Search
Saturday 25 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆதித் தமிழினம் போற்றி வளர்த்த இசைக்கருவி ‘பறை’

ஆதித் தமிழினம் போற்றி வளர்த்த இசைக்கருவி ‘பறை’

மனிதன் நாகரிகமடையுமுன் காட்டில் வாழ்ந்துவந்தான். தனது உணவுத் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு இலை,குழை, காய், கனி தேன் போன்றவற்றுடன் காட்டு விலங்குகளையும் வேட்டையாடி உண்டு வந்தான். விலங்குகளின் தோலை ஆடையாக உடுத்திக் கொண்டதுடன், அதிலிருந்து தோற்கருவிகளை உண்டாக்கி இசையை அனுபவித்தும் செய்திகளைப் பரிமாறியும் வந்துள்ளான். மனிதன் தோற்கருவிகளை எப்போது பயன்படுத்த தொடங்கினான்? என்பதை சரியாக துணிய முடியாத போதிலும் மனிதகுலம் விலங்குகளை வேட்டையாட தெரியத்தொடங்கிய காலத்திலிருந்தே தோற்கருவிகளையும் பயன்படுத்த தெரிந்ததாக கொள்ளலாம்.

பழந்தமிழன் பல்வேறு தோற்கருவிகளை பயன்படுத்தி வந்தமைக்கு தொல்காப்பியத்திலும், இலக்கியங்களிலும், தேவராங்களிலும், பழந்தமிழ் இசைநூல்கள் மற்றும் கல்வெட்டுகள் போன்றவற்றிலும் ஆதாரம் உண்டு. அவ்வகையில் பழந் தமிழர் பயன்படுத்திய தோலிசை கருவிகளாக பெரும்பறை, சிறுபறை, பெருமுரசு, சிறுமுரசு, பேரிகை, கண்டிகை, சல்லிகை, கரடிகை ,படகம், பாடகம், இடக்கை உடுக்கை, மத்தளம், திமிலை தக்கை, தட்டை, கணப்பறை தமடூகம், தமருகம், தண்ணுமை, தடாரி அந்தரிமுழவு, முரசு, சந்திர வளையம், மொந்தை, பாகம், உபாங்கம், துடி, நாளிகைப்பறை, தமுக்கு ,உறுமி மேளம் , தம்பட்டம், நகரா, மண்மேளம், தவண்டை, ஐம்முக முழவம்(குடமுழவு), நிசாளம், துடுமை அடக்கம், தகுனிச்சம், தூம்பு, பேரிமத்தளம், கண்விடு துடுகை, உடல் உருட்டி, சன்னை அரைச்சட்டி, கொடுகொட்டி, அந்தலி ,அமுதகுண்டலி,அரிப்பறை, ஆகுளி, ஆமந்தரிகை, ஆவஞ்சி, உடல் உடுக்கை, எல்லரி ஏறங்கோள் கோதை, கண்தூம்பு, கல்லல் கிரிகட்டி,குண்டலம் சடடை ,செண்டா, தகுனித்தம், தடாரி பதவை, குளிர் கிணை, துடிபம்பை முதலியவை அறியப்பட்ட போதிலும் பறையும் முரசும் சங்ககாலம் தொடக்கம் தொடர்ச்சியாக பாவிக்கப் படுகின்றமைக்கான சான்றுகள் உள்ளன.

murasu mulavu kinai idakkai aaguli thudi thannumai parai

kudamula

பழந்தமிழ் இலக்கியங்களில் பறை

murasu-245x300பறையும் முரசும் இன்றைய காலத்தில் வடிவத்தால் வேறுபடுகின்ற போதிலும் பழந்தமிழ் இலக்கிய பாடல்களில் ஒன்றாகவும் வேறாகவும் கருத்தமைய குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. பறையானது செய்திகளை அறிவிப்பதற்கும், இசைக்கு தாள வாத்தியமாகவும், திருவிழாக்காலம் பண்டிகைகாலம் மற்றும் இறந்தவரின் இறுதிச் சடங்கின் போதும் உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. போர்க்காலங்களில் போருக்கு அறைகூறுவதற்கும் போர் வீரர்களை உற்சாகமூட்டும் பொருட்டும் போரின் வெற்றி தோல்விகளை அறிவிப்பதர்கும் முரசு பாவிக்கப் பட்டுள்ளது. பறை உபயோகிக்கப்பட்டதற்கான தகவல் பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்த்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தெய்வ முணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப

(தொல். அகத்திணையியல் – 18)

இங்கு தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, யாழ் ஆகிய பொருள்கள் சொல்லப்பட்டுள்ளன. பறையும் யாழும் இசைக் கருவிகள். தொல்காப்பியர் கூறுகின்ற யாழ் பண்ணிசையை இசைப்பதற்கும் பறை தாளத்தை கொட்டிக் கொடுக்கவும் உபயோகிக்கப்பட்டுள்ளன.தொல்காப்பியிரர் காலம் எதுவென்பது பற்றி வரலாற்று ஆரச்சியாளர்கள் மற்றும் தமிழரிஞறர்களிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்ற போதிலும் தமிழறிஞர் திரு. குணா என்பவர் அண்மையில் (2011) வெளிட்டுள்ள ‘தொல்காப்பியத்தின் காலம்’ என்ற நூலில் எட்டு முக்கியமான காரணிகளின் அடிப்படையில் அதன் காலம் கி.மு 7000 ஆண்டுகள் பழமையானது என நிறுவியுள்ளார். இதனடிப்படையில் பார்க்கும் போது பறைக்கு நீண்ட தொன்மையான வரலாறு உண்டென்பது புலனாகிறது.

சங்ககால பாடல்களில் (கி மு 300 – கி பி 200) ஐவகை நிலங்களுக்குரிய மக்களும் ஐவகையான யாழ்களையும் பறைகளையும் பயன்படுத்தியுள்ளமை தெளிவு படுத்தப்பட்டுள்ளது. குறிஞ்சி நிலத்தில் ( மலையும் மலை சார்ந்த நிலமும்) வாழ்ந்த மக்கள் குறிஞ்சி யாழும் தொண்டகப்பறை அல்லது வெறியாட்டுப் பறையையும், முல்லை நிலத்தில் ( காடும் காடு சார்ந்த நிலமும்) வாழ்ந்த மக்கள் முல்லை யாழும் ஏறுகோட்பறையையும், மருத நிலத்தில் ( வயலும் வயல் சார்ந்த நிலமும்) வாழ்ந்த மக்கள் மருத யாழும் மண்முழவையும், நெய்தல் நிலத்தில் ( கடலும் கடல் சார்ந்த நிலமும்) வாழ்ந்த மக்கள் விளரி யாழும் மீன்கோட் பறையையும், பாலை நிலத்தில் (வறண்ட நிலப்பரப்பு) வாழ்ந்த மக்கள் பாலையாழும் துடியையும் பயன்படுத்தினர்.

இது தவிரவும் சங்க காலப் பாடல்களில் அக்காலத்து மக்கள் பயன்படுதித்திய வெவ்வேறு வகையான பறைகளும் முரசங்களும் குறிப்பிடப் பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக;

“…..ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்,
சாரல் அருவிப் பய மலைக் கிழவன்,
ஓரி கொலோ? அல்லன்கொல்லோ?
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும்
மண் முழா அமைமின்; பண் யாழ் நிறுமின்;….” (புறநாநூறு 152)
இப் பாடலில் ஓரி எனும் மன்னனை வன்பரணர் போற்றிப்பாடும் போது மண்முழவை முழக்குமாறு குறிப்பிடுகின்றார்.
……மறைப் படை நுவலும் அரிகுரல் தண்ணுமை
இன்னிசை கேட்ட தன்னரு மறவர்….. (புறநாநூறு 270)
வீரர்களைப் போர்க்கழைக்கும் அரித்தெழும் ஓசையை உடைய ஒருவகைப் போர்ப்பறையின் இனிய ஓசையைக் கேட்ட, பகைவர்களால் நெருங்குதற்கரிய மறவர் என்று கழாத்தலையார் என்னும் புலவர் பாடுகின்றார். மற்றும் புறநாநூறு 67 வது பாடலில் “….உயர் நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ…”.என்பதில் குறும் பறை பற்றிய குறிப்பு வருகின்றது.

சங்ககாலத்துக்கு அடுத்துவரும் காலமாகிய சங்கமருவிய கால நூல்களிலும் வெவ்வேறு பெயர்களையுடைய பறைகளை அக்காலத்துக்குரிய மக்கள் பாவித்தமைக்கான சான்றுகள் உள்ளன. ஐம் பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகார வேட்டுவ வரியில் ஆறெறிப் பறை பற்றியும் , கடல் ஆடு காதையில் கொடுகொட்டி பறை பற்றியும் , சீவக சிந்தாமணியில் பம்பை மற்றும் அரிப்பறை பற்றிய செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவைதவிர பிற்கால நூல்களில் கல்லவடம் (தேவாரம்), வீராணம் ( திருப்புகழ்), உவகைப்பறை மற்றும் சாப்பறை (திவகர நிகண்டு), தக்கை மற்றும் தடாரி (பிங்கலநிகண்டு), படலை (சூடாமணி நிகண்டு) போன்ற பெயர்களையுடைய பறைகள் பாவிக்கப் பட்டுள்ளன.

Parai 1

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பறைகளைப் பார்க்கும் போது பறை என்ற பதம் ஆதித்தமிழரின் பெரும்பாலான தோற்கருவிகளுக்கு பாவிக்கப்பட்டுள்ள பொதுப் பெயர் என்பதை அறிந்து கொள்ளலாம். ஏன் அவ்வாறு பாவிக்கப்பட்டுள்ளது என ஆராய்ந்து பார்ப்பின் “பறை” என்ற சொல் “பேசு” என பண்டைய தமிழில் பொருள்படும். பறைதல் என்றால் சொல்லுதல் ஆகும். புறநாநூறு 4 வது பாடலில் “….களங்கொளக் கழல்பறைந்தன…” என்பதிலிருந்து பறையின் சொற்பயன்பாட்டை ஊகித்தறியலாம். பறைதல் என்ற சொற்பதம் இன்றும் யாழ்ப்பாணத் தமிழிலும் மலையாளத்திலும் சொல்லுதல் என்பதைக் குறிக்க பாவிக்கப்பட்டு வருகின்றது. பேசுவதை இசைக்க வல்ல தாளக் கருவி ஆதலால் ‘பறை’எனப்பட்டது.

ஆதித்தமிழனின் அன்றாட வாழ்வோடு ( ஆடல் பாடல்களில், வழிபாடு, போர், களத்துமேடு, மற்றும் இறுதிச்சடங்கு போன்றவற்றில்) ஒன்றாகக் கலந்த பறை பிற்பட்ட காலங்களில் (கி.பி 8ம் 9ம் நூற்றாண்டுக்ளுக்குப் பின்னர் ) தமிழகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டை கொண்டுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இதற்கு முக்கிய காரணியாக ஆரியத் தாக்கத்தால் கொண்டுவரப்பட்ட வர்க்க பேதமும் வடமொழி ஆதிக்கதால் திணிக்கப்பட்ட வடநாட்டு இசைக்கருவிகளின் பயன்பாடும் ஆகும். எடுத்துக் காட்டாக தமிழனின் யாழ் என்ற இசைக் கருவி மறைந்து வடநாட்டு இசைக்கருவியாகிய வீணை பயன்பட்டுக்கு வந்ததும் ஆதித்தமிழனுடைய மதங்கம் (தண்ணுமை) என்ற ஒருவகை தோற்கருவி மிருதங்கம் என்ற வடமொழிப் பெயராக மருவிச் சென்றுள்ளதும் வடநாட்டு இசையாகிய இந்துஸ்தானி சங்கீதத்தில் பக்க வாத்தியமாக பாவிக்கப்பட்டு வரும் தோற்கருவியாகிய தபேலா கர்நாடக சங்கீத்திலும் பக்க வாத்தியமாக வந்து புகுந்து கொண்டதும் தமிழனின் பறை குறிப்பிட்ட ஒரு சாதியினரின் இசைக்கருவியாக மாற்றப்பட்டு காலப் போக்கில் அது ஆகம விதிப்படி அமைந்துள்ள பெரும்பாலான கோவில்களில் இசைக்கப் படாததும் அத்தோற் கருவியை இசைப்பவர்களை தீண்டத் தகாதவர்களகவும், ஒருவரின் இறுதிச் சடங்கின் போதே பறை முழக்குவது பொதுவான மரபாகவும் திணிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தில் பறை

parai Baticaloaஈழத்தில் பறை என்று அழைக்கப்படும் தோற்கருவிகளில் இரண்டுவகையான பறைகள் மட்டுமே தற்போது பாவனையில் உள்ளன. இருபுறமும் ஒரேமாதிரியான அமைப்பையுடைய பறை பெரிய பறைமேளம் எனவும் ஒருபுறம் மட்டும் அகன்று முரசு போன்ற அமைவையுடைய சிறியபறை துந்துடிமேளம் எனவும் அழைக்கப்படுகிறது. இவை இரண்டும் சேர்ந்தது ஒரு குட்டை மேளங்கள் எனப்படுகிறது. வன்னி மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் பறைமேளம் இசைப்பவர்களால் பறைமேள கூத்து எனும் ஒருவகை கலை ஆடப்படுகிறது. இக் கூத்துக் கலையின் தனித்துவம் என்னவெனில் பாடல்கள், இதர வாத்தியங்கள் எதுவும் அற்று தனியே பறையடிப்பவர்கள் இரு பிரிவாக எதிர் எதிராக நின்று தாம் வாசிக்கும் கருப்பொருள் மற்றும் மற்றைய பகுதியினரின் உணர்வு வெளிப்பாடுகளுக்கு ஏற்ப உடலசைவுடன் தமது பறைகளை அடிப்பதாகும். இதில் 18 விதமான மேள வாசிப்புக்கள் உள்ளன.

ஈழத்திலும் பறைமேளம் இறுதிச் சடங்குகளின் போதே பரவலாக இசைக்கப்படுகின்ற போதிலும் ஆகம விதிப்படி அமைந்த சில பிரபல்யமான ஆலயங்களிலும் ஆகம விதிப்படி அமையாத ஆலயங்களிலும் இசைக்கப்பட்டு வருகின்றது. அவ்வறான ஆலயங்களாக வற்றாப்பளை, பன்றித்தலைச்சி, கச்சாய், சுட்டிபுரம்,பொறிக்கடவை போன்ற கண்ணகை அம்மன் ஆலயங்களிலும் செல்வச்சந்நிதி, கதிர்காமம் கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆகிய ஆலயங்களையும் குறிப்பிடலாம்.

சிங்கள மக்களின் வாழ்வியலில் ஆதித்தமிழரின் தோற்கருவி

Keta bera

தமிழகத்தைப் போலவே ஈழத்திலும் வர்க்க வேற்றுமையால் பறைக்கான முக்கியத்துவம் குன்றிச்செல்ல சிங்கள மக்களின் வாழ்வியலில் ஆதித்தமிழரின் தோற்கருவி முக்கியத்துவம் பெற்றுள்ளதை காண முடிகிறது. சிங்கள மக்கள் பயன்படுத்தும் பறைகள் தமிழரிடம் இருந்தே சென்றுள்ளது என்பதை அவர்களிடம் பாவனையிலுள்ள பறைகளின் பெயர்களிலிருந்து அறியலாம். பறை என்பது பெற (Bera) என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. இச்சொல் தமிழ்ச் சொல்லாகிய பறையின் திரிபு என்பது தெளிவு. சிங்களவர்களிடமுள்ள தோல்கருவிகளில் கட்ட பெற (Geta Bera), யக்பெற (Yak Bera) என்பன பறையினவகைகளாகவும், தவுள (Davula- தவில்), தம்மட்டம (Thammattama தம்பட்டம்), உடிக்கிய ( Udakkiya உடுக்கை) என்பன தமிழரின் ஏனைய தோற்கருவிகளாகவும் அடையாளம் காணமுடியும்.

ஆதித் தமிழினம் போற்றி வளர்த்த ஒரு இசைக்கருவி எவ்வாறு சாதிய காலச்சாரத்தாலும் மனமாறுபாட்டாலும் கால ஓட்டத்தில் அதன் பெருமை இழந்து பயன்பாட்டிலிருந்து அருகி வருகின்றது என்பது இக்கட்டுரையிலிருந்து கண்கூடாகிறது. இக்கருவியை பேணி பாதுகாப்பதும் அதன் இழந்த பெருமையை மீண்டும் சீர் தூக்கி நிறுத்தி எமது அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்த்துச்செல்வது உலகத்தமிழர் ஒவ்வொருவரினதும் தலையாய கடமை ஆகும்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *