Search
Sunday 25 June 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சியால்நெருக்கடிக்குள் த.தே.கூட்டமைப்பு!

அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சியால்நெருக்கடிக்குள் த.தே.கூட்டமைப்பு!

-சஞ்சையன்-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் இந்த வாரம் முக்கியமான ஒரு வாரம். அடுத்துவரும் தினங்கள் அதற்குத் தீர்க்கமான தினங்களாக இருக்கும். அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் தொடர்பில் உறுதியான ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் கூட்டமைப்பு உள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை 9 ஆம் திகதி புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கு முன்னோடியாக 6 ஆம் திகதி வெள்ளிக் கிழமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கொழும்பில் கூடுகின்றது. 8 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் அன்று முழுநாளும் நடைபெறவிருக்கின்றது. இதில் கூட்டமைப்பு எடுக்கப்போகும் தீர்மானம்முக்கியமானதாகஇருக்கும்.

2016 க்குள் தீர்வு என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடர்ச்சியாகச் சொல்லிவந்தார். ஆனால், இப்போது அதனை 2017 என மாற்றிச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கின்றது. 2016 இல் தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையை மைத்திரி – ரணில் அரசாங்கம் அவருக்குக் கொடுத்திருந்தது. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியுடன், தேசிய அரசாங்கத்துடன் அவருக்கு இருந்த நெருக்கமான உறவுகளும் இந்த நம்பிக்கையை அவருக்குக் கொடுத்திருக்கலாம். ஆனால், தனது நம்பிக் கை தவறானது என்பதை அவர் இப்போது உணர்ந்து கொண்டிருக்கலாம். ஆனாலும் அதனை வெளிப்படையாகச் சொல்லக்கூடிய நிலையில் அவர் இல்லை என்பது தான்உண்மைநிலை.

இடைக்காலஅறிக்கை

புதிய அரசியலமைப்பாக்க முயற்சி மூன்று நோக்கங்களைக் கொண்டிருப்பதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஒன்று – நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றியமைப்பது. இரண்டு தேர்தல் முறையை மாற்றியமைப்பது. மூன்று – இனநெருக்கடிக்குத் தீர்வைக்காண்பது. இந்த மாற்றங்களைச் செய்வதற்காக பாராளுமன்றத்தை அரசியலமைப்புப் பேரவையாக மாற்றியமைக்கும் தீர்மானம் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது. அரசியலமைப்புப் பேரவையால் இதற்காக வழிநடத்தல் குழு ஒன்றும், ஆறு உப குழுக்களும் நியமிக்கப்பட்டன. உப குழுக்களின் அறிக்கைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் வழிநடத்தல் குழுவின் அறிக்கை மட்டும்தான் இனி வெளிவர வேண்டியுள்ளது.

வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை டிசெம்பர் 10 ஆம் திகதி வெளியிடப்படுவதாக இருந்த போதிலும், பின்னர் அது ஜனவரி 9 வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. தற்போது மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. வழிநடத்தல் குழுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 21 உறுப்பனர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் இதன் உறுப்பினர்களாக உள்ளார்கள். மகிந்த அணி, ஹெல உறுமய உறுப்பினர்கள் என சிங்களத் தேசியவாதிகளின் கை இங்கும் மேலோங்கியுள்ளது. சுமார் 40 கூட்டங்களை நடத்தியுள்ள வழிநடத்தல் குழு, ஜனவரி 5 , 6 ஆம் திகதிகளில் கூடி தமது அறிக்கையை இறுதியாக்கவுள்ளது. அதனையடுத்து 9 ஆம் திகதி காலை பாராளுமன்றத்தில் இதுமுன்வைக்கப்படும்.

அறிக்கையின்உள்ளடக்கம்

இந்த அறிக்கையின் விபரங்கள் எதுவும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட வில்லை. ஊடகங்கள் மூலமாகக் கசிந்துள்ள தகவல்களை வைத்துக் கொண்டு தான் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனன. இனநெருக்கடிக் கான தீர்வைப் பொறுத்தவரையில் அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ள 13 ஆவது திருத்தத்துக்கு மேலாகச் செல்வதற்கு வழிநடத்தல்  குழு தயாராகவில்லை. மகிந்த ராஜபக்‌ஷவைப் பிரதிநிதித் துவப்படுத்தும் கூட்டு எதிரணி, சம்பிக்க ரணவக்கவைத் தலைவராகக் கொண்டுள்ள சிங்கள உறுமய என்பன அதற்கு அனுமதிக்கவும் தயாராகவில்லை. இந்த நிலைப்பாட்டைத் தான் ஐ.தே.க. மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிஎன்பனவும் கொண்டு ள்ளன.

மூன்று விடயத்தில் இந்த சிங்களக் கட்சிகள் உறுதியாகவுள்ளன. ஒன்று – வடக்கு கிழக்கை இணைப்பதில்லை. இரண்டு- ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு, சமஷ்டிக்கு இடமில்லை. மூன்று – இலங்கையை ஒருபோதும் மத்சார்பற்ற நாடாக்க முடியாது. பௌத்த மதத்துக்குத்தான் முன்னுரிமை. இந்த மூன்று விடயங்களைப் பொறுத்தவரையிலும் வழிநடத்தல் குழுவில் இணக்கப்பாடு ஏற்பட்டுவிட்டதாகவே கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விடயத்தில் அழுத்தத்தைக் கொடுக்கும் நிலையில் சம்பந்தனோ சுமந்திரனோ இல்லை என்பதும் வெளிப்படையானது. ஆனால், இதனை வெளியே வெளிப்படையாகப் பேசக்கூடிய நிலையில் அவர்கள் இருவரும் இல்லை. பிரதான கட்சிகளான ஐ.தே.க., ஶ்ரீல.சு.க. மற்றும் மகிந்த அணி என்பன இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் நிலையில் அதனை மாற்றியமைக்கக்கூடிய வல்லமை கூட்டமைப்பிடம்இல்லை.

கூட்டமைப்பின்குழப்பம்

இருந்தபோதிலும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் நம்பிக்கை யளிக்கக்கூடிய கருத்துக்களையே கூட்டமைப்பின் தலைமை தொடர்ந்தும் வெளிப்படுத்திவருகின்றது. தமது நம்பிக்கை வீண்போனால், அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பதிலும் தெளிவற்ற ஒரு நிலையில்தான் கூட்டமைப்பின் தலைமை உள்ளது. அத்துடன் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வைக்காண்பதற்காக ஏதோ நடைபெறுகின்றது என்பதாகக் காட்டிக்கொள்ளும் வகையிலேயே சம்பந்தன் சுமந்திரனின் செயற்பாடுகள் உள்ளன. அத்துடன் சந்திப்புக்கள் பேச்சுவர்த்தைகளை மூடுமந்திரமாக வைத்திருப்பதற்கே அவர்கள் விரும்புகின்றார்கள்.

இந்த நிலையில்தான் வவுனியா மாவட்ட எம்.பி. சிவசக்தி ஆனந்தனின் கோரிக்கையையடுத்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவைக் கூட்டுவதற்கு சம்பந்தன் இணங்கியிருக்கின்றார். ஒருங்கிணைப்புக்குழு வெள்ளிக் கிழமை கூடுகின்றது. இதில் கடுமையான வாக்குவாதங்களை எதிர்பார்க்கலாம். இதனையடுத்து ஞாயிற்றுக்கிமை கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் கூட்டம் முழு நாள் கூட்டமாக இடம்பெறவிருக்கின்றது. கூட்டமை ப்பு எம்.பி.க்கள் 16 பேரும் இதற்காக அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். அரசியலமைப்புப் பேரவையில் எவ்வாறான நிலைப்பாட்டை கூட்டமைப்பு எடுக்க வேண்டும்என்பதையிட்டு இதில்ஆராயப்படும்.

இரண்டாவதுசபை

கூட்டமைப்பு எதிர்பார்க்கக்கூடிய மூன்று விடயங்களும் புதிய அரசியலமைப்பில் இருக்கப்போவதில்லை என்பதை மேலே பார்த்தோம். இந்த நிலையில் இரண்டாவது சபை ஒன்றை அறிமுகம் செய்வது குறித்து வழிநடத்தல் குழுவில் ஆராயப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. அடுத்த இரு தினங்களில் இது தொடர்பில் வழிநடத்தல் குழு இறுதியாக்கம் செய்யும். செனட் சபை போன்றதாக இருக்கக்கூடிய இரண்டாவது சபையை இன நெருக்கடிக்கான தீர்வாகக் காட்டிக்கொள்வதுதான் வழிநடத்தல் குழுவின் உபாயமாக இருக்கப்போகின்றது.

செனட்சபையின் 55 உறுப்பினர்களில் 45 உறுப்பினர்கள் மாகாண அடிப்ப டையில் தெரிவு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதாவது ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் 5 உறுப்பினர்கள் விகிதம் இந்தத் தெரிவு இடம்பெறும். இதன் மூலம் மாகாணங்களின் நலன்களை பாதுகாக்க முடியும் என காட்டிக்கொள்ள வழிநடத்தல் குழு முற்படுகின்றது. பாராளுமன்றத்தின் குறிப்பிட்ட சில தீர்மானங்கள் செனட்டின்  அங்கீகாரத்தையும் பெறவேண்டும். ஆனால், செனட்டில் தமிழ் உறுப்பினர்கள் சிறுபான்மையாக இருக்கும் நிலையில், அது எந்தவகையிலும் பயனளிக்கப்போவதில்லை.

ஆக, அரசியலமைப்பாக்க முயற்சி என்பது தமிழர்களுக்கு ஏமாற்றத்தைத் தரப்போகும் ஒன்றாகத்தான் இருக்கப்போகின்றது. இறுதி வரையில் நம்பிக்கை வைத்துச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அடுத்ததாக என்னத்தைச் செய்வது என்பதில் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய தருணம் இப்போது நெருங்கிவந்துவிட்டது.  என்ன செய்யப்போகின்றார்கள் என்பதை அடுத்த சில தினங்களில் தெரிந்துவிடும். அது குறித்த உள்ளகத் தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *