செய்திகள்

9 ஆம் திகதி முதல்வராகிறார் சசிகலா: அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராகவும் தேர்வு

அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து வி.கே.சசிகலா விரைவில் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போது இத்தெரிவு இடம்பெற்றது.

அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக வி.கே.சசிகலாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதை அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் வழிமொழிந்தனர். முன்னதாக போயஸ் தோட்ட இல்லத்தில் முதல்வர் ஓபிஎஸ், சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். டிசம்பர் 31-ல் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். முதல்வர் பொறுப்பையும் சசிகலா ஏற்க வேண்டும் என சில அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் வெளிப்படையாகவே கோரிக்கை வைத்து வந்தனர்.

கட்சியும், ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, சசிகலாவை முதல்வராக்கும் முயற்சி நடந்தது. அமைச்சர்கள் சிலரே அதற்கு அடித்தளம் இட்டனர்.

இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடப்பதாக தகவல் வெளியானது. ஊருக்குச் செல்ல இருந்த எம்.எல்.ஏக்களை சென்னையில் தங்கியிருக்குமாறு அதிமுக தலைமை அறிவுறுத்தியது. ஊருக்குச் சென்றவர்களை உடனடியாக சென்னைக்கு வருமாறும் கூறப்பட்டது. எம்.எல்.ஏக்களிடம் ஒப்புதல் கடிதம் பெற்று, விரைவில் சசிகலா முதல்வராக பொறுப்பேற்கவே இந்த நடவடிக்கை என கட்சி வட்டாரங்களில் கூறப்பட்டது.

இந்நிலையில் அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக வி.கே.சசிகலாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதை அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் வழிமொழிந்தனர். அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, விரைவில் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அதிமுக தலைமையின் இந்த திடீர் நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நெருக்கடி ஏற்படும் சூழல் உருவானால், சக்தி அளிப்பதாக திமுகவின் துரைமுருகன் பேசியது, சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஸ்டாலின் அளித்த பேட்டியில், ”தமிழக அரசியல் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் முதல்வராக தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை. எந்த ஒரு முடிவையும் ஜனநாயக விதிகளுக்குட்பட்டே திமுக எடுக்கும்” என்று கூறியுள்ளார்.இதனால் திமுகவின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். :06