தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைக்க சதி –கிழக்கு முதலமைச்சர் குற்றச்சாட்டு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை துண்டாக்கவேண்டும்,உடைக்கவேண்டும் என்று மறைமுகமாக இந்த நாட்டு சக்திகளும் வெளிநாட்டு சக்திகளும் ஊடுறுவியுள்ள வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் உடைப்பதற்கு சதிகள் நடைபெறுகின்றதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் இரு சமூகங்களில் குரல்களும் பலப்படுத்தப்பட்டு அரசியல் உரிமையைப்பெறுவதற்காக ஒன்றுபட்டு குரல் எழுப்பவேண்டும் எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தும்பங்கேணியில் அமைக்கப்பட்டுள்ள அரச ஆடு மரபுரிமை மேம்பாட்டு நிலையம் மற்றும் ஆடு உற்பத்தி பண்ணை என்பனவற்றின் திறப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
கிழக்கு மாகாண விவசாய,கால்நடைகள் அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசிர் அகமட் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் கலப்பதி,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராஜா,ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர்.
நல்லிண ஆடுகளை உற்பத்திசெய்வதற்கும் சந்தைப்படுத்துவதற்குமான நிலையமாக இது இயங்கவுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் முதலாவது ஆடு உற்பத்தி நிலையமாக இது திறந்துவைக்கப்பட்டுள்ளதுடன் 200க்கு மேற்பட்ட ஆடுகளை ஒரு வருடத்திறகு உற்பத்திசெய்யும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கால்நடை அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிழக்குமாகாண குறித்தொதுக்க்கப்பட்ட நன்கொடையின் கீழ் 16மில்லியன் ரூபா செலவில் வேல்விசன் அமைப்பின் உதவியுடன் கிழக்கு மாகாண விவசாய,கால்நடைகள் அபிவிருத்தி அமைச்சினால் இந்த நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர்,
இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தியதன் பின்னர் ஒரு வருடம் மட்டும் கிழக்கு மாகாணசபைக்கு கொஞ்சம் அதிக நிதியொதுக்கீடுசெய்யப்பட்டது.2017ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டில் மீண்டும் பழைய நிலைமை ஏற்பட்டுள்ளது.நிதியொதுக்கீடானது அரைவாசியாக குறைக்கப்பட்டுள்ளது.
அரசியல் அதிகாரங்கள்,அதிகாரப்பரவலாக்கல் தொடர்பில் உரையாடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்ற கோசத்திற்கு பெரும்பான்மை மக்கள் உட்பட அனைத்து இன மக்களும் வாக்களித்திருந்தனர்.வெறுமனே சிறுபான்மை சமூகம் மட்டும் வாக்களிக்கவில்லை.அந்த பொறுப்பை இந்த அரசாங்கம் நிறைவேற்றுகின்றதா என்ற கேள்வி எங்களுக்கள் எழுகின்றது.
அரசியல் அதிகாரத்தை தருவதற்கு பதிலாக இருக்கும் அதிகாரம் பறிக்கப்படுகின்றதா என்று நினைக்கும் அளவுக்கு நடவடிக்ககைள் மாற்றமடைந்துள்ளன.திவிநெகும சட்டத்திற்கு பின்னர் விசேட அபிவிருத்தி சட்ட மூலம் கொண்டுவரப்படுகின்றது எங்களது அதிகாரங்களை பறிப்பதற்காக.அதேபோன்று பல்வேறு சட்ட மூலங்கள் மாகாணங்களின் அதிகாரங்களை பறிப்பதற்காக கொண்டுவரப்படுகின்றன.தற்போது உள்ள 13வது அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒட்டுமொத்த அரசியல் அதிகாரத்தினை தருவதற்கு பதிலாக பேச்சுவார்த்தை என்று கூறிக்கொண்டு இழுத்தடித்துக்கொண்டுசெல்கின்ற நிலையே உள்ளது.
13வது அரசியலமைப்பில் காணி அதிகாரங்கள் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இதனை நடைமுறைப்படுத்துவதற்கு எந்த பேச்சுவார்த்தைகளும் தேவையில்லை.இந்த இரண்டு வருடத்திற்குள் இவற்றினையாவது தருவதற்கு பதிலாக இருப்பதை பறிக்கின்ற நல்லாட்சியாக இருக்கின்ற துரதிர்ஸ்டத்தை நாங்கள் சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது.
இந்த நாட்டில் இன்று நான்கு பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்துள்ளனர்.ஒருபோதும் இந்த நாட்டில் ஒன்றிணைய மாட்டார்கள் என்று கூறப்பட்ட ஐ.தே.க.தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் ஒன்றிணைந்துள்ள வேளையில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஹ{ப் ஹக்கீம் ஆகிய நான்கு தலைமைகளும் ஜனநாயக வழியில் தீர்வுகாணவேண்டும் உளப்பூர்வமாக ஒன்றிணைந்துள்ள இந்த காலத்தில் தீர்வு எட்டப்படவில்லையென்றால் எப்போது எட்டப்படும் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் உள்ளது.
இந்த நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் இந்த நாட்டில் சிறுபான்மை சமூகம் திட்டமிட்;டு நசுக்கப்பட்ட வரலாறு இருந்துவருகின்றது.அவற்றுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் இந்த காலகட்டத்தில் அவற்றுக்கு முற்றுபுள்ளிவைக்காமல் சிறுபான்மை கட்சிகளை உடைப்பதற்கான சதி நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படும் பெரிய கட்சிகளில் ஒன்றான தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைப்பதற்கான சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை துண்டாக்கவேண்டும்,உடைக்கவேண்டும் என்று மறைமுகமாக இந்த நாட்டு சக்திகளும் வெளிநாட்டு சக்திகளும் ஊடுறுவியுள்ள வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் உடைப்பதற்கு சதிகள் நடைபெறுகின்றதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சிறுபான்மை சமூகம் மிகவும் தெளிவாக இருக்கவேண்டிய காலகட்டமாகும்.இரண்டு வருடாக வெண்ணை திரண்டுவருகின்றது என்று சொல்லப்பட்டாலும் எதனையும் காணமுடியவில்லை.
இந்த காலகட்டத்தில் தமிழ்-முஸ்லிம் சமூகங்கள் ஒற்றுபட்டு குரல்கொடுக்கவேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் .ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து செல்லவேண்டிய தேவை இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ளது.
ஒன்றுபட்ட குரலில் நாங்கள் ஒலிக்கும்போது இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் பலமிக்க ஒரு சக்தியாகவும் இந்த நாட்டில் நிரந்தரமான ஒரு தீர்வினை ஏற்படுத்துவதற்கான ஒரு குரலாக அந்த குரல் அமையும்.
இரா.சம்பந்தன் ஐயாவின் காலத்தில் தீர்வுகள் எட்டப்படவேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது.தீர்வுகள் இழுத்தடிக்கப்படாமல் சரியான தீர்வாக உடனடியாக வழங்கவேண்டிய பொறுப்பு அனைவரும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இருக்கின்றது.அவர் அதனைசெய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
தமிழ் -முஸ்லிம் சமூகம் மிகவும் அவதானமாக இரு சமூகத்தின் உறவுகள் பலப்படுத்தப்பட்டு இரு சமூகங்களில் குரல்களும் பலப்படுத்தப்பட்டு அரசியல் உரிமையைப்பெறுவதற்காக ஒன்றுபட்டு குரல் எழுப்பவேண்டும்.

n10




