மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை வென்றாலும் சிறுபான்மையினரின் உள்ளத்தை வெல்ல தவறிவிட்டார்
இந்த நாட்டில் யுத்த வெற்றியை கொண்டு வந்து அமைதியை கொண்டு வந்தவர் மஹிந்த ராஜபக்ஷ. அவரது காலத்தில் ஓரளவு அபிவிருத்தியும் இடம்பெற்றது ஆனால்இனவாதத்தையும் மதவாதத்தையும் கட்டுப்படுத்த அவர் தவறிவிட்டார். அதனால் சிறுபான்மை இனக்குழுமத்தினர் தமது இருப்பு தொடர்பில் அச்சமடைந்து விட்டனர் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வடிகால்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.
கண்டி ஹேவாவிட தேர்தல் தொகுதியில் உள்ள பின்னவல கிராமத்தில் 500 குடும்பங்களுக்கான குடிநீர் திட்டத்தை பாவனையாளர்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து உரை நிகழ்த்தும்போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்
இந்த நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதிலும் இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதில் , மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் முன்னாள் ஜனாதிபதி அசமந்தமாகவே செயற்பட்டார். இந்த நாட்டில் ஏற்பட்ட வெவ்வேறு வகையான பல இனவாத நடவடிக்கைகளை அவர் கண்டு கொள்ளவில்லை . இந்த விடயங்களை கட்டுப்படுத்துமாறு அவருடன் பல தடவைகள் நான் பலத்த விவாதத்தை நடாத்தியுள்ளேன், பலமுறை சண்டை பிடித்துள்ளேன். இந்த இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துங்கள், இதனை தொடர அனுமதிக்க வேண்டாம் மக்கள் மிகுந்த அச்சத்துடனும் கலக்கத்துடனும் இருக்கிறார்கள் மக்களின் இந்த அச்சம் பற்றி நேர்மையாக விசாரித்துப் பாருங்கள் இந்த அச்சத்தை போக்கும் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையை யோசியுங்கள் இருந்தும் அவர் அதனை கணக்கில் கொள்ளவில்லை மாறாக யுத்தம் நிறைவடைந்து விட்டது இனிமேல் மக்கள் நம்முடன் இருப்பார்கள் எனும் நிலையிலேயே அவர் செயற்பட்டார் ஆனால் மக்கள் அவர்மீது வைத்திருந்த நம்பிக்கை விரைவிலேயே இல்லாமல் போனது அத்தோடு சர்வதேச அழுத்தம் நமது நாட்டின் மீது வெகுவாக பாதிப்பை உண்ணு பண்ணியது ஐரோப்பிய யூனியன் நமக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தது இந்த பல்வேறு பட்ட தடைகளில் இருந்து நமது நாட்டை இந்த நல்லாட்சி அரசாங்கம் மீட்டு வருகிறது அதற்காக அதிமேதகு ஜனாதிபதி கவுரவ மைத்திரி பால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோர் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றனர். இந்த நல்லாட்சி அரசாங்கம் மக்களின் சுகங்களையும் துக்கங்களையும் நன்றாக உணர்ந்தே செயலாற்றுகிறது.
இன்றைய இந்த வேலைத்திட்டமானது பூர்த்தி செய்யப்பட்டு பொது மக்களுக்கு பாவனைக்காக வழங்குவதில் மிகுந்த சந்தோசம் அடைகிறேன் இந்த வேலைத்திட்டத்தின் பின்னணியில் நீண்ட வரலாறு இருக்கிறது. இந்த பிரதேசத்து மக்கள் பாரிய அளவில் ஆர்ப்பாட்டங்ள் செய்து தமது உரிமையை பெற்றுக்கொள்ள போராடினார்கள் அவர்களின் விடாமுயற்சியும் இந்த பிரதேசத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி கோன்கஹகே அவர்களின் தொடர்ச்சியான முயற்சியுமே இந்த விடயம் விரைவில் சாத்தியமாக காரணமாகும். இப்போது தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள குடிநீருக்கான தீர்வானது இன்னும் சில மாதங்களில் நிரந்தரமான தீர்வாக அமையும் வகையில் அமையும் அதற்கான பணிகளை எனது அமைச்சின் அதிகாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள் இந்த ஆண்டில் முன்னரைவிடவும் அதிகமான தொகை எமது அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது அதற்கான காரணம் குடிநீர் வசதியின்றி தவிக்கின்ற மக்களுக்கு அதனை வழங்க வேண்டும் என்பதே எனக் கூறினார்.
n10




