செய்திகள்

கண்ணுக்கியானை பாடுதல்…திருவெம்பாவை பாடல்களில் இறைவன் புகழ்!

-Dr. கந்தையா நவரத்தினம்- (நடன முருகன் வைத்திய நிலையம்)

மார்கழி மாதத்தில் பெண்கள் ஒன்று கூடி நீராடி ஆலயம் சென்று சிவனை வழிபடுவதாகவும் அப்பொழுது அவர்களுக்கிடையே நடைபெறும் உரையாடல் ஆகவும் அமைந்த பாடல்களே மாணிக்க வாசகரது திருவாசகத்தில் ஒன்றான திருவெம்பாவை பாடல்கள்ஆகும்.

”திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கம் உருகார்” என்பதற்கெற்ப்ப இறைவன்பெருமையையும் அவன் மீது கொண்ட மாறா அன்பினையும். அழகு தமிழிலே தருபவை திருவெம்பாவைப்பாடல்கள். “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண் மாதே வளருதியோ” தொடக்கமும் இறுதி இல்லாத சோதி வடிவானவரை நாங்கள் பாடுகின்றோம். அதைக் கேட்டும் வாள் போன்ற அழகிய கண்களை உடைய நீ தூங்குகின்றாயே என்று ஆரம்பமே இறைவனுடைய அனாதி தன்மையை விளக்குவதோடுஅரனை பாடுவோர் அன்பினையும் சொல்கிறார் மணிவாசகர் .

shiva

அடுத்த பாடலில் விண்ணவர்களும் வணங்கக் கூசுகின்ற மலர் போன்ற பாதங்களை நமக்குத் தந்தருள் செய்ய வரும் ஒளியே உருவான, சிவலோகனான, தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு அன்பர்கள் நாங்கள் என்று இறைவன் புகழ் பேசுகிறது பின்வரும் பாடல்வரிகள். ”விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு அன்பார் யாம்” விண்ணுலகும் போற்றும் ஒரே மருந்தை , வேதத்தால் மேன்மையாக உணரப்படும் பொருளை, காண இனிய சிவபெருமானை நெக்குருகக் கசிந்து பாட வந்துள்ளோம் என்று மாறா அன்பை பேசுகிறது இன்னோர் பாடல். இவ்வுலகமும், விண்ணுலகமும், பிறவுலகங்களும் அறிவதற்கு அரிய பெருமானுடைய திருக்கோலத்தையும், அவர் நம்மை ஆட்கொண்டு குற்றங்களை நீக்கும் பெருமையையும் பாடி “சிவனே! சிவனே!” என்று நாங்கள் ஓலமிட்ட போதும், சற்றும் உணர்ச்சியில்லாமல் இருக்கிறாயே ! என்று தோழி கூற்றாக வரும் பாடல் பத்தியின் வாய் மொழியாகி நம்மை பரவசப்பட வைக்கிறது “ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ் சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று) ஓலம் இடினும் உணராய் உணராய்காண்” இன்னும் பழமையான பொருட்களுக்கெல்லாம் பழமையான முதல்வனே ! என்றும் இப்போது தோன்றிய புதுமையானவற்றுக்கும் புதுமையானவனே !என்றும் அவனுடைய பாதமாகிய மலர்கள் பாதாளங்கள் ஏழிற்குக்கீழும் சென்று சொல்லுதற்கும் எட்டா வகை உள்ளன; என்றும் அவன் பெண்ணை ஒருபாகம் உடையவன் என்றும் ; வேதங்கள் முதலாக விண்ணோரும், மண்ணோரும் துதிக்கின்ற போதும் ஒருவராலும் இவ்வாறு எனச் சொல்லப்பட முடியாதவன்;என்றும் பல இடங்இகளில்றை வன் புகழ் பேசுகிறார் மணிவாசகர்.

இறை அன்பிலே உருகிக் கரைந்து ஞானம் பெற்ற மணிவாசகர் இறுதியாக வரும் போற்றிப்பாடலில் சிவபெருமான் பாதங்களின் பெருமையை அழகாக பேசுகிறார்.

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுக நி ன் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்

போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்………

இறைனின் பாதங்களே உயிர்களின் தொடக்கமும் முடிவும்

பாதகாப்பாகவும் அமைகின்றன திருமாலும் அயனும் காணாமுடியாத அந்த பாதங்களை போற்றி துதிப்பபோம் என்பதே அப்பாடலின் விளக்கம்.

இவ்வாறு மார்களிகுளிரில் இறைவன் புகழ் பேசி இதயத்தையும் குளிர்விக்கின்றன திருவெம்பாவைப்பாடல்கள்.