போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக விசாரணை அவசியம்: வலியுறுத்துகிறார் சுமந்திரன்
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர் பில் உள்ளக விசாரணை நடத்தப்படுவது அத்தியாவசியமானதாகும். இதனை விளங்கிக்கொள்ளாமல் பலரும் இந்த உள்ளக விசாரணை யில் நம்பிக்கையில்லையென்று தெரிவித்துவருகின்றனர். ஐ.நா.மனித
உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் 10ஆவது பந்தியில் சர்வதேச விசாரணையும் உள்ளக விசாரணையும் நடத்தப்படவேண்டும் என்றே கூறப்பட்டிருக்கிறது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகள் அதன் உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும் என்பதே எம் அனைவரதும் ஒரே எதிர்பார்ப்பாகும்.எனவே உள்ளக விசாரணையானது இதுவரையில் தெரிந்த உண்மைகளுக்கு அப்பால் வேறு வெளிவராத பல உண்மைகளை கண்டறிய வாய்ப்பாக அமையுமெனவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்படாமல் சர்வதேச விசாரணை மட்டும் நடத்தினால் அந்த அறிக்கை வெறும் அறிக்கையாக மட்டுமே இருக்கும். உள்ளக விசாரணை நடத்தப்பட்டால் இரண்டையும் ஒப்பிட்டு நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும். அதேநேரம் உள்ளக விசாரணையின் மூலம்தான் போர்குற்ற விசாரணையை முன்னெடுத்து தக்க நடவடிக்கை எடுக்க முடியும். சர்வதேச விசாரணையை மட்டும் நடத்தி எந்தவித பயனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.
அது வெறும் ஒரு அறிக்கை அளவிலேயே வெளியிடப்பட்டு எங்கோ ஒரு மூலையில் முடங்கி கிடக்கும். மேலும் குற்றம் இளைத்தவர்களே விசாரணை நடத்துவதில் எமக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இப்போது அப்படியல்ல, உள்ளக விசாரணையை நடத்துவது இந்நாட்டு அதிகாரிகள் என்றாலும், அது சர்வதேச விசாரணைகளை நடத்தியவரின் மேற்பார்வையின் கீழ்தான் செயற்படும்.
இந்த விதிமுறை ஐ.நா. பிரேரணையிலேயே சொல்லப்பட்டிருக்கின்றது. சர்வதேச விசாரணையை நடத்தியவர்களின் மேற்பார்வையின்கீழ்தான் உள்ள விசாரணை நடத்தப்படவேண்டும் என்று குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசு உள்ளக விசாரணை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் இப்போதைய அரசாங்கம் உள்ளக விசாரணை நடத்த முன்வந்திருக்கிறது. இதை நாம் வரவேற்கிறோம்.
அப்படி நடக்கும் பட்சத்தில் சர்வதேச விசாரணையின் அறிக்கையும், உள்ளக விசாரணையின் அறிக்கையும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்க முடியாது. அதனால் உள்ளக விசாரணை எமக்கு சாதகமாகத்தான் அமையும்.” என்று சுமந்திரன் மேலும் கூறினார்.




