தென்பகுதி இளைஞர், யுவதிகள் வவுனியா பூந்தோட்டம் முகாமுக்கு விஜயம்: 20 வருட முகாம் வாழ்க்கை கண்டு வேதனை
தென்பகுதியில் இருந்து வருகை தந்த இளைஞர், யுவதிகள் மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் வவுனியா பூந்தோட்டம் முகாமில் தங்கியுள்ள மக்களை நேற்றைய தினம் (25.02) பார்வையிட்டதுடன் அவர்களது பிரச்சனைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர்.
அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பின் ஏற்பாட்டில் தெற்கின் மாத்தறை, மொனராகலை ஆகிய பகுதிகளில் இருந்து வருகை தந்த சிங்கள மற்றும் தமிழ் இளைஞர், யுவதிகள் 20 பேர் வவுனியா பூந்தோட்டம் முகாமில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் தங்கியுள்ள 110 குடும்பங்களையும் பார்வையிட்டதுடன் அவர்களது பிரச்சனைகள் தொடர்பிலும் கேட்டறிந்தனர்.
இதன்போது அம் மக்களின் அடிப்படை வசதிகளின் நிலை, மாணவர்களின் கல்வி நிலை, வாழக் கூடிய சூழல் தொடர்பில் ஆராய்ந்த இளைஞர், யுவதிகள் அம் மக்களின் நிலைமையைப் பார்த்து தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
முகாமைப் பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவித்த அவ் இளைஞர், யுவதிகள்:
பூந்தோட்டம் முகாமில் தற்காலிக கொட்டகைக்குள் தங்கியுள்ள மக்களைச் சந்தித்தோம். அவர்கள் கடந்த 20 வருடத்திற்கு மேலாக இதில் இருக்கிறார்கள். அவர்களுக்காக ஒழுங்கான வீடு, மலசல கூடம், மின்சாரம், குடிநீர் என எந்த அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் இருக்கிறார்கள். இங்குள்ள மாணவர்கள் கூட கல்வியைத் தொடர முடியாத நிலையில் பாடசாலை கல்வியை இடை விடுபவர்களாகவுள்ளனர். இவ்வாறான துன்பங்களுடன் யுத்தம் முடிவடைந்து 8 வருடங்களின் பின்னும் மக்கள் வாழ்வது தொடர்பில் உண்மையில் எம்மைப் போன்ற தென்பகுதிளில் வாழும் பலருக்கும் தெரியாது. உண்மையில் இங்குள்ள மக்களின் நிலமை மற்றும் வடக்கின் உண்மை நிலை தொடர்பில் நிச்சயமாக தெற்கில் தெரியப்படுத்தி மக்கள் மத்தியில் உள்ள சில தவறான எண்ணங்களை நீக்க நாம் முயற்சிப்போம். இங்குள்ள மாணவர்கள் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் கல்வியைத் தொடர முடிந்த உதவிகளையும் பெற்றுக் கொடுக்க முயல்வோம் எனத் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த இளைஞர், யுவதிகள் முல்லைத்தீவுக்கும் சென்று கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் காணி விடுவிப்பு கோரி போராடும் மக்களுக்கும் தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.


N5




