இறக்குமதி செய்யப்படும் அரிசியை 76 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்ய கூடாது : ஜனாதிபதி கடும் உத்தரவு
இறக்குமதி செய்யப்படும் அரிசியை எக்காரணங் கொண்டும் 76 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்ய முடியாதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் தெரிவித்துள்ளார்.
தனியார் வர்த்தகர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் விரும்பிபடி அரிசி விலையை அதிகரித்து பொதுமக்களை அசௌகரியத்துக்குள்ளாக்க முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க முடியாது என்றும் கூறினார்.
சுற்று நிருபங்களுக்கு உட்டுப்படாது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைக்கு மத்தியில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கும் அரசாங்கத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணி அங்கத்தவர்களை இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தபோதே ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
அரிசி இறக்குமதியின் போது பாவனைக்கு பொருத்தமான அரிசி இறக்குமதி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென ஜனாதிபதி இதன்போது வர்த்தக அமைச்சுக்கு ஆலோசனை வழங்கினார்.
அரசுக்கு சொந்தமான களஞ்சியசாலைகளில் இருந்து வழங்கப்பட்டுள்ள நெல்லை பெற்றுக்கொண்டுள்ள நெல் ஆலை உரிமையாளர்கள் அவற்றை அரிசியாக மாற்றி சந்தைக்கு வழங்கியுள்ளார்களா என்பதை கண்டறிந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஆலோசனை வழங்கினார். -(3)




