சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்
வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதம் வருமாறு..
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி,
ஜனாதிபதி செயலகம்
கொழும்பு -01
காணி விடயம்
அதிமேதகு அவர்களே,
வடக்கு மாகாணத்தில் ஆயுதப்படையினர் தங்கியிருக்கும் தனியாருக்கு சொந்தமான காணிகள் தொடர்பான இரண்டு விடயங்கள் பற்றி தங்கள் தயைகூர்ந்த கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இக்காணிகள் அதன் உரிமையாளர்களான குடிமக்களுக்காக கூடிய விரைவில் விடுவிக்கப்படவேண்டும்.
(1) யாழ்ப்பாண மாவட்டம் வலிகாமம் வடக்கில் உள்ள காணிகள்
(2) முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் உள்ள காணிகள்
இக்காணிகளில் ஆயுதப்படையினர் தங்கியிருக்கின்றனர். இக்காணிகளுக்கு உரிமையாளர்களாகிய குடிமக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அக்காணிகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலே (1) ல் குறிப்பிடப்பட்டுள்ள யாழ்ப்பாண மாவட்டம்,வலிகாமம் வடக்குக் காணியில் 25 வருடங்களுக்கு மேலாக தரைப்படையினர் இருந்து வருகின்றனர். பாரிய தாக்குதல் ஆயுதங்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்து வந்த காலத்தில், அவர்கள் ஆயுதப் படைத்தளங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த காரணத்தால் இக்காணிகளில் ஆயுதப்படையினர் நிலை கொண்டிருந்தனர். இத்தகைய நிலைமை பல வருடங்களுக்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்டது.
இக்காணிகள் பல பரம்பரை காலமாக குடிமக்களால் அவர்களது குடியிருப்புக்காகவும்,விவசாய செய்கைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டவையாகும்.
குடிமக்களுக்கு சொந்தமான இக்காணிகளை மீண்டும் கையளிக்காது தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு எவ்விதமான நியாயபூர்வமான காரணங்களும் இல்லை. இக்காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும் அந்த உறுதிமொழிகள் இன்னமும் காப்பாற்றப்படவில்லையென மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் உள்ள இந்தக் காணிகள் அதன் உரிமையாளர்களான குடிமக்களுக்கு விடுவிக்கப்படுவதற்கான மிக விரைவான செயற்ப்பாடுகளை மேற்கொள்ளுமாறு தங்களை தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.
மேலே (2) குறிப்பிடப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு காணிகளிலும் கூட 8 வருடங்களுக்கு மேலாக ஆயுதப்படையினர் நிலைகொண்டு தங்கியுள்ளனர். இக்காணிகளும் அதற்கு உரிமையாளர்களாகிய குடிமக்களால் குடியிருப்புக்காகவும் விவசாய செய்கைகளுக்காகவும்
பயன்படுத்தப்பட்டு வந்தவையாகும். இக்காணிகளை அதன் உரிமையாளர்களாகிய குடிமக்களிடம் மீள ஒப்படைக்கப்படாமைக்கு எவ்விதமான நியாயபூர்வமான காரணங்களும் இருக்க முடியாது.
எனவே முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேப்பாபுலவு காணிகளை அதன் உரிமையாளர்களாகிய குடிமக்களிடம் மீளக் கையளிப்பதற்கு தேவையான செயற்ப்பாடுகளை மிக விரைவில் மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
குடி மக்களுக்கு சொந்தமான இக்காணிகளில் ஆயுதப்படையினர் தொடர்ந்தும் தங்கியிருப்பது, நாட்டின் சட்டங்களை மீறுகின்ற செயலாகும் என்பது தெளிவாக தெரிகின்றது. இத்தகைய நிலைமை தொடரக் கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமேதகு அவர்களே, இக்காணிகளை அதன் உரிமையாளர்களாகிய குடிமக்களிடம் கையளிக்கப்படுவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை உரிய அதிகாரிகளுக்கு உடன் வழங்குமாறு தங்களை மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மரியாதையுடன்
தங்கள் உண்மையுள்ள
இரா. சம்பந்தன்
பாராளுமன்ற உறுப்பினர் மற்றும்
இலங்கைப் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர்
-(3)




