செய்திகள்

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்

தற்போது நாட்டில் நிலவும் கடும் வரட்சியான காலநிலையால் மின்சார நெருக்கடி நிலைமை ஏற்படலாம் எனவும் இதனால் மின்சாரப்பாவனையாளர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும் என்றும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்தார்.
இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வரட்சியின் காரணமாக நீர் மூலமான மின்சக்தி உற்பத்தி 35 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது. அணல் மின்நிலையம் மூலமான மின்னுற்பத்தியை கொண்டு வறட்சியினால் ஏற்படக்கூடிய மின்சார பிரச்சினையை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகிவருகின்றோம் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். தேசிய மின் வலைப்பின்னலுக்கு மின்சாரத்தை வழங்க முன்வருவார்களாயின் அவ்வாறானோர்களுக்கு ஒரு மின் அலகிற்கு 36 ரூபா 50சதம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மின்துண்டிப்பு இடம்பெறுமாயின் அதுதொடர்பாக முன்கூட்டியே அறிவிக்கப்படும். ஆனால் தற்பொழுது அவ்வாறான ஒரு தேவை இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். -(3)