செய்திகள்

ஜனநாயக போராட்டங்களை கொச்சைப்படுத்தி அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் சிலர் எமக்குள் இருக்கிறார்கள்! சிவசக்தி ஆனந்தன்

ஜனநாயகப் போராட்டங்களை கொச்சைப்படுத்துகின்ற, அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்ற ஒரு சில நபர்கள் எமக்குள்ளும் இருக்கிறார்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியால் நேற்றைய தினம் (04.03) ஊர்வலம் நடத்தப்பட்டது. இதன்போதே ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவ்ககையில்,

எங்களுடைய தாய்மார் இன்று காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எங்களால் கொண்டு வரப்பட்ட இந்த நல்லாட்சி என்கின்ற இந்த அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரும் இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் முன்னுக்கு பின் முரண்பாடான பல கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் வைத்து பிரதமர் காணாமல் ஆக்கப்பட்டோர் பெரும்பாலும் உயிரோடு இருப்பதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று கூறியிருந்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர்கள் நாட்டை விட்டு தப்பியோடியிருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார். ஆகவே இந்த நாட்டின் பொறுப்பு வாய்ந்த ஜனாதிபதி, பிரதமர் போன்றவர்கள் இந்த தாய்மார்களினுடைய வாக்குகளைப் பெற்றவர்கள். இவ்வாறு முரண்பட்ட வகையில் பேசக் கூடாது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம், காணி விடுவிப்பு போராட்டம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் என இத்தகைய ஜனநாயகப் போராட்டங்களை கொச்சைப்படுத்துகின்ற, அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்ற ஒரு சில நபர்கள் எமக்குள்ளும் இருக்கிறார்கள். கடந்த 8 வருடமாக எங்களது பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடத்திய போராட்டங்களை நாங்கள் ஒரு பொது பெனருக்கு கீழ் தான் நடத்தியிருந்தோம். ஆனால் இன்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி என எமது கட்சி பெனருக்கு கீழ் நடத்த வேண்டியுள்ளது. இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சார்பாக போராட்டம் நடத்த சிலர் தயங்குகின்றார்கள். இந்தப் போராட்டம் அரசிற்கு எதிரானது. இராணுவத்திற்கு எதிரானது. ஆகவே இந்த அரசாங்கத்திற்கு வலிக்கக் கூடாது. இராணுவத்திற்கு வலிக்கக் கூடாது என்பதற்காக இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், நாங்கள் இன்றைக்கு பகிரங்கமாக அழைப்பை விடுகின்றோம். சகல அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், ஊடகத்துறை சார்ந்தவர்கள் இந்த பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு நல்லதொரு செய்தி கிடைப்பதற்காக எல்லோரும் அணிதிரண்டு ஆதரவு வழங்குங்கள். இது ஒரு தனிநபரினதோ அல்லது கட்சியினதோ பிரச்சனை இல்லை. இந்த வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட 22 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களது பிரச்சனை. ஆகவே எங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை விடுத்து இந்த மக்களுக்காக எல்லோரும் ஒருமித்து குரல் கொடுங்கள். அதன் மூலம் தான் இந்த நாட்டில் ஒரு நல்லிணகத்தை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.

N5