செய்திகள்

கடும் மழைக்கு மத்தியிலும் மூன்றாவது நாளாக தொடர்ந்த காணாமல் போன உறவுகளின் உண்ணாவிரதம்! சிலரின் உடல் நிலை பாதிப்பு

வவுனியாவில் காணாமல் போன உறவுகளினால் திங்கள் கிழமை ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமானது கடும் மழை, குளிருக்கு மத்தியிலும் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

காணாமல் போனவர்களின் உறவுகள் 14 பேர் சாகும் வரையிலான தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் வவுனியா தபால் நிலையம் அருகில் ஈடுபட்டு வருகின்றனர்.

பகல் பொழுதில் பலரும் வருகை தந்து அவர்களுக்கு ஆதரவாக இருந்த போதும் இரவுப் பொழுதை அவர்கள் இயலாத நிலையிலும் தனிமையில் கழிக்க வேண்டியிருந்தது. கடும்மழை, கடும் குளிர் என்பவற்றுக்கு மத்தியில் இரவுப் பொழுதை அவர்கள் தனிமையில் கழித்துள்ளனர். உண்ணாவிரததில் ஈடுபடும் சிலரது உடல்நிலை பலவீனம் அடைந்து வருகிறது. அவர்கள் சோர்வடைந்த நிலையில் உண்ணாவிரத மேடையில் படுத்த நிலையில் தமது போராட்டத்தை தொடர்கின்றனர். தமக்கான உரிய பதிலை இந்த அரசாங்கம் வழங்காத பட்சத்தில் தாம் இறப்பதற்கும் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமது பிள்ளைகளையும் விடுவிக்குமாறு கோரி இவர்களுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரு தமிழ் அரசியல் கைதிகளின் தாய்மார் இவர்களுடன் இணைந்து இன்று முதல் (25.01) தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன், சிறிரெலோ கட்சியின் இளைஞர் அணித் தலைவர் ப.கார்த்தீபன், மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர் செபமாலை, ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட இணைப்பாளர் கருணாதாச ஆகியோர் இவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

பொலிசாரும் உண்ணாவிரதத்தில் ஈரந்தவர்களின் விபரங்கள் மற்றும் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் பதிவு செய்திருந்தனர்.

IMG_2552 IMG_2556 (1) IMG_2575

N5