கல்விக்காக பல நிதி ஒதுக்கீடுகள் நடந்தாலும் பாடசாலைகளில் அபிவிருத்தியில்லை
கல்விக்காக பல்வேறு ஒதுக்கீடுகள் செய்யப்பட்ட போதிலும் பாடசாலைகளில் நிலவும் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படாதிருப்பது பாரதூரமான பிரச்சினையாகுமெனவும், நிதியொதுக்கீடுகளை செலவிடவேண்டிய முன்னுரிமைகளை இனங்காண்பதற்கு கல்வி அமைச்சு தலையீடு செய்யவேண்டுமெனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்கா கல்லூரியின் பொன்விழா நிகழ்வில் இன்று (10) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டின் மாகாண சபைகளுக்கான நிதி தேவைக்கு அதிகமானது என்பதனால் அதனை வேறு விடயங்களுக்கு மாற்றுவதற்கு சில மாகாண கல்வி அமைச்சர்கள் கேட்கின்றனர். அந்தளவுக்கு நிதி கிடைத்திருந்தும் பெரும்பாலான மாகாண பாடசாலைகளில் கழிவறைகள், தளபாட தேவைகள் முழுமைப்படுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
1967 ஆம் கொழும்பில் பிரபல ஆண்கள் பாடசாலைகளில் நிலவிய நெருக்கடிக்கு தீர்வாக ஐ.எம்.ஆர்.ஈரியகொல்ல அவர்களது தலைமையில் கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்கா கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு, அதனை குறுங்காலத்தினுள் மிகவும் பிரபலமான ஆண்கள் பாடசாலையாக மாற்றுவதில் அக்கல்லூரியின் முதலாவது அதிபர் ஐ.ஆர்.ரி.அலஸ் வெற்றிபெற்றார். சகல இனங்களையும், மதங்களையும் சேர்ந்த பிள்ளைகள் சமமாக கல்வி பெறக்கூடிய மற்றும் சிங்கள, தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கல்வி பெறக்கூடிய முதன்மை ஆண்கள் பாடசாலையான டீ.எஸ்.சேனநாயக்கா கல்லூரி இன, மத நல்லிணக்கத்தின் முன்னுதாரணம் வழங்கும் கல்வி நிறுவனமாகும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




