Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அறிந்தோ அறியாமலோ நாமே சிதைத்துவரும் தமிழ் தேசிய கோட்பாடு

அறிந்தோ அறியாமலோ நாமே சிதைத்துவரும் தமிழ் தேசிய கோட்பாடு

லோ. விஜயநாதன்

மிக அண்மையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச நீதி வேண்டி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கட்சிபேதம் கடந்து வடக்கில் பூரண கதவடைப்புடன் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இங்கே நோக்கப்படவேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் வட-கிழக்கில் அதாவது தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக வடக்கில் மட்டும் கதவடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை ஆகும். இது நாமே எமது தாயகத்தின் ஒருபகுதியை கைவிடுவதாகவும் சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்துவரும் இனப்பிரச்சினை என்பது ‘வடக்கில் உள்ளவர்களுக்கான பிரச்சனை’ என்ற பிரச்சாரத்துக்கு எடுபடுவதாகவும் அமைகிறது. அதுவும் இப்போராட்டம் பகிஸ்கரித்தல் அதாவது மக்கள் தமது அன்றாட வேலைகளிலிருந்து விலகியிருத்தல் என்ற நிலையில் இலகுவில் எந்தவித அலைச்சலும் இல்லாமல் மாவட்டம், மாகாணம் கடந்து மக்கள் மேற்கொள்ளக் கூடிய ஒரு போராட்டமாகும். அப்படி இருந்தும் வடக்கு மாகாணத்தில் என்று மட்டும் இந்த போராட்டத்தை மட்டுப்படுத்தியமை பாராதூரமான ஒரு விடயம். அத்துடன் பல தசாப்தங்களாக கிழக்கு மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  இப்படி பல போராட்டங்கள், அபிவிருத்தி திட்டங்கள், அரசியல் கூட்டங்கள், கருத்தரங்குகள், ஊடக ஆக்கங்கள் என கடந்தகாலத்தில் நாம் எம்மை அறியாமல் எமது செயற்பாட்டின் மூலம் எமது தாயகத்தின் ஒரு பகுதியை புறந்தள்ளி செயற்பட்டுள்ளோம். தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றோம்.

சிறிலங்கா என்பது ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட அரசு. நாமும் ஒரு காலத்தில் நிறுவனப்படுத்தப்பட்ட அரசை கொண்டிருந்தவர்கள். அப்போது எமது செயற்பாடுகளை மூலோபாயரீதியில் நெறிப்படுத்த பலகட்டமைப்புக்கள் இருந்தன. இன்று எம்மிடம் கட்சி அரசியலைத் தாண்டி ஒன்றுமேயில்லை. அக்கட்சிகளுக்குள் கூட மூலோபாயரீதியில் சிந்தித்து நகர்த்தக்கூடிய தலைவர்கள் இல்லை. இருக்கும் ஒருசிலர் கூட அக்கட்சிக்குள் இருக்கும் மூளையற்றவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். இதுவே எமது தலைவிதியாக உள்ளது.

எமது போராட்டம் என்று வரும்போது அதை நெறிப்படுத்துவதில் கணிசமான பங்கை ஊடகங்கள் வழங்குகின்றன. இன்று அவ்வூடகங்களில் கூட எமது தாயகக் கோட்பாட்டை சரிவர புரிந்து எடுத்துச் சொல்வது குறைவாகவே காணப்படுகிறது. உதாரணத்திற்கு எமது எழுத்துக்களில் எமது தாயகம், தமிழர் தாயகம், வட-கிழக்கு, தமிழ் தேசம் என்று எமது தாயக பிரதேசத்தை குறிப்பிடுவதும், சிறிலங்கா தேசம் (வட-கிழக்கு தவிர்ந்த), சிறிலங்கா என்று சிங்கள தேசத்தை குறிப்பிடுவதும், ஒட்டுமொத்த பிரதேசத்தை (இரு தேசங்களை இணைத்து) இலங்கை என்று குறிப்படுவதும் சிங்கள தேச அரசை சிறிலங்கா அரசு என்று குறிப்பிட்டு எழுதுவதையும் கடைப்பிடிக்கலாம். இவ்வாரு நாம் எழுத்தில் சில விடயங்களை காண்பிக்கும்போது மக்களிடத்திலும் அந்த எண்ணக்கருக்கள் இலகுவாக கடத்தப்படும்.

இன்று சிறிலங்கா அரசு தமிழர் தாயகத்தை பலவழிகளில் ஆக்கிரமித்துக் கொண்டுவருவதுடன் சொற்களில், எழுத்துக்களில் கூட ஆக்கிரமிக்கின்றது. இதை வடக்கின் பிரச்சனை, வடக்கு மக்கள் இதைத்தான் கேட்கிறார்கள் , வடக்குக்கான அபிவிருத்தி அமைச்சு என்று அதன் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இன்று சிறிலங்கா அரசின் தத்துப்பிள்ளையாக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு இதை இன்னும் சிறப்பாக முன்னெடுத்து செல்கின்றது. அரசியல் தீர்வு என்ற மாயைக்குள் தமிழ் தேசியக் கோட்பாட்டை அழித்துவருகின்றவர்கள் இன்று அபிவிருத்தி திட்டங்கள் என்றவகையிலும் இதை மேற்கொள்கின்றனர். அதன் அண்மைய வெளிப்பாடே வடக்குக்கான 10 ஆண்டு அபிவிருத்தி திட்டம் (Framework for Northern Development Master Plan) என்ற ஒன்று இவர்களால் தயாரிக்கப்பட்டு சிறிலங்கா அரசிடம் வழங்கப்பட்டுள்ளமையமாகும். இவ்வாறான நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதன் ஊடாக கிழக்கு மக்களை வடக்கு தமிழ் தலைமைகளிடம் இருந்து அன்னியபப்டுத்தப்பட்டு அன்னியப்படவைத்து கிழக்கில் பிள்ளையான் போன்ற பொம்மைகளை கொண்டுவருவதனுடாக மக்கள் மனதிலிருந்தும் அந்த எண்ணக்கரு கலைக்கப்படுகிறது.

எம்மினத்தை அழித்த மகிந்த ராஜபக்ச கூட வட-கிழக்கு மக்களுக்கு 13++ என்றே கூறினார். ஆனால் நாம் வாக்குப்போட்டு அனுப்பிவைத்த எமது தலைமைகள் பதவிகளுக்கும் பகட்டுக்குமாக எம்மை அழிப்பதில் சிங்களத்துடன் கைகோர்த்துள்ளார்கள். வடக்கையும் கிழக்கையும் பிரித்து , சமஷ்டி கோட்பாட்டை கைவிட்டு, பௌத்தத்துக்கு முன்னுரிமை கொடுத்து ரணிலின் 13– ன் நிகழ்ச்சி திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றிவருகிறார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *