, அரசியல் தீர்வு விடயம் சம்பந்தமாக பல கருமங்கள் 2016ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் ஒற்றுமையாக  உறுதியாக செயற்படுவோம் என்றார்.:-06