சிரியாவில் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவதற்காக டிரம்ப் ரஸ்யாவுடன் மோதவேண்டிவரும்- ஆய்வாளர்கள் எச்சரிக்கை
சிரியாவில் பாதுகாப்பு வலயங்களை உருவாக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள அதேவேளை அவர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தால் ரஸ்யாவின் விமானங்களை சிரியாவில் சுட்டு வீழ்த்தவேண்டியிருக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
டிரம்ப் சிரியாவிலிருந்து அகதிகள் வெளியேறுவதை தடுப்பதற்காக அந்த நாட்டில் பாதுகாப்பு வலயங்களை உருவாக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான உத்தரவு அடுத்த சில நாட்களில் வெளியாகவுள்ளது.
எனினும் டிரம்பின் பாதுகாப்பு வலயம் பொதுமக்களை பாதுகாப்தை நோக்கமாக கொண்டதா, மேலும் ரஸ்யா மற்றும் சிரியா விமானங்கள் அந்த பகுதியில் பறப்பது தடைசெய்யப்படுமா என்பது குறித்த விபரங்கள் இன்னமும் தெளிவாக தெரியவரவில்லை.
இதேவேளை ரஸ்யாவுடன் பேச்சுக்களை மேற்கொள்ளாமல் டிரம்ப் விமானபறப்பு தடை வலயத்தை அறிவித்தால் , அவர் தடையை மீறி பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்காக அனுமதியை அமெரிக்க படையினருக்கு வழங்கவேண்டியிருக்கும்.இதனை பராக் ஓபாமா செய்வதற்கு மறுத்துவந்தார்.
இதேவேளை டிரம்ப் இவ்வாறான நடவடிக்கையை எடுத்தால் அது அகதிகளை பாதுகாப்பதற்கான ஓரு யுத்தமாக அமையும் என வாசிங்டனின் ஹெரிட்டேஜ் மன்றத்தை சேர்ந்த மத்திய கிழக்கு ஆய்வாளர் ஜிம் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.ரஸ்யாவிடம் அதிநவீன வான்பாதுகாப்பு பொறிமுறைகள் உள்ளதை கவனத்தில் எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்கா இந்த திட்டம் குறித்து தன்னுடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள ரஸ்யா இந்த திட்டத்தினால் பாரதூரமான விளைவுகள் உருவாகலாம் என எச்சரித்துள்ளது.
இதேவேளை அமெரிக்காவினால் ஏற்படுத்தப்படுகின்ற பாதுகாப்பு வலயங்களை கண்காணிப்பதற்கு அமெரிக்க படையினர் அவசியம் என சுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளர்கள் குறிப்பிட்ட பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் அமெரிக்காவிற்கு குறிப்பிட்ட அளவு படையினர் அவசியம் எனவும் தெரிவித்துள்ளனர்.
உத்தேச பாதுகாப்பு வலயம் டிரம்ப் நிர்வாகத்திற்கு பாரிய தலைவலியாக மாறும் சிரியாவிற்குள் மேலும் பிரச்சினைகளை உருவாக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.




