யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் மக்களின் பிரச்சினைகள் தீரவில்லை! ஜனாதிபதி
எமக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த வடக்கு, தெற்கு மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிறைய பேர் சதி செய்கின்றனர்.
இதனை பேஸ்புக் ஊடாக அவதானிக்க முடியும். குறிப்பாக நான் பேஸ்புக் பார்ப்பதும் இல்லை. இது போன்ற விடயங்களை தொடர்ந்து பார்ப்பதால் ஒரு பயனும் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழில் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு இன்று சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வந்துவிட்டு உறையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இன்று உங்கள் பிரதேசத்திற்கு வருகை தந்ததையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திலேயே யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்ய தீர்மானித்திருந்தேன்.
ஜனவரி நான்கு அல்லது 7ம் திகதிகளிலேயே இந்த நிகழ்வு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் சில காரணங்களால் எனக்கு வர முடியாமல் போய்விட்டது.
எனினும் இரு மாதங்கள் கடந்து உங்களை சந்தித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். யாழ்ப்பாணத்தில் இன்று புதிய ஒரு திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
இந்த “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தின் மூலம் யாழ் மக்களுக்கும் எனக்கும் இடையிலான தொடர்பு வலுப்பட போகின்றது.
நாம் எந்த சந்தர்ப்பத்திலும் பிரிந்து செயற்பட கூடாது. நாம் எப்போதும் ஒன்றாக கைகோர்த்து கொண்டு இருக்க வேண்டும். இதன் மூலமே ஒருவருடைய பிரச்சினையை மற்றையவர் அறிந்து கொள்ள முடியும்.
பிரிந்து செயற்பட்டால் பிரச்சினைகளை அறிந்து கொள்வது கடினமாக இருக்கும்.பிரிந்து செயற்படும் போது ஒருவரை ஒருவர் தப்பான கோணத்தில் பார்க்கின்றோம். இதை தவிர்க்க வேண்டும்.
எனவே இந்த “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” என்ற திட்டத்தின் மூலம் உங்களுடைய அனைத்து பிரச்சினைகளையும் எனக்கு தெரியப்படுத்தலாம்.
எமக்கு மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்திக்கொள்ள கூடாது.யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் மக்கள் மத்தியில் உள்ள பிரச்சினைகள் தீரவில்லை.
யுத்த முடிவடைந்துள்ள போதும் நாட்டு மக்கள் மனதளவில் வேறுப்பட்டு செயற்படுகின்றார்கள். ஒன்றாக பயணிக்கின்றார்கள். ஒரே மேசையில் இருந்து உணவு உண்ணுகிறார்கள். விளையாடுகின்றார்கள்.
ஆனால் மனதளவில் இவர்கள் ஒன்றுபட்டு செயற்படவில்லை.மனதளவில் எல்லோரும் ஒன்றுபட்டு செயற்படாமல் இருந்தால் செய்யும் அனைத்து விடயங்களும் பொய்மையாகி விடும்.
இனம், மதம், மொழி, கட்சி அரசியல் பிரதேசவாதம் பார்த்து பழகக் கூடாது. எல்லோரும் மனதளவில் ஒன்றாக வாழவேண்டும்.
N5




