செய்திகள்

மகிழ்ச்சி இல்லாத திருமண வாழ்க்கையில் நீடிப்பது தவறு : அமலாபால்

மகிழ்ச்சி தராத திருமண வாழ்க்கையில் நீடிப்பது தவறு. அதில் இருந்து வெளியே வந்துவிட வேண்டும் என்று நடிகை அமலாபால் கூறினார். இது குறித்து தொடர்ந்து தெரிவித்த அவர்..

நான் 7 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றேன். இந்த வருடமே அவை அனைத்தும் திரைக்கு வந்துவிடும். திருமண வாழ்க்கை எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை. அதனால் விவாகரத்துக்கு சென்றேன். விரைவில் விவாகரத்து கிடைத்துவிடும். திருமணம் என்பது சிறுவயதில் நான் எடுத்த முடிவு. இப்போது பிரிவு ஏற்பட்டது கூட நல்லதுக்கு என்றே நினைத்துக் கொள்கின்றேன்.

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்காதபோது, அதில் இருந்து விலகுவதற்கு தயங்கக் கூடாது. மகிழ்ச்சி இல்லாத அந்த சடங்குக்குள் வறட்டு கெளரவத்துக்காக நீடித்து இருப்பது தவறு. வெளியேறி விட வேண்டும். என் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவம் எனக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் எனது குடும்பத்தினர் ஆதரவாகவும், பக்கபலமாகவும் இருந்து அந்த வேதனையில் இருந்து என்னை மீட்டு விட்டார்கள்.

விவாகரத்து நிகழ்வுகள் எனது சினிமா வாழ்க்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் முன்பு போலவே என்னை வரவேற்கிறார்கள். திருமணத்துக்குப் பின்னர் கூட, நான் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகும் தொடர்ந்து நடித்தேன். இப்போது நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன.

வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்திலும் திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்துக்கொண்டு இருக்கின்றேன். சுதிப் ஜோடியாக கன்னட படமொன்றில் நடித்து கன்னட திரையுலகிலும் அறிமுகமாகி இருக்கின்றேன். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன்.

என்னை அணுகும் இயக்குனர்களிடம் படத்தின் கதை மற்றும் எனது கதாபாத்திரம் பற்றி மட்டுமே கேட்கின்றேன். கதாநாயகன் யார் என்று கேட்பது இல்லை. திருமணம் தவிர மற்ற எல்லா விடயங்களிலும் நான் எடுத்த முடிவுகள் அனைத்தும் எனக்கு மகிழ்ச்சியையே அளித்துள்ளன. நான் நடித்த படத்தை பல வருடங்கள் கழித்து திரும்பி பார்க்கும் போதும் இப்படி ஒரு நல்ல படத்தில் நடித்து இருக்கிறேனே என்ற மகிழ்ச்சியைத் தரவேண்டும்.

அப்படிப்பட்ட கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். நான் மொடனாக உடை அணிவதை சிலர் விமர்சிக்கிறார்கள். அந்த நபர்களுக்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை என்று அமலாபால் தெரிவித்தார்.

N5