தவறை உணரத்தவறும் முன்னாள் ஜனாதிபதி
வீரகத்தி தனபாலசிங்கம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ புதிய வருடத்தை நாட்டுக்கு நலமார்ந்ததாக இருக்காது என்று கூறிக்கொண்டே வரவேற்றார். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான தேசிய ஐக்கிய அரசாங்கத்தை இவ்வருடத்தில் நிச்சயமாகக் கவிழ்க்கப் போவதாக அவர் நம்பிக்கையுடன் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. அதன் அடிப்படையில் நோக்குகையில் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான சாத்தியத்தில் அவர் நம்பிக்கை கொண்டிருக்கிறார் என்பதால் அவருக்கு இவ்வருடம் நலமார்ந்ததாக இருக்குமென்றுதானே அர்த்தப்படுத்த வேண்டியிருக்கிறது. புதுவருடம் பிறப்பதற்கு இரு தினங்கள் முன்னதாக கொழும்பில் உள்ள வெளிநாட்டு நிருபர்களைச் சந்தித்த அவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தோற்கடிக்கப் போவதாக முன்னர் கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டி, அதைச் சாதித்துக் காட்டியதையும் நினைவுபடுத்தி, ‘அதே நம்பிக்கையுணர்வுடன்’ மீண்டும் அதிகாரத்துக்கு வருவது குறித்து பேசினார். தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு இரு வருடங்கள் இருந்த நிலையில் 2015 ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி அதில் கண்ட தோல்வியின் பாதிப்பில் இருந்து முன்னாள் ஜனாதிபதி இன்னமும் விடுபட முடியாதவராகவே இருக்கிறார் என்பதை வெளிநாட்டு நிருபர்களிடம் அவர் தெரிவித்த கருத்துகள் தெளிவாக வெளிக்காட்டி நிற்கின்றன. ஆனால், தனது தோல்விக்கு வழிவகுத்த பிரதான காரணிகள் பற்றிய அவரின் விளக்கப்பாட்டில் இருக்கக்கூடிய பிசகே இதுவிடயத்தில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.
இலங்கையில் ஆட்சிமாற்றம் ஒன்றைக் கொண்டு வருவதற்காக மேற்குலக நாடுகள் மேற்கொண்ட சதி முயற்சியின் விளைவே தனது தோல்வியென்றும் அந்த முயற்சியில் இந்தியாவும் இணைந்து செயற்பட்டதாகவும் ராஜபக் ஷ கூறியிருக்கிறார். ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு இந்தியா எந்தவழியில் உதவியது என்று கேட்கப்பட்டபோது, அதைக் கண்டறிய முயற்சித்துக் கொண்டிருப்பதாக அவர் பதிலளித்தார். தன்னைப் பதவியில் இருந்து அகற்றுவதற்காக அமெரிக்கா சுமார் 65 கோடி டொலர்களைச் செலவிட்டதாக ஒரு கணக்கு விபரத்தையும் ராஜபக் ஷ வெளியிட்டார்.
தனது ஆட்சிக்கு எதிரான வெளிநாட்டு குறிப்பாக மேற்குலகத்தின் சதி முயற்சிகள் குறித்து அல்லது 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் தனது தோல்விக்கு அமெரிக்காவும் இந்தியாவுமே முக்கியகாரணம் என்று ராஜபக் ஷ பேசியிருப்பது இது முதற்தடவையல்ல. அவர் ஏற்கனவே பல தடவைகள் அதுபற்றிக் குறிப்பிட்டு வந்திருக்கிறார்.
தனது தோல்விக்கு முற்றிலும் வெளிக் காரணிகளே பொறுப்பு என்ற குற்றச்சாட்டை இடையறாது முன்வைத்துக் கொண்டிருக்கும் அவர், உள்நாட்டுக் காரணிகள் பற்றி கவனத்தைச் செலுத்துவதை தவிர்க்கிறார். ஒரு நாட்டின் முக்கியமான தேர்தல்களிலே வெளிக்காரணிகள் செல்வாக்குச் செலுத்துவது ஒன்றும் இன்றைய உலகில் புதுமையான விடயம் அல்ல. ஆனால், உள்நாட்டுக் காரணிகள் வசதியாக அமையாவிட்டால் வெளிக்காரணிகள் அவற்றின் நோக்கங்களை எளிதில் சாதிக்கக்கூடியதாக சூழ்நிலைகள் அமையப் போவதில்லை.
இன்று ராஜபக் ஷ தலைமையில் இயங்கும் ‘கூட்டு எதிரணிக்கு’ முழுமையாக ஆதரவாக இருக்கும் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்று’ இலங்கையில் ஆட்சிமாற்றத்தைச் செய்வதற்கு அமெரிக்கா 65 கோடி டொலர்களைச் செலவிட்டதாக அவர் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் சில தினங்களுக்கு முன்னர் அதன் ஆசிரிய தலையங்கத்தில் ஒருவித நகைச்சுவை உணர்வுடன் கருத்து வெளியிட்டிருந்தது.
‘ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்து அமெரிக்கா அபகீர்த்தியைச் சம்பாதித்திருக்கிறது. ஆட்சி மாற்றங்களுக்குத் தூண்டுதல் அளித்ததன் மூலமாக சில நாடுகளில் பெரும் குழப்பநிலை உருவாகவும் அமெரிக்கா காரணமாயிருந்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் லிபியாவில் வன்முறைக் கிளர்ச்சியை அது வெளிப்படையாக ஆதரித்தது. மேற்குலக ஆதரவுடனான கிளர்ச்சியாளர்களினால் கேணல் கடாபி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதையும் தயக்கமில்லாமல் அமெரிக்கா ஆதரித்தது. தன்னைப் பதவியில் இருந்து அகற்றியதில் வாஷிங்டனுக்குத் தொடர்பு இருக்கிறதென்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவும் கூட குற்றஞ்சாட்டியிருக்கிறார். அமெரிக்காவுக்கு அடிவருடிகளாக இருக்கின்ற தனது அரசியல் எதிரிகளுக்கு சார்பான முறையில் 2015 ஆம் ஆண்டில் ஆட்சிமாற்றமொன்றைக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா 65 கோடி டொலர்களைச் செலவு செய்வதாக அவர் குற்றஞ்சாட்டியதாக ‘இந்து’ பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.

‘அமெரிக்க வரியிறுப்பாளர்களின் பெருமளவு பணத்தை ராஜபக் ஷ காப்பாற்றியிருக்கிறார் என்றும் எவரும் வாதிடலாம். எவ்வாறு தெரியுமா? தனக்குத் தானே கெடுதியாக நடந்து கொண்டதன் மூலமாக தன்னைப் பதவியிலிருந்து அகற்றும் பணியை சிரமம் குறைந்ததாக்கியதனால் இலங்கையில் ஆட்சிமாற்ற நடவடிக்கைகளுக்கான அமெரிக்கச் செலவை குறைக்க அவர் உதவியிருக்கிறார். அல்லாவிட்டால், ஒபாமா நிருவாகம் அதன் இலக்கை அடைவதற்காக மேலும் கூடுதலானளவு பணத்தைச் செலவிட வேண்டியிருந்திருக்கும் அல்லது ராஜபக் ஷ தனது பாதங்களை நக்கிக் கொண்டிருந்த அடாவடித்தனமான பிரகிருதிகளை கட்டுப்படுத்தி, அரசாங்கத்திற்குள் ஊழல் செய்தவர்களைத் தண்டிப்பதில் கவனம் செலுத்தியிருந்தால் மக்கள் அவரை அமோகமாக ஆதரித்து தேர்தலில் மீண்டும் வெற்றி பெறச் செய்திருக்கக்கூடிய பட்சத்தில் அமெரிக்கா செலவு செய்த டொலர்கள் எல்லாம் வீணாகிப் போயிருக்கும் என்றும் கூட வாதிடலாம். ராஜபக் ஷ அரசாங்கம் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதிலும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதிலும் காட்டிய வேகத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அமெரிக்கா சிறிது காலம் பொறுத்திருந்தால், அந்த அரசாங்கம் தானாகவே வீழ்ச்சியடைந்திருக்கும் என்றும் கூறலாம்.” இதுவே அந்தப் பத்திரிகையின் ஆசிரிய தலையங்கத்தின் பகுதியாகும்.
அதேவேளை, தனது தேர்தல் தோல்விக்கு வழிவகுத்த சதித்திட்டத்துக்கு உதவியதாக இந்தியாவைக் குற்றஞ்சாட்டும் ராஜபக் ஷ, அதே இந்தியாவே விடுதலை புலிகளுடனான போரில் தனது அரசாங்கம் வெற்றிபெற உதவியது என்று முன்னர் அடிக்கடி கூறிவந்திருக்கிறார். போரின் இறுதிக் கால கட்டத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்த சிவ்சங்கர் மேனன் அண்மையில் ‘தெரிவுகள்; இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உருவாக்கலின் உட்பக்கம்’ (Choices; Inside the making of India’s foreign policy) என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். அதில் ‘Force works’ என்ற தலைப்பில் நான்காவது அத்தியாயத்தில் இலங்கை பற்றிய தனது அபிப்பிராயத்தை அவர் வெளியிட்டிருக்கிறார். போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் ராஜபக் ஷ வின் அணுகுமுறைகள் பற்றி பின்வருமாறு மேனன் குறிப்பிடுகிறார்.
‘போரின் விளைவான பெளதீகக் காயங்கள் பெருமளவுக்கு இல்லாமல்செய்யப்பட்டு விட்டன. கம்போடியா, ருவாண்டா அல்லது அமெரிக்கா போன்று குறுகிய கால உள்நாட்டுப் போர்களைச் சந்தித்த ஏனைய நாடுகளை விடவும் இலங்கையில் புனர்வாழ்வும் வழமை நிலையும் மிகவும் துரிதமாக நிலை நாட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், சமாதானம் என்பது வன்முறை இல்லாத சூழ்நிலையையும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளின் பிரசன்னத்தையும் விட மேலானது. சமாதானம் மனதிலும் இருக்கவேண்டும். போருக்குப் பிறகு இதுவிடயத்தில் தான் இலங்கை தோல்வி கண்டிருக்கிறது.
போரில் வெற்றிபெற்ற மகிந்த ராஜபக் ஷவின் கீழான அரசாங்கமும் சிங்களப் பெரும்பான்மையினரும் வெற்றியில் பெருந்தன்மையைக் காட்டவில்லை. உண்மையான சமாதானம் அத்தகைய பெருந்தன்மையையே வேண்டிநிற்கிறது.
‘புனர் நிர்மாணமும் நிவாரணமும் உடனடி முன்னுரிமைக்குரியவையாக இருந்தன என்றால், இலங்கையில் தீவிரவாதக் கிளர்ச்சியும் பயங்கரவாதமும் மீண்டும் தலையெடுக்காமல் தடுப்பதில் உள்ள நீண்டகால நோக்கிலான நலன்கள் நல்லிணக்கத்தையும் அரசியல் விவேகத்தையும் வேண்டி நின்றன. இதை ராஜபக் ஷவினால் செய்ய முடியவில்லை. சகல இலங்கையர்களுக்குமான தலைவராக இருக்க வேண்டும் என்பது உண்மையானால், ராஜபக் ஷ அரசியல் அதிகாரப் பரவலாக்கத்தின் ஊடாக நேசக்கரத்தை நீட்டவேண்டும் என்றும் ஜனநாயக வழி முறைகளின் ஊடாக மனித உரிமைகளை மீள நிலை நிறுத்தி தனது நாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கும் தோல்வி கண்டவர்களுக்கும் ஒரேமாதிரியான கெளரவ உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் நாம் அவரிடம் வலியுறுத்திக் கேட்டிருந்தோம்.
‘இந்தியா முன்னெடுத்த புனர் நிர்மாணம் மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அனுசரணையாகச் செயற்பட்ட அதேவேளை, அவர் போர் வெற்றியில் அரசியல் ரீதியில் பெருந்தன்மை கொண்டவராக தன்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை. தான் சேர்ந்து பணியாற்றக் கூடியதாக தமிழ்த் தரப்பில் எவரும் இல்லை என்று எம்மிடம் அவர் கூறினார். அது ஓளரவுக்கு சரியானதே. போரில் உயிர்தப்பிவாழும் தமிழ் அரசியல் வாதிகள் குறிப்பாக, தமிழ்த் தேசியக் ‘கூட்டமைப்பில் உள்ளவர்கள் விடுதலை புலிகளுடன் உடந்தையாக செயற்பட்டவர்களாகவும் அல்லது விடுதலை புலிகளுக்கும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தில் இருக்கக்கூடிய மிகவும் தீவிரவாதப் போக்கைக் கொண்ட சக்திகளுக்கு கடமைப்பட்டவர்களாகவும் இருந்தனர். ஆனால், தமிழ் மிதவாத தலைமைத்துவத்தை ஊக்கமளித்து மேம்படுத்துவதற்கு ராஜபக் ஷ தன்னிடமிருந்த அளவு கடந்த அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை. மண்டேலாவுக்கு ஒரு டி கிளார்க் தேவை. டி கிளார்க்கிற்கு ஒரு மண்டேலா தேவை. இலங்கையில் இருவரையுமே காண முடியவில்லை. இருதரப்பிலுமே அரசியல் வளர்ச்சி என்பது குன்றியதாகவே இருக்கிறது. இவ்விரு தரப்பினருமோ அல்லது சர்வதேச சமூகமோ கடந்த கால வாக்குவாதங்களைக் கடந்து செல்ல இயலவில்லை’.
அந்த ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரிய தலையங்கத்தையும் மேனனின் கருத்துக்களையும் இங்கு மேற்கோள் காட்டுவதற்கான காரணத்தைச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லை. அது தானாகவே விளங்கும் தன்மையானதாகும்.
ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் ஒரு புறத்தில் முன்னொருபோதுமில்லாத வகையிலான ஊழல் மோசடிகளும் அதிகார துஷ்பிரயோகமும் சட்டத்தின் ஆட்சியின் சீர்குலைவும் குடும்ப அரசியல் ஆதிக்கமும் தலைவிரித்தாடிய அதேவேளை, மறுபுறத்தில் இனக்குழுமப் பெரும்பான்மை வாதம் (Ethnic majoritarianism) கடுமையாகத் தீவிரமடைந்திருந்தது.
சிறுபான்மைத் தேசிய இனங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்தபட்டசமானவற்றைக் கூட ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாத அளவுக்கு தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தில் இனவாதப் போக்குகள் வளர்ச்சியடைந்திருந்தன. அந்தப் போக்குகளை மேலும் ஊக்குவிக்கும் வகையிலானவையாகவே அரசாங்கத்தின் கொள்கைகளும் செயற்பாடுகளும் அமைந்திருந்தன.
போர் வெற்றி காரணமாகவே ராஜபக் ஷ சிங்கள மக்கள் மத்தியில் பெருஞ்செல்வாக்குக் கொண்டவராக விளங்குகிறார். அதே காரணத்துக்காகவே அவர் தமிழ் மக்களினால் வெறுக்கப்படுபவராக இருக்கிறார். போர் வெற்றிக் குதூகலத்தில் சிங்கள மக்களை மிதக்கவிட்டு அரசியல் அனுகூலமடைவதற்கு முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளின் விளைவாக அந்த மக்கள் மத்தியில் இராணுவவாத அரசியல் உணர்வுகள் மேலோங்கிக் காணப்பட்டன.
இலங்கைச் சமுதாயம் இன்று பெருமளவுக்கு இராணுவமயப்பட்டதாக இருப்பதற்கு ராஜபக் ஷ அரசாங்கத்தின் அணுகுமுறைகளும் செயற்பாடுகளுமே கூடுதலான பங்களிப்பைச் செய்திருந்தன.
2010 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் ராஜபக் ஷவுக்கு எதிராக களமிறக்குவதற்கு அவருடன் முரண்பட்டுக் கொண்ட முன்னாள் இராணுவ தளபதியை தெரிவு செய்ய வேண்டியளவுக்கு எதிரணிக்கு ஏற்பட்ட நிர்பந்தம் இந்த இராணுவமய அரசியலின் இலட்சணத்தை தெளிவாக வெளிக்காட்டி நின்றது.
போருக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய ராஜபக் ஷவுக்கும் இராணுவத்தை வழிநடத்திய தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான தேர்தல் போட்டி என்று வந்த போது தமிழ் மக்கள் பொன்சேகாவையே ஆதரித்தார்கள். தங்களை அரசியல் ரீதியில் வீரியமற்ற ஒரு சமுதாயமாக மாற்றியவர் ராஜபக் ஷவே என்ற கவலை தமிழ் மக்கள் மனதில் ஆழப் பதிந்திருந்தது. அதனால், அவர்கள் ஏழுமாதங்களுக்கு முன்னதாக முடிவடைந்த போரில் இராணுவத்துக்குத் தலைமை தாங்கியவருக்கு வாக்களிப்பதற்கு ‘கூட அசௌகரியப்படவில்லை. இதை தமிழ் மக்களை வரலாறு வஞ்சித்த இன்னொரு சந்தர்ப்பம் என்று அந்த நேரத்தில் சில அரசியல் அவதானிகள் குறிப்பிட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.
போரின் முடிவுக்குப் பின்னர் மாத்திரமல்ல அதற்கு முன்னரும் கூட, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு முயற்சிகளை முன்னெடுப்பதாக சர்வதேச சமூகத்துக்கு உறுதியளித்த ராஜபக் ஷ அரசாங்கம் அதில் ஒரு போதுமே கவனத்தைச் செலுத்தவில்லை. தமிழ்ப் பகுதிகளை இராணுவ முற்றுகைக்குள் தொடர்ந்தும் வைத்திருக்கும் நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
ராஜபக் ஷ ஆட்சிக் காலத்தின் இறுதிக் கட்டங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்கு தேசியவாத சக்திகளினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இன, மத வெறிப்பிரசாரங்களும் வன்முறை நடவடிக்கைகளும் முஸ்லிம்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு இருந்த ஆதரவையும் இல்லாமல் செய்தது. தமிழர்கள், முஸ்லிம்கள் மாத்திரமல்ல, தென்னிலங்கையில் உள்ள சிங்கள கிறிஸ்தவர்கள் மத்தியிலும் ராஜபக் ஷ மீதான வெறுப்புணர்வு வளர்ந்திருந்தது. அத்தகையதொரு பின்புலத்திலேயே 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தல் வந்தது. சகல சிறுபான்மையினத்தவர்களும் அன்றைய எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவையே ஆதரித்தார்கள். அவரின் வெற்றிக்கு சிறுபான்மைச் சமூகங்களின் அமோகமான ஆதரவே முக்கிய காரணியாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. அதன் காரணத்தினால்தான் சிங்கள மக்கள் மத்தியில் தான் தோல்வி காணவில்லை என்ற நம்பிக்கையை ராஜபக் ஷ வளர்த்துக் கொண்டார். அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவரின் தற்போதைய அரசியல் தந்திரோபாயங்களும் முன்னெடுப்புகளும் அமைந்திருக்கின்றன.
சிறுபான்மைச் சமூகங்கள் சகலவற்றிடமிருந்தும் முற்றுமுழுதாகத் தனிமைப்பட்டுப் போனமை தனது தோல்விக்கான பிரதான காரணிகளில் ஒன்று என்பதை ராஜபக் ஷ புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அமெரிக்காவையும் இந்தியாவையும் குற்றஞ்சாட்டிக் கொண்டேயிருக்கிறார். சிறுபான்மைச் சமூகங்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு தற்போது ராஜபக் ஷவுக்கு முன்னால் ஒரு வாய்ப்பு விரிந்துகிடக்கிறது. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்து தேசியப இனப் பிரச்சினைக்கு பயனுறுதியுடைய அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு ஆரோக்கியமான பங்களிப்பைச் செய்வதற்கு பதிலாக முன்னாள் ஜனாதிபதி அந்த செயற்பாடுகள் எதுவிதத்திலும் முன்னேற்றம் கண்டுவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்து வருகிறார் . அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் தொடர்பில் தென்னிலங்கை மக்களைத் தவறாக வழிநடத்துகின்ற அரசியல் சக்திகள் தங்களுக்கு ஒரு ஆதர்சமாக ராஜபக் ஷவை நோக்குகின்றன என்பதில் சந்தேகமில்லை.
அவர் உண்மையான தவறுகளை உணர்ந்து தன்னை மாற்றிக் கொள்ளத் தவறுகிறார்.




