செய்திகள்

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடுத்த தலைவர் மகிந்தவா?மைத்திரியா?

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடுத்த தலைவர் மகிந்தவா மைத்திரியா? என்ற வினாவிற்கு விடையை களநிலை எதார்த்தத்தை திறனாய்வு ரீதியில் சிந்திக்கும் பத்தியாகவேயன்றி ஆரூடமாக இப்பத்தி எதையும் சொல்ல வரவில்லை.

இந்த சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரண்டு இனத்துவேச வெறி கொண்ட வேட்பாளர்களை பற்றி மிகவும் சுருங்கக்கூறின் மகிந்தவை பற்றிய அறிமுகம் யாரிற்கும் தேவைப்படாது. மைத்திரியை பற்றி கூறின் இவர் பொலநறுவை, அனுராதபுரம் போன்ற பகுதிகளில் முக்கியமாக அதன் எல்லைக்கிராமங்களை தனது கோட்டையாக வைத்திருக்கிறார். இவரது பரம்பரையே எல்லைக்கிராமங்களில் தமிழரை அழித்தொழிக்கும் இனக்குரோத செயற்பாடுகளில் பெயர்பெற்றவர்கள். இவர் பலகாலமாக விடுதலைப்புலிகளினால் இலக்கு வைக்கப்பட்டவர். 2008 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பியவர். சிங்கள பௌத்த பேரினவாதி என்ற ஒற்றை அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு இவ்வளவு காலமும் அரசியலில் இருப்பவர். இன்னும் சொல்லப்போனால் இந்தளவு இனக்குரோதம் கொண்ட மைத்திரியுடன் சந்திரிக்கா மேடமும் நரித்தனம் உடையவர் என்று சிங்களத்தால் பெருமையாக பேசப்படும் ரணிலும் கைகோர்க்க அநேகம் எல்லா அடிப்படைவாதிகளும் சிங்கள இடதுசாரிகளும் (இவர்களை இடதுசாரி என்று மட்டும் கூறின் நகைப்பானது. இவர்கள் இடதுசாரி என்ற பெயர் ஒட்டை வைத்திருப்பதானது உலகிலுள்ள எல்லா இடதுசாரிகளிற்கும் இழுக்கு) இவர் பின்னால் அணிவகுக்க என்றுமில்லாதவாறு ஒரு வெளிப்படையான சிங்களபௌத்த அணியொன்று ஒரு பேச்சுக்கு கூட தமிழர் தொடர்பாக ஒற்றை வரி பேசாது இந்த தேர்தலில் இனவழிப்பை அரங்கேற்றி முடித்த மகிந்தவின் ஆட்சிக்கு ஒரு படி விஞ்சியவர்களாக ஒரு புதுப்பொலிவுடன் மைத்திரி தலைமையில் களம் இறங்குகின்றது.

sam-16

அரசவளங்களையும் ஏரிக்கரை (Lake House) ஊடகங்களையும் உச்சமாக பயன்படுத்தி தேர்தலில் எப்படியாவது வென்றுவிடத் துடிக்கிறது மகிந்தவின் கூட்டம். தமக்கு சாதகமான ஆட்சிமாற்றம் ஒன்றிற்கு சர்வதேசம் அவாப்படுவதால் சர்வதேச ஊடகங்கள் மைத்திரி அணிக்கு பாரிய ஆதரவை வழங்கி வருகின்றது. மேற்கு மனநிலையில் இருந்து இந்த விடையத்தில் மட்டும் மோடி அரசு வேறு ஒரு நிலைப்பாடு எடுப்பதாக தெரிகிறது. மோடி அரசின் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மகிந்தவின் செயற்பாடுகளில் ஆரோக்கியமான மாற்றங்கள் தெரிகின்றதென்று கருத்து சொல்வதிலிருந்தும் மலையகத்தலைவர்களில் ஒருவரான இந்தியாவின் நிலைப்பாட்டை முற்று முழுதாக பிரதிபலிப்பவருமான ஆறுமுகம் தொண்டமான் மகிந்தபக்கம் இருப்பதிலிருந்தும் இந்திய தூதரகத்தின் செயற்பாடுகளை உற்று நோக்குவதிலிருந்தும் மோடிக்கு மகிந்தஅரசு பிடித்திருக்கின்றது என்பதை துலாம்பரமாக சொல்லிவிடலாம். இப்படியிருக்க இனி இலங்கையில் தேர்தல் களநிலை எப்படியிருக்கின்றது என திறனாய்வோம்.

இனத்துவ ரீதியில் மட்டுமே பெரிதும் சிந்தித்தாக வேண்டிய, சமூக விஞ்ஞான கருத்தாக்கங்கள் பல பொய்த்துப்போன, சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இச்சைகள் மட்டுமே தீர்க்கப்படக் கூடிய, நாகரீக சமூகத்திற்கே இழிநிலை என்று வர்ணிக்ககூடிய இலங்கை தேசத்தின் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப்போகிறது என்பதனை துணிய முதலில் இனத்துவ ரீதியிலான சமூக மனோநிலையினை உற்று நோக்கி அதன் பிரதிபலிப்புகள் எப்படி எண்ணிக்கை ரீதியிலான பேறாக போகின்றது என பார்ப்போம்.

வாக்குகளின் மொத்த எண்ணிக்கையை சிங்கள ஆட்சியாளர் இனத்துவ அடிப்படையில் உத்தியோகபூர்வமாக இன்னும் சரியான புள்ளிவிபரமாக கொடுக்கவில்லை எனினும் வாக்காளர்களில் 68 விழுக்காடு சிங்களவர்களாவார் என ஓரளவு உறுதியுடன் சொல்ல முடியும். இந்த சிங்கள மக்களது தேர்தல் சார்ந்த மனநிலையினை துணிய அவர்களினை வர்க்க ரீதியில் அணுகிப்பார்க்க வேண்டும். இதில் சிங்கள மேற்தட்டு வர்க்கம் 5%, நடுத்தர வர்க்கம் 60% மற்றும் அடித்தட்டு வர்க்கம் 35%.
இதில் முதலாவதாக மேற்தட்டு வர்க்கத்தை பொறுத்த வரை அவர்கள் முதலாளி வர்க்கம். அவர்கள் பெரும் பணமுதலைகள். அவர்களில் பெரும்பான்மையினரிற்கு எப்போதுமே ஐக்கிய தேசிய கட்சி உவப்பானது. அதிலும் மகிந்த அன். கோவின் ஆட்சியில் அவர்களில் பலர் உருக்குலைந்தது போனார்கள். காரணம் மகிந்த எல்லா முதலாளிகளையும் இக்கட்டுக்கு உள்ளாக்குவதன் மூலம் தானும் தனது குடும்பக்காரரையும் தவிர யாரும் இங்கே பெருவணிகம் செய்ய முடியாது என்று முடிவெடுத்து நடைமுறைப்படுத்த, இந்த மேற்தட்டு வர்க்கம் மகிந்தவை தூக்கி வீச தருணம் பார்த்து நிற்கின்றது.

sam-15

அடுத்து நாம் சிங்கள மக்களில் 60% உள்ள நடுத்தர வர்க்க சிங்கள மக்களையும் அவர்களது மனோநிலையையும் பார்ப்போமானால் அதுவே நாட்டில் ஏற்படும் பொருளாதார சிக்கல்களால் ஆகவும் அதிகமாக திண்டாடும் வர்க்கம். காரணம் வளர்ந்து வரும் உலகமயமாதல் தாக்கங்களிற்குள் சிக்கி தமது தேவைகளை தினம் தினம் அதிகரிக்க விட்டுச் செல்லும் இந்தத்தரப்பு அதற்கான வருவாயை ஈட்டவும் முடியாமல் நேரடியாக தன்னிலை விட்டு அதிலிருந்து மீளவும் விரும்பாமல், தமது பிரச்சனைகளிற்கு தீர்வாக ஆட்சிமாற்றத்தில் நம்பிக்கை வைத்து அப்படியே காலம் காலமாக செயற்படும் செம்மறி ஆடுகளாக இந்த வர்க்கம் இருந்து வந்து கொண்டேயிருக்கின்றது. இவர்கள் தற்போது என்றுமில்லாதவாறு பொருளாதார நெருக்கடியில் தவக்கிறார்கள். புலிகளை அழிக்கிறார்கள் என்ற சிங்கள கொடும் மனப்பாங்கில் பொன்விலையிலும் அரிசி வாங்கி உண்ண உறுதிபூண்ட இந்த வர்க்கத்தில் பெரும்பான்மை இப்போது மகிந்தவின் ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டேயாக வேண்டும் என்பதிலும் அதேயளவு உறுதியாக இருப்பது போல் தெரிகிறது. எனினும் இந்த வர்க்கத்தில் மகிந்தவினால் பதவிகளும் சலுகைகளும் பெற்றவர்களும் அவரது பிரதேசசாயல் கொண்ட அபிவிருத்தியால் பயனடைந்த பலரும் என்ன இருந்தாலும் மகிந்தவை கை விடக்கூடாது என்று சொல்லும் பலரும் இந்த நடுத்தர வர்க்கத்தில் உள்ளார்கள். அத்தோடு இன்னும் ஒன்றை நினைவுபடுத்தியேயாக வேண்டும். இந்த நடுத்தர வர்க்கம் ஒருபோதும் சந்திரிக்காவை கைவிடவில்லை. பதவிக்காலம் முடிந்த பின்பே சந்திரிக்கா வெளியேறினார். பெரும்பாலான நடுத்தரவர்க்கம் சந்திரிக்காவின் ஆட்சியில் மனநிறைவுடனே இருந்திருக்கிறது. மைத்திரி அணியின் நாயகியாக சந்திரிக்கா அலங்கரித்து நிற்பது மகிந்தவிற்கு கெடிக்கலக்கமே. சிங்களதேயத்தையும் அதனது கூத்துக்களையும் அனுபவவாயிலாக புடம்போட்டு பார்த்தோர் இப்போது சொல்வது என்னவெனில் சிங்கள மக்களில் 60% உள்ள நடுத்தர வர்க்க சிங்களவர்களின் வாக்குகள் மைத்திரி: மகிந்த= 60: 40 என்ற விகித சமன்பாட்டில் அமையப்போகின்றது என்பதாகும்.

அடுத்ததாக அடித்தட்டு சிங்கள மக்களை எடுத்து நோக்கின் அவர்கள் மொத்த சிங்கள மக்களில் 35% ஆனோர் ஆவார். அவர்களைப் பொறுத்தவரை சோறும் சம்போலுடன் (பத் சக சம்போல்) அதிக நிறைவு அடைபவர்கள். தேவைகள் பெரிதும் இல்லாத ஒரு சமூகம். மகிந்த ஆட்சியில் அதிக சலுகைகளை அவர்கள் அனுபவிக்காமல் இல்லை. அத்துடன் சிங்கள கிராமிய அபிவிருத்திகளில் மகிந்த அக்கறையாக செயற்பட்டுள்ளார் என்பதை அரசியல் காரணிகளிற்காக போலியாக மறுக்கவும் முடியாது. எனவே மகிந்தவின் ஆட்சியில் இவர்கள் மகிழ்வடைந்தவர்களே. ஆனாலும் இந்த அடித்தட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் 35% இலேயே அண்ணளவாக 11% மைத்தியின் கோட்டை என்று கூறப்பட்டு வரும் அனுராதபுரம் மற்றும் பொலநறுவை எல்லைக் கிராமங்களை சார்ந்தோர். மீதி 24% தான் மகிந்தவின் செல்வாக்கு வளையத்தில் உள்ள அடித்தட்டு சிங்கள மக்கள். ஆகவே சிங்கள மக்களில் 35% உள்ள அடித்தட்டு வர்க்க சிங்களவர்களின் வாக்குகள் மகிந்த:மைத்திரி = 69: 31 என்ற விகித சமன்பாட்டில் அமையப்போகின்றது என எதிர்வு கூறலாம்.

sam-16

இனி தமிழர்களை எடுத்து நோக்கின் நாம் வடக்கு-கிழக்கு தமிழர் மலையகத்தமிழர் என இரண்டாக நோக்குவதே பொருத்தப்பாடானது. இதில் வடக்கு-கிழக்கு தமிழர் இலங்கையின் வாக்காளர் விகிதத்தில் 11% ஆகவும் மலையகத்தமிழர் 6% ஆகவும் காணப்படுகின்றனர். இதில் முதலாவதாக வடக்கு-கிழக்கு தமிழரை நோக்கின் அவர்கள் ஒரு இனவழிப்பினால் தனது ஆத்மார்த்தமான தலைமையையும் இன்னும் இனி இழக்க எதுவிருக்கின்றது என்று வினவக்கூடிய வகையில் சகலதையும் இழந்து பரிதவித்து நிற்கின்றது. இலங்கையிலேயே மிகவும் பலவீனமான அரசியலில் இருக்கும் தரப்பு இதுவே. தேற்றுவாரின்றி ஏதிலிகளாய் தவிக்கவிடப்பட்டிருக்கும் இந்த மக்களிற்கான தீர்வு போராடி போராடியே மரத்துப்போன அவர்களின் கைகளிலேயே அன்றி வேறு எந்த புறச்சக்திகளிடமும் இல்லை. உண்மையில் அந்த மக்கள் சர்வதேசத்தின் ஏமாற்றுத்தனங்களைக் கூட ஓரளவிற்கு புரிந்துகொண்டு விட்டார்கள். இப்போது அவர்கள் இயலாவாளியாகவே தம்மை உணருகிறார்கள். அப்பாவை சிங்கள பேரினவாதம் கொன்றமைக்கு புத்தர் சிலைக்கு மேல் சிறுநீர் கழித்து பழிவாங்கும் குழந்தையின் மனோபாவமாக இவர்கள் இப்போது தம்மினத்தை அழித்த மகிந்தவை எதிர்க்கும் தம்மாலான எதற்கும் ஆதரவளிப்பார்கள் என்ற வகையில் வாக்களிப்பின் மைத்திரிக்கே வாக்களிப்பார்கள். ஆனால் பெரிதும் உந்த தேர்தலை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். அத்தோடு மிகச்சிலர் வாக்களிக்காது விடின் மகிந்தவே வருவான். அவனுடனே நாங்கள் கணக்கு தீர்க்க வேண்டும் என்றவாறு புலிகளின் சிந்தனையுடன் சேர்ந்து சிந்தித்துப் பழகிய மிகச்சிலர் தீவிர மனநிலையில் இருக்கிறார்கள். இவர்களிற்கு இப்போது அவர்கள் நேசித்த அந்த தலைவர் பிரபாகரன் வளர்த்த பெடியள் வர வேண்டும். அவர்களது பெரும்பான்மை மனோபாவம் அப்படியிருக்க அவர்கள் வாக்களிப்பு வீதம் அரைக்கு அரை தான். ஆகவே இந்த 11% ஒட்டு மொத்த இலங்கையின் வாக்குகளில் ஒரு 5% தேர்தலை புறக்கணிக்க மீதியில் 5% தன்னும் மைத்திரிக்கு போகும்.

அடுத்து இலங்கையின் வாக்காளர் விகிதத்தில் மலையகத்தமிழர் 6% ஆவர். தமிழினம் இனவழிப்பிற்கு உள்ளானதால் கொதித்துப்போன உணர்வு நிலையிலுள்ள மலையக மக்கள் மகிந்த எதிர்ப்புணர்வு நிலையிலேயே உள்ளனர். திகாம்பரம், இராதாகிருஸ்ணன் உட்பட்ட மலையகத்தலைவர்கள் மைத்திரி அணிக்கு தாவிவிட பெரும்பான்மை வாக்குகள் மைத்திரிக்கு உறுதியாகிவிட்டது. ஆனாலும் ஆறுமுகம் தொண்டமானின் அடாவடிகளிற்கு அடிபணிந்து பழகிப் போய்விட்ட வேறு எந்த புரிதல்களும் அற்ற மிகவும் அப்பாவிக் கூட்டமொன்றின் வாக்குகள் மகிந்தவிற்கு போகத்தான் போகிறது. ஆகவே இந்த 6% இல் மையத்திற்கு நான்கு போக மீதி இரண்டுமே மகிந்தவிற்கு போகக்கூடிய வாய்ப்புள்ளது.

sam-17

மற்றையது முஸ்லீம் மக்கள். இவர்கள் மொத்த வாக்காளர்களில் 14% ற்கு சொந்தக்காரர். இவர்களின் தலைவர்களை பற்றி நாகரீகம் பார்க்காது பேச வேண்டுமாயின் இவர்களை அரசியல் விபச்சாரிகள் என்று கூறின் தவறாகாது. இவர்கள் பலமுள்ள பக்கம் சாய்ந்துகொண்டு சலுகைகளை அனுபவிப்பதையே அரசியல் என்று அர்த்தப்படுத்தி வைத்திருப்பவர்கள். இப்போது அஸ்வர் போன்றோர் நீங்கலாக இவர்களின் தலைவர்கள் மைத்திரிதான் வரப்போகிறார் என்று கணித்ததன் விளைவாக மைத்திரி அணிக்கு ஆதரவென பகிரங்கமாக தெரிவித்து விட்டனர். எனினும் இவர்களில் பலரைப்பற்றிய சிக்கலான கோப்புகள் எத்தனை மகிந்த்வசம் இருக்கின்றதென்பதை பொறுத்து இவர்களில் எத்தனை பேர் மகிந்த பக்கம் மாறிச் சாய்வார்கள் என்பது தங்கியுள்ளது. எனினும் மகிந்த மாத்தையா தான் பொதுபல சேனாவை உருவாக்கி அதற்கு போசாக்கு ஊட்டி முஸ்லிம்களை ஆபத்திற்குள்ளாக்கும் நடவடிக்கைகளை செய்தது இன்னும் செய்ய காத்திருக்கின்றது என்பது முஸ்லிம் மக்களிற்கு பட்டவர்த்தனமாக புரிந்து போக அவர்களில் 70% விழுக்காடு மைத்திரி அணிக்குதான் போக போகிறது.

ஆகவே கணித்துப்பார்க்கில் மொத்த வாக்குகளில் 61% மைத்திரி அணிக்கு தான் போக வேண்டும். நமது கணிப்புகளும் துணிபுகளும் செல்லுபடியாக கூடியது நீதியான தேர்தல் நடைமுறை பேணப்பட்டால் மட்டுமே. ஆனால் மகிந்த தேர்தல் திணைக்களத்தை தனக்கு ஏற்ப பயன்பெறக் கூடிய வகையிலேயே வைத்திருக்கிறார். அதனை சென்ற தேர்தலில் சாதித்தும் காட்டி விட்டார் அதனை கடந்த தேர்தலின் எதிர்தரப்பு வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தொண்டை கிழிய பலமுறை சொல்லியும் வருகிறார். ஆகவே மகிந்த இம்முறையும் தேர்தல் திணைக்களத்தை பாவிக்கும் கைங்கரியத்தை செய்யாமல் விட மாட்டார். எனினும் திருடப்பட்ட உணவென்றாலும் தின்னுவதற்கும் ஒரு அளவு உண்டுதானே? எனவே மகிந்த தேர்தல் திணைக்களத்தை பயன்படுத்தி பெறப்போகும் பெறுதியும் அவரை மீண்டும் ஆட்சிப்பீடம் ஏற்ற போதுமானதாக அமையுமென நம்புவது கடினம். அந்தளவு இக்கட்டில் இருக்கிறார் மகிந்த.

எனினும் ஆட்சியில் இல்லாமல் வாழவே முடியாது என்ற எதார்த்த நிலைக்கு வந்து விட்டது ராஜபக்ச குடும்பம். எனவே வேறு என்ன வழியிருக்கின்றது மகிந்தவிற்கு? இலங்கையின் தேசிய புலனாய்வுத்துறையே (SIS) மகிந்தவிற்காக ஒட்டுக்கேட்கும் பணியில் இறக்கப்பட்டு விட்டது. கோத்தாவின் கட்டளைகளில் வாழவே பழகிக்கொண்டு விட்டவர்களே இராணுவத்தில் மேல் மட்டத்தில் இருக்கின்றார்கள். மூன்று பிரிகேட்டுகள் சம்மதித்தால் போதும் இலங்கையில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்திவிடலாம். இது சர்வதேசத்தினால் சகிக்க முடியாத ஒன்று தான். எனினும் வேறு என்ன வழி மகிந்தவிற்கு இருக்கிறது இறுதி வழியாக. மகிந்தவிற்கு ஒன்று புரிந்து விட்டது. இந்தியாவை மீறி சர்வதேசத்தால் இலங்கையில் எதுவும் செய்து விட முடியாது. இப்போ மோடியை சம்மதிக்க வைத்தல் போதும் மகிந்த இறுதி தெரிவை பிரயோகிப்பார். தமிழ் மக்கள் இப்போதும் இராணுவ ஆட்சியில் தான் இருக்கிறார்கள். தமிழ் மக்களிற்கு இனி என்ன புது சிக்கல் வரப்போகின்றது? இது சிங்கள மக்களுடைய பிரச்சனை. இனி வரப்போகும் துன்பங்கள் அவர்களிற்கு புதியனவாகத் தான் இருக்கும். தமிழர்கள் தங்களது தலைவிதியை தாமே தீர்மானிக்க வேண்டும். இலங்கையில் எத்தனை ஆட்சி மாற்றங்கள் வரினும் அவை இன்னும் இன்னும் தமிழ் மக்களிற்கு விரோதமாக செயற்பட்டேயாகும். இதுவே சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பரிணாம வளர்ச்சி. இதுவே தமிழர்களிற்கு போராடுவதை தவிர வேறு எந்த தெரிவையும் விட்டு வைக்காது விட்டது. சரி சிங்கள மக்களிடம் சொல்லுங்கள் இந்த தேர்தலை உற்று கவனிக்கும்படி. ஏனெனில் இராணுவ ஆட்சியில் வாழ வேண்டிய சூழ்நிலை அவர்களிற்கு வரலாம். எதிர்வரும் வாரங்களில் மோடியின் நிலைப்பாட்டை அவதானித்தால் தான் புரியும் அடுத்த சனாதிபதி மைத்திரியா அல்லாது இராணுவ ஆட்சியா என்று.