செய்திகள்

காணாமல் போனோரின் உறவுகளுக்கு ஆதரவாக சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணவிரதம்

வவுனியாவில் கடந்த திங்கள் கிழமை ஆரம்பித்த காணாமல் போன உறவுகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் ஆதரவு தெரிவித்து அடையாள நாளை (26.01) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

கடந்த காலத்தில் இராணுவத்தினராலும், பொலிசாராலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் காணாமல் போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தமது விடுதலையை வலியுறுத்தியும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதன்படி வெலிக்கடை சிறைச்சாலை, அனுராதபுரம் சிறைச்சாலை, மட்டக்களப்பு சிறைச்சாலை, யாழ்ப்பாணம் சிறைச்சாலை, கண்டிச் சிறைச்சாலை என்பவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளே போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் சிலவும் காணாமல் போனோரின் உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

N5