தலைப்பு செய்திகள்

அரச நிர்வாக முடக்கப் போராட்டம்

அரச நிர்வாக முடக்கப் போராட்டம்

அரசியல் தீர்வுக்கான முயற்சிகளைக் காத்திரமாக முன் னெடுப்பதற்கு நல்லாட்சி அரசு தவறும் பட்சத்தில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்குப் பிரதேசம் எங்கும் அரச நிர்வா கத்தை முடக்கிப் போராட்டம் நடத்துவோம் என்று நல்லாட்சி அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கின்றார் கூட்ட மைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.

மக்கள் பங்களிப்புடன் அறவழிப்பட்ட  ஆயுதம் தூக்காத   ஒரு போராட்டத்துக்குத் தயார் எனக் கோடி காட்டுகிறார் அவர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் சுமார் இரண்டு லட்சத் துக்கும் மேற்பட்ட தனது ஆதரவு வாக்குகளை உள்ளூராட்சித் தேர்தலில் இழந்து, அரசியல் வறுமையை  வெறுமையை  சூனியத்தை  நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் கூட்ட மைப்பை அடுத்து அது எதிர்கொள்ள வேண்டிய மாகாண

சபைத் தேர்தலுக்கு முன்னர் தூக்கி நிறுத்துவதற்கு அதன் தலைவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்று அங்க லாய்துக் கொண்டிருந்தோம்.

ஆனால்,சுமந்திரன் அதற்கான மார்க்கத்துக்கு வழி வகுத்து விட்டார், காய் நகர்த்தல்களை ஆரம்பித்து விட்டார் என்றே தோன்றுகின்றது.

அவரது கருத்துப்படி  பார்த்தால் ‘அரச நிர்வாக முடக்கம்’ என்ற போராட்ட முஸ்தீபு ஆரவாரத்தை இந்த ஆண்டு இறுதி வரை பிரச்சினையின்றிக் கொண்டிழுக்க முடியும். ஆனால், உண்மையில் இப்படி அறவழிப் போராட்டத்தில்  சட்டமறுப்பு இயக் கத்தில்  ஈடுபட தமிழரசு அல்லது கூட்டமைப்புத் தலைவர்கள் தயாரா என்பதுதான்  கேள்வி.

ஜனநாயக வாக்களிப்பின் பரிசாகவும், வெகுமதியாகவும் கிட்டிய பதவிகள், பவிசுகள், வசதிகள், ஆரவார எடுப்புக்கள், கூடவே எடுபிடிகள் என்பவை எல்லாவற்றையும் அனுபவித்த நமது அரசியல் தலைவர்கள் அவற்றை விட்டிறங்கி வந்து இப்படி அறவழிப் போராட்டம் நடத்தவும், சிறைகளை நிறைக் கவும், அதனால் தங்களது பதவி, பவிசுகளை பறிகொடுக் கவும், சில சமயம் உடல் ரீதியான பாதிப்புக்களை எதிர்கொள்ள வும் தயாரா என்பதும் நியாயமான சந்தேகமே.

பதவிகளைப் பெறப் போட்டிபோட்டு, அவற்றைப் பெற்றதும் அவற்றின் மூலம் அரசியல் வியாபாரம் நடத்தும் தலைவர்கள் தமது மக்களுக்காக நியாயமான போராட்டங்களில் துணிச் சலுடன் இறங்குவார்களா என்பதும் ஐயமே.

சுமந்திரன் இப்போது அறிவித்திருப்பது வெறும் ஒரு நாளைக்கு கண் துடைப்பாக நடத்தும் அடையாள உண்ணா விரதப் போராட்டம் அல்ல. அல்லது இப்போது நில மீட்புக்காக வும், வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடிக் கண்டறியவும் நடத்தப்படும் போராட்டங்கள் போல நீண்ட காலத் துக்கு ஒரு கொட்டகைகளில் அமர்ந்திருக்கும் நடவடிக்கை யும் அல்ல.

இது  வித்தியாசமானது. வியத்தகு வகையில் முன் னெடுக் கப்பட வேண்டியது. அரச நிர்வாக முடக்கம் என்பது  தமிழர் களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இன்றைய தலை முறைக்கு புதிதானதாகவும் புதிரானதாகவும் இருக்கலாம்.  ஆனால் இதே  தமிழரசின் முன்னைய தலைவர்கள் பெரும் சாதனையாகச் சாதித்துக் காட்டிய உயரிய மார்க்கம் அது.

1956 ஜூன் 5 ஆம் திகதி காலையில் கொழும்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் ‘சிங்களம் மட்டும்’ சட்டம் கொண்டு வரப் பட்ட போது அப்போதைய தமிழரசுக் கட்சித் தலைவர்களால் நாடாளுமன்றத்துக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஒத்தது அது. வன்செயலற்ற, அமைதியான, அறவயப்பட்ட, காந்தீய மார்க்கத்தில் நெறிக் கப்பட்ட, அகிம்சை வழிப்பட்ட ‘குந்துமறியல்’ போராட்டமாக அது முகிழ்ந்தது. அதன் விளைவாக சிங்களக் காடையர்களின் கண்மூடித்தனமான கொடூரத் தாக்குதல்களை அந்தத் தமிழ ரசுக் கட்சித் தலைவர்கள் எதிர்கொண்டனர். கட்டுப்போட்ட காயங்களோடு, இரத்தம் சொட்டச்சொட்ட, ‘யுத்தத்தில் காய மடைந்த வீரர்களாக’  அதன் பின்னரும் அவர்கள் நாடாளுமன்றுக்குள்   புகுந்து, சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக ‘தமிழ்ப் புலிகளாக’ உறுமினார்கள். அது வரலாறு.

தமிழர் தாயக மண்ணில் சிங்கள் அரசின் நிர்வாகத்தை அறவயப்பட்ட போராட்ட வழிமுறைகள் மூலம் நிலைகுலையச் செய்து, ஆட்சியைச் சீர்குலைத்து, தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை  வேணவாவை  முழு இலங்கைத் தீவுக்கும் சர்வதேசத்துக்கும் செவிமடுக்கவைத்த மகத்தான பணி இனிமேல்தான் செய்யப்படப் போவதல்ல. தந்தை செல் வாவின் வழி காட்டலில் 1961 முற்பகுதியில் தமிழரசுக் கட்சித் தலைவர்களே அதனைச் செய்து காட்டியுமுள்ளனர்.

தமிழ் மக்களின் மாபெரும் வெகுசனப் பொங்குணர்வாக வும், அரச பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான அறவழிப்பட்ட தமிழ்த் தேசியப் பேரெழுச்சியாகவும் அது அப்போது கட்டவிழ்ந்தது.

1961 பெப்ரவரி 20இல் ஆரம்பமான அந்த ஒத்துழையாமை இயக்கம் சுமார் 3 மாத காலம் நீடித்தது. பல்லாயிரம் தமிழர் கள் வீதிக்கு இறங்கித் தமது கொதிப்புணர்வை ஒன்று சேர்த்து வெளிப்படுத்தினர். வடக்கு, கிழக்கில் அரச இயந் திரம் முற்றாகச் செயலிழந்து, ஸ்தம்பித்து, முடங்கியது. தமிழர் தாயகத்தின் சகல பகுதிகளிலும் அரசின் ஆணை ஆற்றலிழந்தது.  வரலாறு காணாத அந்த மாபெரும் அற வழிப்போராட்டம்  ஆயுத வழி  அடக்குமுறை மூலம் முறியடிக்கப்பட்டது.

அதன் விளைவாகத்தான் தமிழர் தாயகத்தில் ஆயுதப் போராட்டம் பிறப்பெடுத்து முழு இலங்கைத் தீவுமே இரத்தத் தில் தோயும் அவலம் நேர்ந்தது.

தந்தை செல்வா தலைமையில் அந்த தமிழரசுத் தலை வர்கள் முன்னெடுத்த அந்த காந்தீய மார்க்க உணர் வெழுச் சியை இந்தத் தமிழரசுத் தலைவர்களால் அதே உயர்வில் வழிப்படுத்தி, நெறிப்படுத்த முடியுமா ? சந்தேகம்தான்.

ஆசிரியர் தலையங்கம்

‘காலைக்கதிர்’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *