வெலிக்கடை சிறைச்சாலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு
2012 நவம்பர் 9ஆம் திகதி கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த கைதிகளின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன மேலும் தெரிவிக்கையில்,
2012 நவம்பர் மாதத்தில் வெளிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 27 உயிரிழந்ததுடன் 20 பேர் படுகாயமடைந்திருந்தனர்.இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்கு 3 பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. இதன்படி அந்த குழு அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக நஷ்ட ஈடுகளை வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 16 பேருக்கு ஒருவருக்கு 20,00,000 ரூபா என்ற அடிப்படையிலுத் காயமடைந்தவர்களுக்கு 500,000 ரூபா என்ற அடிப்படையிலும் நஷ்ட ஈடுவழங்கப்படவுள்ளது.
இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பாக நடவடிக்கையெடுக்கப்படும். இது அரசாங்கத்தின் தலையீட்டில் நடந்ததே. அன்று நாம் இதனையே கூறினோம். எவ்வாறாயினும் இது தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெறும் என தெரிவித்துள்ளார். -(3)




