கீத் நொயார் மீதான தாக்குதல்: மேலும் சில இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படவுள்ளார்கள்
ஊடகவியலாளர் கீத் நோயார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சில இராணுவ வீரர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெறுவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
சம்பவம் தொடர்பிலான விசாரணையின் முன்னேற்றம் குறித்து கல்கிசை பிரதம நீதவான் மொஹமட் மிஹார் முன்னிலையில் தெளிவுபடுத்தியபோதே குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இதனைக் கூறியது.
ஊடகவியலாளர் கீத் நோயார் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முதலில் கைது செய்த மேஜர் உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் மூவரையும் கல்கிசை மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
சந்தேகநபர்கள் முகத்தை மறைக்காமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனால், அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தவுள்ள சந்தேகநபர்களை ஏன் அவ்வாறு ஆஜர்படுத்தினீர்கள் என மேலதிக நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளிடம் வினவினார்.
இந்த மூன்று சந்தேக நபர்களையும் அடையாள அணிவகுப்பிறகு உட்படுத்துமாறு இதற்கு முன்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்த விடயம் தமக்கு தெரியாது என சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படும் சந்தேகநபர்களை அடையாளம் காட்டுவதற்கு ஊடகவியலாளர் கீத் நோயார் நீதிமன்றத்திற்கு வருவாரா என விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளிடம் வினவுமாறு சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வினவினர்.
இது குறித்து கீத் நோயாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்தது. குறித்த சந்தேகநபர்கள் மூவரையும் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் இதன் போது உத்தரவிட்டார்.:-06




