கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் வென்றது: நாளை காணிகள் கையளிப்பு
கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பில் தமது காணிகளை இராணுவம் வசமிருந்த மீட்கும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுக்கு வெற்றி கிட்டியுள்ளது. 84 குடும்பங்களிற்கு சொந்தமான காணிகள் நாளை காலை 11.00 மணிக்கு கையளிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி. குணபாலன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதன்பொருட்டு பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் நில அளவை திணைக்கள அதிகாரிகளினால் இன்று காலை அளவீடு செய்யப்பட்டுள்ளது.
நிலமீட்புக்காகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பிலவுக்குடியிருப்பு மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையிலேயே காணிகள் அளவீடு செய்யப்பட்டுள்ளன.
விமானப் படையினரிடமிருள்ள மக்களின் சொந்த காணிகள் விடிவிக்கப்படுவதால் இந்த மக்களுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட மாதிரிக் கிராமம் அரசாங்கத்தினால் மீளப்பெறப்படலாம் என்று கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
5க்கும் மேற்பட்ட உத்தியோகஸ்தர்களும் விமானப்படையின் உயர் அதிகாரிகளும் இணைந்து காணி அளவீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.





