Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆடுகளம் படத் தொகுப்பாளர் கிஷோர் மரணம்

ஆடுகளம் படத் தொகுப்பாளர் கிஷோர் மரணம்
கடந்த வாரம் வெள்ளியன்று திடீரென மயங்கி விழுந்து சுயநினைவிழந்த இளம் படத் தொகுப்பாளர் கிஷோர், 6 நாட்களுக்குப் பிறகு இறந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

ஈரம், ஆடுகளம், பயணம், எங்கேயும் எப்போதும், காஞ்சனா, தோனி, ஆரோகணம், பரதேசி, எதிர்நீச்சல், வானவராயன் வல்லவராயன், உதயம் என்எச் 4, நெடுஞ்சாலை, உன் சமையலறையில் போன்ற படங்களுக்கு எடிட்டராகப் பணியாற்றியவர் கிஷோர். ஆடுகளம் படத்துக்காக சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதினைப் பெற்றிருந்த கிஷோர், கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிமாறனின் புதிய படமான “விசாரணை” இற்கான  படத்தொகுப்பு வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அன்று மாலை படத் தொகுப்பு நடந்த இடத்திலேயே திடீரென மயங்கி விழுந்தார். அவரை விஜயா மருத்துவமனையில் சேர்த்தனர்.

கிஷோரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் ஓர் இடத்தில் ரத்தம் கட்டியிருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி சிகிச்சையினை மேற்கொண்டிருக்கிறார்கள்.. அப்போது 24 மணி நேரத்தில் நினைவு திரும்பிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் நினைவு திரும்பாமல்  கோமா நிலையில் இருந்த கிஷோர் இன்று (6.3.2015) அன்று மரணம் அடைந்தார்.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயது நிரம்பிய கிஷோருக்கு அடுத்த மாதம் திருமணம் செய்ய பெற்றோர் திட்டமிட்டிருந்த நிலையில் அவர் மரணித்திருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உறுப்புகள் 5 பேருக்கு தானம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *