செய்திகள்
சூப்பர்ஸ்டார் டைட்டிலில் சிவகார்த்திகேயன்
‘ரெமோ’ படத்தை தயாரித்த ஆர்.டி.ராஜா தனது 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் சார்பில் புதிய படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
சினேகா, பகத் பாசில், பிரகாஷ்ராஜ், தம்பிராமய்யா, சதீஷ், ரோபோ சங்கர், பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். மோகன் ராஜா டைரக்டு செய்கிறார். ‘தனி ஒருவன்’ படத்தை அடுத்து அவர் டைரக்டு செய்யும் படம், இது. படத்துக்கு பெயர் சூட்டப்படாமலே படப்பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து நடைபெற்றது.
இப்போது இந்த படத்துக்கு, ‘வேலைக்காரன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதை டைரக்டர் மோகன் ராஜா நேற்று அறிவித்தார்.
‘வேலைக்காரன்’ என்ற பெயரில் ரஜினிகாந்த் நடித்து, 1987–ம் ஆண்டில் ஒரு படம் வெளிவந்தது. அந்த படத்தில், ரஜினிகாந்த் ஜோடியாக அமலா நடித்து இருந்தார். எஸ்.பி.முத்துராமன் டைரக்டு செய்திருந்தார். கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்து இருந்தது.
கவிதாலயா நிறுவனத்தின் அனுமதி பெற்று, சிவகார்த்திகேயனின் புதிய படத்துக்கு, ‘வேலைக்காரன்’ என்ற பெயர் சூட்டப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தெரிவித்தார். ‘‘வியர்வை சிந்தி உழைப்போரின் உயர்வை சொல்லும் படம், இது. எனவே ‘வேலைக்காரன்’ என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. படத்தின் ‘லோகோ’ தொழிலாளர் தினமான மே 1–ந் தேதி வெளியிடப்படும். படம், ஆகஸ்டு 25–ந் தேதி திரைக்கு வரும்’’ என்று அவர் கூறினார்.
N5




