செய்திகள்

தமிழ் மக்களுக்கு புதிய அரசியல் தலைமை தேவை: எழுக தமிழில் சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்களுக்கு இன்று புதிய அரசியல் தலைமையொன்று தேவையான நிலையில் உள்ளதாக யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளருமான சுரோஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற கிழக்கின் எழுக தமிழ் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இங்கு எழுக தமிழ் பேரணி நடக்ககூடாது என்று பல்வேறு தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டுவந்தனர்.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேலைசெய்தார்கள்,இன்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேலைசெய்தார்கள்.எழுக தமிழ் நிகழ்வுக்காக நேற்றுகூட பொலிஸ் நிலையம் சென்று தடையுத்தரவு கோரப்பட்டிருந்தது.

அனைத்து தடைகளையும் உடைத்து மக்கள் ஆயிரக்கணக்கில் அணிதிரண்டுள்ளார்கள் என்றால் தமிழர்களின் இரத்ததில் இருந்து பிரிக்கமுடியாத உரிமைகளைப்பெற்றுக்கொள்வதற்காகவே தவிர வேறு காரணங்களுக்காக அல்ல என்பதை குறுகிய அரசியல் இலாபங்களுக்காக சிந்திப்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

யாழ்குடாவில் எழுக தமிழ் நடைபெற்றவேளையிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றன.இதனை குழப்ப முனைந்த சிலர் மூக்குடைபட்டனர்.இங்கும் அது நடைபெற்றது.மூக்கும் உடைபட்டும் உள்ளது.எதிர்காலத்தில் இவ்வாறான தவறான சிந்தனைகளுக்கு இங்குள்ளவர்கள் இடமளிக்ககூடாது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எழுக தமிழ் பேரணி தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் அவகாசங்கள் வழங்கப்பட்ட நிலையில் ஒரு துரும்புகூட நகர்த்தாத இந்த அரசாங்கம் இன்னும் இரண்டு வருடகால அவகாசத்தினை எதிர்வரும் மார்ச் மாதம் கோரவுள்ளது.இதன்மூலம் எதனையும் புடுங்கமுடியாது. இவர்களினால் தமிழர்களுக்கு எதனையும் செய்யமுடியும்.

எங்களுக்கு தேவை சர்வதேச விசாரணையை தவிர வேறு எந்த நியாயத்தினையும் இந்த அரசாங்கத்திடம் எதிர்பார்க்கமுடியாது என்பதை முதலில் எங்களது தலைவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இரண்டு வருடமாக அவர்களுடன் இணைந்து செயற்பட்ட நிலையிலும் தமிழ் தலைவர்களினால் எதனையும் சாதிக்கமுடியவில்லை.நாங்கள் ஒன்றாக சேர்ந்து ஒன்றாக சென்று எதிர்க்கட்சி தலைவராக இருப்போம்.ஆனால் ஆளுங்கட்சியுடன் இணைந்து செயற்படுவோம் என்று கூறுபவர்களினால் தமிழ் மக்களின் எந்த கோரிக்கையினை தீர்க்கமுடிந்தது என்பதை நாங்கள் சிந்திக்கவேண்டும்.

வவுனியாவில் காணாமல்போன உறவினர்கள் நடாத்திய போராட்டத்தினை தொடர்ந்து நேற:று அவர்கள் அலறிமாளிகைக்கு அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டுள்ளது.அந்த பேச்சுவார்த்தையில் எமது சில பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.அங்கிருந்த காணாமல்போன உறவினர்கள் அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றுமாறு கோரியுள்ளனர்.அவ்வளவு தூரம் நம்பிக்கையிழந்த நிலையிலேயே உள்ளனர்.

கேப்பாபுலவு பகுதியில் பத்து நாட்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் போராடிக்கொண்டுள்ளனர்.அந்த விமானப்படைக்கு முன்பாக இரவு பகலாக இந்த போராட்டம் நடைபெற்றுவருகின்றது.ஆனால் எங்களது தலைமை எங்கே போனது.தமிழ் மக்களுக்கு புதிய தலைமையொன்று தேவையாகவுள்ளது.இன்று புதிய தலைவர் ஒருவர் தேவையாகவுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகள்,பிரச்சினைகளுக்கான தீர்வினைப்பெற்றுக்கொள்ளவேண்டுமாகவிருந்தால் தமிழ் மக்கள் இந்த மண்ணில் கௌரவமாக வாழவேண்டுமானால் வடகிழக்கு இணைந்த பகுதியில் தமிழ் மக்கள் பாதுகாப்புடன் வாழவேண்டுமானால் அவர்களின் உரிமைகள் பெற்றுக்கொள்ளப்படவேண்டும். நாங்கள் 40வருடமாக போராடி அனைத்தையும் இழந்த நிலையில் இன்னும் போராடவேண்டிய நிலையில் உள்ளோம்.