ஐ.நா அலுவலகம் மற்றும் தூதுவராலயங்கள் முன் காணாமல் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்
வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகம் மற்றும் அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா நாட்டு தூதுவராலயங்கள் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இன்று குறித்த அலுவலகம் மற்றும் தூதுவராலயங்கள் முன்பாக ஒரு மணிநேரம் இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையில் வடக்கு, கிழக்கு பகுதியைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவுகள் நூறு பேர் வரையில் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இது குறித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் வடக்கு, கிழக்கு இணைப்பாளர் கி.தேவராசா கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்களாகிய நாம் இன்று ஐ.நா அலுவலகம் முன்பாகவும் குறித்த தூதுவராலயங்கள் முன்பாகவும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியதுடன் மகஜர் ஒன்றினையும் கையளித்தோம். அரசாங்கத்தின் கால நீடிப்பு கோரிக்கைக்கு அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா ஆதரவு வழங்கக் கூடாது எனவும் நாம் அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். காணாமல் செய்யப்பட்டோர் தொடர்பில் இந்த அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும். அதற்கு ஐ.நா வலியுறுத்த வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கு மேலும் கால நீடிப்புக்களை வழங்காது இப் பிரச்சனைகள் தொடர்பில் ஐ.நா நேரடியாக கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் எனவும் வலியுறத்தி இருந்தோம் எனத் தெரிவித்தார்.

N5




