‘அறிக்கை ஒத்திவைப்பு அரசுக்கு பெரு வெற்றி’: மைத்திரி பெருமிதம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த அறிக்கை ஆறு மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளமை புதிய அரசாங்கம் பெற்றுக்கொண்ட பாரிய வெற்றியாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் தனக்கு எந்தவிதமான உடன்படிக்கையும் இல்லை என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மிக நீண்ட ஆயுட் காலத்துக்காக கசப்பான உண்மைகளை பேசவேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்கவில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினங்களில் நடைபெற்ற இரண்டுநாள் செயலமர்வில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு மேலும் குறிப்பிடுகையில், “ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலவலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை விவகாரம குறித்த அறிக்கை ஆறு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளமை புதிய அரசாங்கம் பெற்றுக்கொண்ட பாரிய வெற்றியாகும்.
புதிய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு உள்ளக பொறிமுறை உள்ளிட்ட பல்வேறு விடயங்களினால் சர்வதேசம் இந்த நம்பிக்கையை வைத்துள்ளது. அதன்மூலம் புதிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு சர்வதேசம் செவிசாய்த்துள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியுடன் தனக்கு எந்தவிதமான உடன்படிக்கையும் இல்லை. யதார்த்தபூர்வமான விடயங்கள் எப்போதும் இனிமையாக இருக்காது. ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மிக நீண்ட ஆயுட் காலத்துக்காக கசப்பான உண்மைகளை பேசவேண்டியுள்ளது.
சுதந்திரக் கட்சியில் மாற்றம் வரவேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே அந்த மாற்றத்துக்கு ஏற்ப செயற்படாவிடின் சுதநதிரக் கட்சி எதிர்வரும் 10 முதல் 15 வருடங்களுக்கு எதிர்க்கட்சியில் இருக்கவேண்டிய நிலை ஏற்படும் என்றார்.




