அரசாங்கம் கூறும் விலைக்கு அரிசி கிடைக்கவில்லை! அரிசிக்கும் தட்டுப்பாடு மக்கள் விசனம்
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் அறிவித்துள்ள போதும் அந்த விலைக்கு மக்களால் அரிசியை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கட்டுப்பாட்டு விலை தொடர்பாக வர்த்தமானி அறிவிப்பின் பின்னர் பல பிரதேசங்களில் அரிசிக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தையில் அரிசியின் விலை கடந்த காலங்களில் வேகமாக அதிகரித்து சென்றதுடன் சில அரசி வகைகள் 100 ரூபாவுக்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டன. இந்நிலையில் கடந்த வாரம் ஒன்று கூடிய வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு அரிசிக்கான ஆகக் கூடிய கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு தீர்மானித்திருந்தது.
இதன்படி இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த புதன்கிழமை இரவு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது. அந்த வர்த்தமானியின் பிரகாரம் ஒரு கிலோ கிராம் சம்பா அரிசியில் விலை 80 ரூபாவாகவும் , நாடு அரிசியின் விலை 72 ரூபாவாகவும் மற்றும் சுது கெகுலு 70 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
எவ்வாறாயினும் இந்த விலைகளுக்கு கடைகளில் அரிசியை பெற முடியாதுள்ளதாகவும் பழைய விலைக்கே அரிசி விற்பனையாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தாங்களுக்கு பழைய விலைக்கே மொத்த அரிசி விற்பனை நிலையத்திலிருந்து கிடைப்பதாகவும் இதனால் தமக்கு புதிய விலையில் விற்க முடியாதிருப்பதாகவும் கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை தாம்மிடம் கையிருப்பில் இருக்கும் அரிசி பழைய விலைக்குறியவை எனவும் இதனால் புதிய விலைக்கு விநியோகிக்க முடியாதுள்ளதாகவும் எமக்கு குறைந்த விலையில் கிடைக்கும் பட்சத்தில் எமக்கும் குறைந்த விலையில் விற்க முடியுமெனவும் மொத்த அரிசி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் நாட்டில் பல பிரதேசங்களில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது. எவ்வாறாயினும் அரிசி பதுக்கல்களுக்கு இடமளிக்கப்படாது எனவும் அவ்வாறாக அரிசியை பதுக்கி வைத்திருப்போர் மற்றும் குறிப்பிட்ட விலைக்கு மேல் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.-(3)




