195 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட புதிய பேரூந்து நிலையத்தால் வவுனியாவில் மோதல்: 4 மணிநேரம் நகரில் பதற்றம்
195 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியாவில் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையத்திற்கு இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகள் செல்லததால் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை சாரதி, நடத்துனர்களுக்கிடையில் இன்று ஏற்பட்ட மோதல் காரணமாக வவுனியா நகரப்பகுதியில் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு நான்கு மணிநேரம் பதற்ற நிலை நீடித்தது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, யாழ் வீதியில் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையம் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அவர்களால் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இப் புதிய பேரூந்து நிலையத்தில் தமது சேவைகளை தனியார் பேரூந்துகள் ஆரம்பித்திருந்தன. ஆனால் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகள் புதிய பேரூந்து நிலையத்திற்கு செல்லாது தமது பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபட்டன.
இந்நிலையில் புதிய பேரூந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிய தனியார் பேரூந்து ஒன்று இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து நிலையத்திற்கு வந்த போது அதனை தடுத்து நிறுத்திய இலங்கை போக்குவரத்து சபை நடத்துனர் மற்றும் சாரதிகள் அதனை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அப்பகுதியளில் முறுகல் நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிசார் அத் தனியார் பேரூந்தினை அங்கிருந்து விடுவித்தனர்.
இம்முரண்பாட்டையடுத்து இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகளையும் புதிய பஸ் நிலையத்திற்கு வருமாறு கோரி தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள், உரிமையாளர்கள் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து தரிப்பிடத்தின் முன்னால் கோசம் எழுப்பியவாறு முற்றுகையிட்டனர். இதன்போது இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபட்டதால் அதை தடுக்கும் வகையில் தனியார் பேரூந்துகளை கொண்டு வந்த சாரதிகள் ஏ9 வீதியின் குறுக்காகவும் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து தரிப்பிட வாயில்களை மூடியும் தனியார் பேரூந்துகளை நிறுத்தி .லங்கை போக்குவரத்து சபை பேரூந்து சேவையை இடைநிறுத்தினர்.
இதனையடுத்து சம்பவ இடத்தில் மேலதிக பொலிசார் குவிக்கப்பட்டு அங்கு நின்ற தனியார் பேரூந்துகளை வெளியேற்றினர். இதனால் தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து நிலைய வாயிலை மறித்து உட்கார்த்தனர். இதன் காரணமாக இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சேவை 4 மணிநேரம் தடைப்பட்டது. இதன்போது இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகள் அவ்விடத்தில் நின்றே பயணத்தை தொடர வேண்டும் எனவும் புதிய பேரூந்து நிலையத்திற்கு அவர்களை மாற்ற வேண்டாம் எனத் தெரிவித்து பேரூந்து நிலையப் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டதுடன், வர்த்தக சங்கத்தினரும் இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல வந்த பேரூந்தை அங்கு நின்ற இலங்கை போக்குவரத்து சபை நேரக்காப்பாளர் ஒருவர் செலுத்த முற்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. இதன்போது அப் பேரூந்தின் முன்பக்க கண்ணாடி தாக்குதல் காரணமாக உடைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் தனியார் பேரூந்து நடத்துனர் ஒருவரை கைது செய்தனர்.
இந்நிலையில் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து கொழும்பு உள்ளிட்ட தூர இடங்களுக்கு புறப்பட்ட தனியார் பேரூந்துகளை வவுனியா இரண்டாம் குறுக்குத்தெரு சந்தியில் மறித்த இலங்கை போக்குவரத்து சபையினர் அதன் பயணத்தை தொடார விடாது வீதிமறியலில் ஈடுபட்டனர். இதனால் வெளியிடங்களில் இருந்து வந்த பயணிகள், தூர இடங்களுக்கு செல்லவிருந்த பயணிகள் எனப் பலரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

நிலையை கட்டுப்படுத்த முடியாது திணறிய பொலிசார் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திற்கு இலங்கை போக்குவரத்துசபை மற்றும் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இதனையடுத்து நான்கரை மணிநேரத்தின் பின் முறுகல் நிலை முடிவுக்கு வந்தது. வவுனியா நகரில் முன்னர் செயற்பட்டது போன்று இலங்கை போக்குவரத்து சபை தமது பேரூந்து நிலையத்திலும் தனியார் பேரூந்துகள் முதலாம், இரணடாம் குறுக்தெருவிலும் நின்று பயணத்தை தொடர்வதாக தீர்மானிக்கப்பட்டதையடுத்து நிலமை வழமைக்கு திரும்பியது. பூட்டப்பட்ட வர்த்தக நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதுடன் பழைய முறையில் போக்குவரத்து சேவையும் இடம்பெற்றது. புதிதாக திறக்கப்பட்ட பேரூந்து நிலையத்தில் இருந்து தனியார் பேரூந்துகள் வெளியேறி பழைய இடங்களுக்கு சென்றதால் அப் பேரூந்து நிலையம் வெறிச்சோடியது.

இதேவேளை, மோதல் நடைபெற்ற பகுதிக்கு வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார ஆகியோரும் வருகை தந்து நிலமையை கட்டுப்படுத்த முயன்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
N5




