செய்திகள்

நீதிசெயற்பாடுகளை முன்னெடுப்பதில் தங்கள் உறுதிப்பாடு குறையவில்லை என்று மங்கள ஐ. நா மனித உரிமைகள் சபையில் உரை

நிலைமாற்றுக்கால நீதிசெயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்த இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாடு குறைவடையவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச சமூகத்திற்கு உறுதியளித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் 2015 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கியதற்காக அரசாங்கத்தை இன்றும் இலங்கையில் பலர் விமர்சித்து வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எமது சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களினதும்,சர்வதேச சமூகத்தில் உள்ள எங்கள் நண்பர்கள் மற்றும் சகாக்களினதும் உதவியுடன்- பொறுமை , புரிந்துணர்வு . நிலையான, தொடர்ச்சியான,விடாமுயற்சியுடன் நல்லிணக்க செயற்பாடுகளை வெற்றிகரமானதாக்க முடியும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 34வது அமர்வில் செவ்வாய்கிழமை உரையாற்றுகையிலேயே இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையின் கதையை நன்கு அறிந்துள்ளது.பல வருட மறுப்பு, தனிமைப்படுத்தல்,தொடர்புகள் அற்று இருத்தல் என்பவற்றிற்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய ஐக்கிய அரசாங்கம் மனித உரிமைகள், நல்லாட்சி,சட்டத்தின் ஆட்சி,நீதி நல்லிணக்கம் போன்ற விடயங்களில் உருமாற்றும் போக்கை ஏற்படுத்தியது.

ஓரு வருட காலத்திற்கு முன்னர் அல்லது 15 மாதங்களிற்கு முன்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானமொன்றிற்கு இணை அனுசரணை வழங்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை இலங்கை எடுத்திருந்தது.இந்த நடவடிக்கைக்காக எங்கள் நாட்டில் பலர் எங்களை விமர்சித்தனர், இன்றும் விமர்சித்து வருகின்றனர்,சிலர் இதனை நாட்டிற்கு செய்த துரோகமாக பார்க்கின்றனர்.
நாங்கள் இந்த பயணத்தில் முன்னோக்கி செல்லும்அதேவேளை நாட்டின் இரு இனங்களிலும் உள்ள தீவிரவாத மற்றும் பின்னடைவை விரும்பும் சக்திகள் குறுகிய அரசியல் இலாபத்திற்காக தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.அவர்கள் கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் கண்டுள்ள முன்னேற்றங்களை பிடிவாதமாக ஏற்றுக்கொள்ள மறுத்துவருகின்றனர்.நாங்கள் அளவுக்கதிகமாக செயற்பட்டு விட்டதாகவோ அல்லது எதனையும் செய்யவில்லை என்றோ அவர்கள் வாக்குவாதம் செய்கின்றனர்.

2016 யூன் மாதம் 26 ம் திகதி நான் இங்கு உரையாற்றியதன் பின்னர்

பலவந்தமாக காணமற்போதலில் இருந்த அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது,உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலான கொள்கை மற்றும் சட்ட கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் சர்வதேச தராதரங்களை பின்பற்றி முன்னெடுக்கப்படுகின்றன இதில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.காணமற்போனவர்களிற்கான நிரந்தர அலுவலகத்தை ஏற்படுத்துவதற்கான சட்டமூலத்தை இலங்கை பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரும் சிறுபான்மையினத்தவர்கள் தொடர்பான ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர்களும் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

உண்மையை அறியும் ஆணைக்குழு குறித்த சட்டவரைபை அடுத்த இரண்டு மாதங்களிற்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்க எண்ணியுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதிகிடைக்கச்செய்வது குறித்த எமது தீர்மானம் தொடர்ந்தும் உறுதியாக உள்ளது.

இலங்கையில் சித்திரவதைகள் தொடர்கின்றன என்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் தீவிரமாக எடுக்கும் அதேவேளை சித்திரவதைகளை சிறிதளவும் சகித்துக்கொள்வதில்லை என்ற கொள்கையை அரசாங்கம் பின்பற்றுகின்றது என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

மக்களிற்கான எங்களது அர்ப்பணிப்புகள் தேர்தலில் எங்களிற்கு அழிக்கப்பட்ட ஆணைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நாங்கள் முன்னெடுத்துள்ள பயணம் சவால் மிகுந்தது.இந்த பயணம் வெற்றிகளும் சில பின்னடைவுகளும் கொண்டதாக காணப்படுகின்றது.தடைகள் மற்றும் தடங்கள்கல் காரணமாக காலத்திற்கு காலம் மாற்றுப்பாதைகளில் பயணிக்கலாம்,ஆனால் இலக்கும், அதனை எத்தனை தூரம் நடந்தும் அடைவதற்கான எமது உறுதிப்பாடும் மாறாது.

நிலைமாற்றுக்கால நீதிசெயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்த எங்கள் உறுதிப்பாடு குறைவடையவில்லை.எமது சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களினதும்,சர்வதேச சமூகத்தில் உள்ள எங்கள் நண்பர்கள் மற்றும் சகாக்களினதும் உதவியுடன்- பொறுமை , புரிந்துணர்வு . நிலையான, தொடர்ச்சியான,விடாமுயற்சியுடன் நல்லிணக்க செயற்பாடுகளை வெற்றிகரமானதாக்க முடியும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.