“தனுஷ் எங்கள் மகன் தான்; ஆதாரங்கள் உள்ளன”; – மேலூர் தம்பதி
ஆனால் அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை என்றும், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் நடிகர் தனுஷ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவுக்கு கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கதிரேசன்-மீனாட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருப்பதாவது-
எந்தவித ஆதாரமும், ஆவணங்களும் இல்லாமல் இந்த வழக்கை நடிகர் தனுஷ் தாக்கல் செய்துள்ளார். அவர் எங்கள் மகன் இல்லை என்றும், தான் ஒரு முன்னணி நடிகர் என்றும் கூறியிருக்கிறார்.
சென்னை எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரியில் அவர் பிறந்ததாகவும், சாலிக்கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்ததாகவும், தனது இயற்பெயர் வெங்கடேஷ்பிரபு என்றும் அவர் கூறியிருப்பது, பொய்.
அவர் எங்களுடைய மகன் தான் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. உறவினர்களும் வாக்குமூலம் கொடுக்க தயாராக உள்ளார்கள். அவருடைய சிறுவயது நண்பர்களும் சாட்சி சொல்வார்கள். எழும்பூர் ஆஸ்பத்திரியில் பிறந்ததாக அவர் தாக்கல் செய்துள்ள பிறப்புச் சான்றிதழ் பொய்யானது.
அவரை நாங்கள் இங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படிக்க வைத்தோம். பின்னர் திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம்பிள்ளை-சீதையம்மாள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர்த்தோம். அங்கு விடுதியில் தங்கியிருந்து ஒரு மாதம் மட்டும் படித்த அவர், பின்னர் சென்னைக்கு சென்று சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டார். அப்போது நாங்கள் தான் அவருடைய உண்மையான பெற்றோர் என்று தனுஷே பத்திரிகைகளில் பேட்டி கொடுத்துள்ளார்.
எங்களுக்கு வாழ்வாதாரம் எதுவும் இல்லாததால் தான் பராமரிப்புத் தொகை கேட்டு வழக்கு தொடர்ந்தோம். எனவே எங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்கவும், அவர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனுக்கள் மீதான விசாரணையை 9-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.




